நமது விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு, வேளாண்மைத் துறையில் முன்னெப்போதும் இல்லாத கவனம் செலுத்தி வருகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு, விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு மற்றும் அவர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கு மற்றும் ஒட்டுமொத்தமாக அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு பல வழிகளில் உதவிகரமாக இருந்து வருகின்றன; எளிதில் உரங்கள் கிடைப்பதில் இருந்து, பாசன வசதிகளை மேம்படுத்துதல் வரையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து எளிதாக கடன் பெறுவது வரையில், அறிவியல் உதவியில் இருந்து அவர்களின் உற்பத்திப் பொருளுக்கு நல்ல விலை கிடைப்பது வரை பல வகையில் உதவிகரமாக உள்ளன. பன்முக தலையீடுகள் மூலம் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் அழைப்பு விடுத்துள்ளார்.
2014 - 15 மற்றும் 2015 - 16 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து வறட்சியை சந்தித்தது இந்தியா. இருந்தபோதிலும் இந்திய விவசாயிகளின் உறுதியால், வேளாண்மை உற்பத்தி நிலையானதாக இருந்தது. அவற்றை வழங்குவதும் பண வீக்கமும் நிலையாக இருந்தன. 2015 - 16ல் மொத்த உணவு தானிய உற்பத்தி 252.23 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டது. 2014-15ல் அது 252.02 மில்லியன் டன்களாக இருந்தது. வேளாண்மை அமைச்சகமானது வேளாண்மை & விவசாயிகள் நலன் அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விவசாயிகளை முதலாவதாக நிறுத்தும் வகையிலான தொலைநோக்கில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டதை இது பிரதிபலிக்கிறது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கான ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி ரூ.35,984 கோடியாக ஒதுக்கப்பட்டது.
வேளாண்மைக்கு அதிகமான கணித்தல் திறன், உற்பத்தி, லாபம் தேவை என்பதை அரசு உணர்ந்துள்ளது. இந்த சுழற்சியில் முழுமையாக விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பன்முகத் தன்மை கொண்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைக் கொண்டு வந்துள்ளது.
விதைப்புக்கு முந்தையது :
- சரியான தேர்வுக்கு விவசாயிகளுக்கு உதவுவதற்காக மண் வள அட்டை.
அரசு 1.84 கோடி மண் வள அட்டைகளை விநியோகித்துள்ளது. விவசாய நில உரிமையாளர்கள் 14 கோடி பேரின் நிலங்களையும் சோதனை செய்து & அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டை வழங்குவது நோக்கமாகும்.
2.உரங்கள்:
உரங்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பது, கடந்த கால வரலாறாகிவிட்டது. விவசாயிகளுக்கு எளிதில் உரங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்கிறது. உரங்களின் விலைகளும் கணிசமாகக் குறைக்கப் பட்டுள்ளன. 100% வேம்பு பூச்சுள்ள யூரியா நாட்டில் கிடைக்கிறது. உரம் பயன்பாட்டு செயல்திறனை 10 முதல் 15 சதவீதம் வரை இது அதிகரிக்கும். அதன்மூலம் யூரியா உரம் பயன்பாடு குறையும்.
3.நிதி:
விவசாயிகள் கடன்களுக்கு வட்டி தள்ளுபடிக்காக அரசு ரூ.18,276 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் குறுகிய கால பயிர்க் கடன்களுக்கு 4%, அறுவடைக்குப் பிந்தைய கடன்களுக்கு 7%, இயற்கை பேரிடர் நேர்ந்தால் 7% என்ற வட்டி மட்டுமே செலுத்துவது உறுதி செய்யப்படும். மார்க்கெட் வட்டி விகிதம் 9% ஆக உள்ள நிலையில் இந்தச் சலுகைகள் கிடைக்கின்றன.
விதைக்கும் போது :
1.பாசன வசதிகள்
பிரதமரின் கிரிஸி சின்சாய் திட்டம் ஒற்றை இலக்குள்ள திட்டமாக அமல் செய்யப்பட்டு & 28.5 லட்சம் ஹெக்டர் நிலங்கள் பாசன வசதியின் கீழ் கொண்டு வரப்படும். AIBP-யின் கீழ் நீண்டகாலமாக காத்திருக்கும் 89 பாசன வசதித் திட்டங்களின் அமலாக்கம் துரிதப்படுத்தப்படும். நபார்டு (NABARD) மூலம் நீண்டகால பாசனத் திட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது. தொடக்க நிதியாக இதற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. மழை கிடைக்கும் பகுதிகளில் 5 லட்சம் விவசாயக் குளங்கள் மற்றும் கிணறுகள் தோண்டுதல் மற்றும் இயற்கை உரம் உற்பத்திக்காக 10 லட்சம் மக்கும் குழிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (MGNREGA) கீழ் அமைக்கப்படும்.
2.ஆதரவு & வழிகாட்டுதல்
கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அறிவியல் ஆலோசனைகள் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளன.
விதைப்புக்குப் பிறகு :
1.பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத அளவு குறைந்த பிரீமியத்தில் வந்துள்ளது. ஒரு பருவத்துக்கு ஒரு கட்டணம் என்று இத் திட்டம் உள்ளது. அதாவது - கரீப் பயிர்களுக்கு : 2%, ரபி பயிர்களுக்கு : 1.5%, தோட்டக்கலை பயிர்களுக்கு : 5. பிரீமியம் கட்டணத்துக்கு வரம்பு எதுவும் இல்லை & காப்பீடு செய்யும் தொகை குறைக்கப்படாது. எனவே விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பு உறுதி செய்யப் படுகிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, காப்பீட்டுத் திட்டத்தில் 20% விவசாயிகள் மட்டுமே இதுவரை பயன்பெற்று வந்தனர். பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 50% பயன்பெற வேண்டும் என்பது இலக்காக உள்ளது.
2.e-NAM
மாநில அரசுகள் தங்களின் வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறைகளின்படி வேளாண்மை சந்தையை நிர்வகிக்கின்றன. இதன் கீழ் மாநிலம் ஏராளமான சந்தைப் பகுதிகளாக பிரிக்கப் படுகிறது. இவ்வாறு சிறிய பகுதிகளாக பிரிக்கப்படுவதால், வேளாண்மைப் பொருள்கள் ஒரு சந்தைப் பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்வது தடைபடுகிறது. அதனால் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்காமல், நுகர்வோருக்கு விலைகள் அதிகரித்துவிடுகிறது. இந்தச் சவால்களுக்கு e-NAM எனப்படும் இ-வேளாண்மை சந்தை முறை தீர்வு காண்கிறது. மாநில மற்றும் தேசிய அளவில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஒன்றுபட்ட ஒரு தளத்தை இது உருவாக்குகிறது. ஒருங்கிணைந்த சந்தைகளில் சீரான சூழ்நிலை, நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை இதில் இருப்பதால் வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையில் தகவல் இடைவெளி நீக்கப்பட்டு, அப்போதுள்ள தேவை மற்றும் சப்ளை அடிப்படையில் விலை விவரத்தை அறிந்து கொள்ள முடியும். ஏல நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். விவசாயிக்கு தேசிய அளவிலான சந்தையை அணுகும் வசதி கிடைக்கும். தனது பொருளின் தரத்துக்கு ஏற்ற விலை கிடைக்கும். ஆன்லைனில் பணம் பெறலாம். நுகர்வோருக்கு தரமான பொருள் மிகுந்த நியாயமான விலையில் கிடைக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகள் மட்டுமின்றி, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு பலநோக்கு அணுமுறையும் பின்பற்றப்படுகிறது. மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பொருள்கள் போன்ற விவசாயம் சார்ந்த செயல்பாடுகள் மூலமும் வேளாண்மை வருமானத்தை அதிகரிக்க ஆதரவு அளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. பசுதான சஞ்சீவனி', `நகுல் ஸ்வாத்யா பத்திரம்', `இ-பசுதான ஹாட்' - மற்றும் உள்நாட்டு இனங்களின் பெருக்கத்துக்கு தேசிய ஜெனோமிக் மையம் போன்ற நான்கு பால் பொருள் திட்டங்களுக்கு ரூ.850 கோடி ஒதுக்கப்படுகிறது. உள்நாட்டு பசு இனங்களை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் தொடங்கப் பட்டுள்ளது. 2013-14ல் 95.72 லட்சம் டன்களாக இருந்த மீன் உற்பத்தி 2014-15ல் 101.64 லட்சம்டன்களாக அதிகரித்துள்ளது. 2015-16ல் மீன் உற்பத்தி 107.9 லட்சம் டன்களாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. நீலப் புரட்சித் திட்டத்தின் கீழ் மீன்படி தடை / குறைந்த மீன்பிடி உள்ள மூன்று மாத காலத்துக்கான `சேமிப்புடன் இணைந்த நிவாரணம்', மாதத்துக்கு ரூ.1500 என அதிகரிக்கப் பட்டுள்ளது.
அரசு அளிக்கும் நிவாரணமும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2010 - 15 ஆண்டுகளில் மாநில பேரிடர் உதவி நிதிக்கு ரூ.33580.93 கோடி ஒதுக்கப்பட்டது. 2015-2020 காலத்துக்கு இது ரூ.61220 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. 2010-14 க்கு இடைப்பட்ட காலத்தில் வறட்சி மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.12516.20 கோடி மட்டுமே நிவாரணமாக வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் வறட்சி மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணமாக ரூ.9017.998 கோடிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2015-16ல் இதுவரை ஏற்கெனவே ரூ.13496.57 கோடிக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.