2014-ம் ஆண்டு மே மாதத்தில் திரு.நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஆட்சிக்கு வரும் வரை, பல லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆன நிலையில், நமது நாட்டு மக்களில் பல லட்சம் பேர், நிதிசார்ந்த பணிகளில் சேர்க்கப்படவில்லை
நிதி நடவடிக்கைகளில் அனைத்து மக்களையும் சேர்ப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், மக்கள் நிதி திட்டம் (Jan DhanYojana) தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. மிகவும் குறுகிய காலமான, 2 ஆண்டுகளில் 23.93 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்த வங்கிக் கணக்குகளில் ரூ.41,789 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும். இந்த வங்கிக் கணக்குகளில், பல லட்சக்கணக்கான மக்கள் பணம் சேமிப்பதால், அவர்களது வாழ்க்கை நிலை மேம்படும். அதிக வட்டிக்கு கடன் பெற்று அவதிப்பட்டுவரும், லட்சக்கணக்கான மக்களுக்கு வங்கிகளில் கடன் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மக்கள் நிதி வங்கிக்கணக்குகளில் சேமிப்பைவிட கூடுதலாக பணம் எடுத்துக் கொள்வது (over draft), காப்பீடு உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. மக்கள் நிதித் திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகளில் சேமிப்பே இல்லை (zero balance accounts) என்று தொடக்கத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், ஒட்டுமொத்த வங்கிக்கணக்குகளில் சேமிப்பே இல்லாத வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது, பெரும்பாலான மக்கள், தங்களது கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மக்கள் நிதி கணக்குகள் வேகமாக தொடங்கப்பட்டு வருவதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜாம் டிரினிட்டி (JAM trinity என்பது மக்கள் நிதி கணக்கு, ஆதார், செல்போன் இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது) என்ற கனவு நனவாகி வருகிறது. ஆதார் பதிவுகளை அரசு அதிவேகமாக செயல்படுத்தி வருகிறது. மே 30, 2014 வரை 65 கோடி ஆதார் எண்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அரசு மேலும் 35 கோடி ஆதார் எண்களை வழங்கியுள்ளது. தற்போது, 105 கோடி இந்தியர்கள் ஆதார் அட்டையை வைத்துள்ளனர். தற்போதைய நிலையில், ஒவ்வொரு இந்தியரும் செல்போன் வைத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. மானியங்கள் அல்லது அரசின் பிற பலன்களை மக்களுக்கு அரசு வழங்குவதற்கான ஒட்டுமொத்த கட்டமைப்பு உருவாகியுள்ளது. இதன்மூலம், தற்போது, சரியான நபர்களை தேர்வுசெய்வதுடன், அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை எந்தவொரு இடைத்தரகர் அல்லது தாமதம் இல்லாமல் வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேரடி மானியத் திட்டத்தை அரசு தற்போது செயல்படுத்தி, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயை நேரடியாக செலுத்தி வருகிறது. இது பணம் வேறு நபர்களுக்கு செல்வதை தடுப்பதோடு, முழுத் தொகையையும் மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளில் சேமிப்பு ஏற்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் 31 கோடி பயனாளிகளுக்கு ரூ.61,822 கோடி நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேரடி மானியத் திட்டத்தின் கீழ், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், போலி பயனாளர்கள் மற்றும் பணத்தை வேறு நபர்கள் எடுப்பது போன்ற குளறுபடிகள் நீக்கப்பட்டு, ரூ.36,500 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நமது பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்களிப்பை செய்கின்றன. ஆனால், இவற்றில் மிகவும் குறைந்த அளவிலான நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கிறது. மற்ற நிறுவனங்களுக்கு, கந்துவட்டிக்காரர்களிடமிருந்து கடன் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சிறு தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், முத்ரா திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடங்கியுள்ளது. இதன்மூலம், குறைந்த வட்டியிலும், எந்தவொரு அடமானப் பொருளும் இல்லாமலும், விருப்பத்துக்கு ஏற்பவும் சிறு தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கிறது. 2015-16-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.1,22,188 கோடியைவிட கூடுதலாக, அதாவது, ரூ.1,32,954.73 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3.48 கோடி தொழில் முனைவோருக்கு நிதி கிடைத்துள்ளது. இவர்களில் 1.25 கோடி பேர், புதிய தொழில் முனைவோர். இவர்களுக்கு ரூ.58,908 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பயனாளிகளில் 79% பேர் பெண்கள். இவர்களுக்கு ரூ.63,190 கோடி கடன் கிடைத்துள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ், 2016-17-ம் ஆண்டில் கடன் வழங்குவதற்கான இலக்கு, முந்தைய ஆண்டைவிட 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.1,80,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மேற்கண்ட முயற்சிகள் மூலம், இந்தியர்களின் வாழ்க்கை நிலையில் முழு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதவர்களுக்கு பல்வேறு அம்சங்களுடன் வங்கிக்கணக்குகள் கிடைக்கின்றன. எளிதான, அடமானம் இல்லாத கடன் ஆகியவற்றின் மூலம் மே 2014 முதலே இந்தியாவின் ஏழை நிலை மாறியுள்ளது. மானியங்கள் மற்றும் பலன்கள் இடைத்தரகர்களின் பிடியில் இருக்காது. அல்லது அரசு அலுவலகத்துக்கு பல முறை செல்ல வேண்டிய நிலையும் இருக்காது. நேரடி மானியத் திட்டம் மற்றும் ஜாம் (JAM) மூலம், பலன்களை பயனாளிகளுக்கு அளிப்பது என்பது எளிமையான, திறமையான மற்றும் வெளிப்படையானதாக மாறியுள்ளது.