நமது நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லவிருக்கின்ற நமது இளைஞர்கள்தான் நமது பெருமைக்கு உரியவர்கள். எந்தவிதமான இடையூறையோ அல்லது நோயினையோ அவர்கள் சந்திக்க நேரும்போது நமது இளைஞர்களுக்கு உதவ வேண்டியது நமது முழுமுதல் கடமை ஆகும்.
பூனே நகரைச் சேர்ந்த ஏழு வயதே ஆன வைஷாலி வசதிக் குறைவான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதயத்தில் ஏற்பட்ட ஓட்டை ஒன்றின் விளைவாக அவள் பாதிக்கப்பட்டிருந்தாள். இத்தனை ஆண்டுகளாக எத்தகைய துன்பத்தை அவள் சந்திக்க வேண்டியிருந்திருக்கும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்!
தனது இதய நோய்க்கு சிகிச்சைக்கான நிதி உதவி கோரி பிரதமருக்கு அந்த இளம் சிறுமி வைஷாலி கடிதம் எழுத முடிவு செய்தபோது, பிரதமர் அவளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி ஒரு நாள் நேரடியாக அவளை சந்தித்தும் உற்சாகப்படுத்துவார் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
பிரதமருக்கு வைஷாலி எழுதிய இரண்டு பக்கக் கடிதம் உணர்ச்சி ததும்பிய கோரிக்கையாக இருந்தது. தன்னை அவரது மகளாகக் கருதி உதவி செய்யுமாறும், போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க உதவுமாறும் அவள் அந்தக் கடிதத்தில் கோரியிருந்தாள்.
அந்தக் கடிதத்தைப் பார்த்து விட்டு, வைஷாலியை அடையாளம் கண்டு முறையான மருத்துவ சோதனை நடத்தி, அவளுக்கு இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்த சிகிச்சை நடந்து முடிந்து நலம்பெற்றவுடன் வைஷாலி மீண்டும் உணர்ச்சிகரமான கடிதமொன்றை பிரதமருக்கு எழுதினாள். இம்முறை கடிதத்தோடு சித்திரம் ஒன்றையும் வரைந்து அனுப்பியிருந்தாள். இந்தக் கடிதத்திற்கும் பிரதமர் பதில் அனுப்பியிருந்தார்.
பின்பு 2016 ஜூன் 25 அன்று பூனே நகருக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டபோது இளம் சிறுமி வைஷாலியையும் அவளது குடும்பத்தினரையும் அவர் தனியாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு என்றும் தன் நினைவில் பதிந்திருக்கும் என்று திரு. மோடி குறிப்பிட்டார்.
வைஷாலியைப் பற்றிய இந்தச் சம்பவம் ஒரேயொரு உதாரணம்தான். இதுபோன்ற எண்ணற்ற கடிதங்கள் பிரதமருக்கு எழுதப்பட்டு அவரது அலுவலகத்தை வந்தடைகின்றன. இந்தக் கடிதங்களில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளை கவனிக்கவும், இந்திய குடிமக்கள் எவ்வித துன்பத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் அனைத்து விதமான முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்படுகின்றன.