2014 மே 26ஆம் தேதியன்று திரு. நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, இந்திய அரசு உலக நாடுகளுடன் தீவிரமாக இணைந்து செயல்படுவது அதே நேரத்தில் இந்தியாவிற்கு வந்து முதலீடு செய்ய உலக நாடுகளை அழைப்பது என்பதில் நம்பிக்கையுள்ள வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றி வந்தது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அப்போதிருந்த நட்பு நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொண்டது மட்டுமின்றி வேறு பல நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்தியா உருவாக்கிக் கொண்டது
2014 மே 26ஆம் தேதியன்று பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்கின்றனர். மேடையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அமர்ந்துள்ளனர். அதிபர் கர்சாய் (ஆப்கானிஸ்தான்), பிரதமர் டோப்கே (பூட்டான்), அதிபர் யாமீன் (மாலத்தீவுகள்), பிரதமர் கொய்ரலா (நேபாளம்), பிரதமர் நவாஸ் ஷரீஃப் (பாகிஸ்தான்), அதிபர் ராஜபக்ச (இலங்கை) ஆகியோர் இதில் அடங்குவர். பிரதமர் ஷேக் ஹசீனா ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஜப்பான் பயணத்தில் இருந்ததால் வங்க தேசத்தின் சார்பில் வங்க தேச நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர் இதில் பங்கேற்றார். பதவியேற்பிற்கு அடுத்த நாள் இந்தத் தலைவர்களுடன் பிரதமர் இருநாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரிவான வகையில் நடத்தினார்.
வலுவான சார்க் அமைப்பிற்கான திரு. மோடியின் தொலைநோக்கு, உறுதிப்பாடு ஆகியவை தொடர்ந்து வெளிப்பட்டன.பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு வெளியே பிரதமராக அவர் பயணம் செய்த முதல் நாடு பூட்டான் ஆகும். பூட்டான் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியதோடு, இந்திய-பூட்டான் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பல ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்தாயின. 2014ஆம் ஆண்டில் இருதரப்பு பயணத்தின் அடிப்படையில் நேபாளத்திற்கு பயணம் செய்த முதல் பிரதமராகவும் அவர் இருந்தார். இந்திய- நேபாள உறவுகளை வலுப்படுத்துவதில் அங்கும் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது. இந்திய- இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் வகையில் 2015 மார்ச் மாதத்தில் பிரதமர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். 2015 ஜனவரியில் இலங்கை மைத்ரிபாலா சிரிசேனா அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்த ஒரு மாதத்திற்குப் பிறகு பிரதமரின் இந்தப் பயணம் நிகழ்ந்தது. 2015 செப்டெம்பரில் இலங்கைப் பிரதமர் ராணில் விக்ரம்சிங்கே இந்தியாவிற்கு வருகை தந்தார்.
2015 ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வங்க தேச பயணத்தின்போது இரு நாடுகளும் நில எல்லை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் வங்க தேசத்துடனான இந்திய உறவுகளில் வரலாற்றுரீதியான சாதனை நிகழ்த்தப்பட்டது. தொடர்புகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே பேருந்து போக்குவரத்து துவங்கப்பட்டது. 2016 ஏப்ரலில் மாலத்தீவுகளின் அதிபர் யாமீனை பிரதமர் வரவேற்றார். இந்திய- மாலத்தீவுகள் உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
பிரதமர் பொறுப்பை ஏற்றபிறகு முக்கியமான பல உச்சிமாநாடுகளிலும் பிரதமர் பங்கேற்றார். 2014 ஜூலையில் பிரேசில் நாட்டின் ஃபோர்ட்டலேசாவில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். பிரிக்ஸ் நாடுகள் முன்னேறிச் செல்வதற்கான பாதையை வகுக்கும் வகையில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்தார். மிகப்பெரும் வளர்ச்சியாக, பிரிக்ஸ் அமைப்பிற்கான வங்கி உருவாக்கப்பட்டது. இதன் தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு அளிக்கப்பட்டது.
2014 செப்டெம்பரில் பிரதமர் ஐ.நா. சபையின் பொதுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றினார். தனது உரையில் உலகத்திற்கு இந்தியா எவ்வகையில் பங்களிக்க முடியும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். உலகளாவிய அமைதியின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்குமாறு அவர் உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்தார். 2014 டிசம்பரில் இது வடிவம் பெற்று 177 நாடுகள் ஒன்றுகூடி ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்க தீர்மானம் ஒன்றை நிறைவேற்றின.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ் ஜி20 குழுவுடனான உறவுகள் மேலும் வலுவடைந்தன. 2014இல் ஆஸ்திரேலியாவிலும், 2015இல் துருக்கியிலும் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடுகளில் பிரதமர் பங்கேற்றார். பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் கருப்புப் பணத்தை மீட்டெடுப்பது குறித்து வலியுறுத்தியதோடு, கருப்புப் பணம் உருவாக்கக் கூடிய தீமைகளையும் அவர் வலுவோடு சுட்டிக் காட்டினார். உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளில் பிரதமரின் இந்தத் தலையீடு மிக முக்கியமானதாக இருந்ததோடு, இந்த விஷயத்தில் அரசு அளித்தும் முக்கியத்துவத்தையும் அது எடுத்துக் காட்டியது.
ஆசியான் அமைப்புடனான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 2014இல் மயன்மாரிலும், 2015இல் கோலாலம்பூரிலும் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆசியக் கண்டத்தின் முக்கிய தலைவர்களையும் அவர் இத்தருணத்தில் சந்தித்துப் பேசினார். அவர் சந்தித்த அனைத்து தலைவர்களுமே அரசின் ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற திட்டம் குறித்து மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
2015 நவம்பரில் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக உலகத்தின் முக்கிய தலைவர்கள் கூடிய காப் 21 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் பருவநிலைக்கான நீதி மற்றும் தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதன் தேவையையும் திரு. மோடி வலியுறுத்தினார். வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்திய அவர், இத்தருணத்திற்கேற்ப உலகம் விழித்தெழுந்து நமது பூமிக் கோளத்தைக் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த காப்21 உச்சிமாநாட்டில் அபரிமிதமான சூரிய ஒளியைப் பெறும் பல்வேறு நாடுகளும் ஒன்றிணையும் வகையிலான சர்வதேச சூரிய ஒளி கூட்டணியை பிரதமர் மோடியும் (பிரான்ஸ்)அதிபர் ஹொலண்டேவும் அறிமுகம் செய்தனர். பசுமையான பூமிக் கோளத்தை உருவாக்குவதற்கான தீவிர முயற்சியாக இந்தக் கூட்டணி இருக்கும். 2016 மார்ச் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நடத்திய அணுசக்தி பாதுகாப்பிற்கான உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்று அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அமைதி குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
உலகத்தின் ஒவ்வொரு பகுதி குறித்தும் திரு. மோடி ஆழமான கவனத்தைச் செலுத்தினார். 2015 மார்ச் மாதத்தில் அவர் மேற்கொண்ட செஷல்ஸ், மொரிஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் இந்தியப் பெருங்கடலை மையமாக்க் கொண்டதாக அமைந்திருந்தது. செஷல்சில் இந்தியாவின் உதவியுடன் நிறுவப்பட்டிருந்த கடற்கரையோர முன்னறிவிப்பு (ராடார்) திட்டத்தை பிரதமர் துவங்கி வைத்தார். இந்திய- மொரிஷியஸ் ஒத்துழைப்பின் மற்றொரு அடையாளமாக விளங்கும் பராகுடாவை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
2015 ஏப்ரலில் பிரதமர் ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகியவற்றுடன் மேலும் சிறந்த ஒத்துழைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பிரான்சில் சாதனையாக அணு சக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜெர்மனியில் பிரதமரும் அதிபர் மார்க்கெலும் இணைந்து ஹனோவர் மெஸ்ஸியை துவக்கி வைத்தனர். ரயில்வே துறையை நவீனப்படுத்துவதை நேரடியாகக் கண்டறியும் வகையில் பெர்லின் ரயில் நிலையத்திற்கும் அவர் சென்று வந்தார். திறன் மேம்பாடு என்பதும் ஜெர்மனியில் அவர் கவனம் செலுத்திய துறையாக இருந்தது. கனடாவில் பொருளாதார உறவுகள், மின்சக்தி, கலாச்சார உறவுகள் ஆகியவை கவனம் பெற்றவையாக இருந்தன. 42 ஆண்டுகளில் முதன் முறையாக கனடாவிற்கென தனியாக இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொண்டவர் என்ற வகையில் அவரது கனடா பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான முக்கியமான முயற்சிகளையும் பிரதமர் மேற்கொண்டார். 2014 ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பான் நாட்டிற்கு அவர் முக்கிய பயணம் மேற்கொண்டார். அப்போது தொழில்துறை, தொழில்நுட்பம், அரசின் அறிவுசார் நகரங்களுக்கான திட்டம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவாக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. 2015 மே மாதத்தில் பிரதமர் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு சியான் நகரத்தில் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனத் தலைநகரான பெய்ஜிங்கிற்கு வெளியே உலகத் தலைவர் ஒருவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும். மங்கோலியாவிற்கு அவர் பயணம் மேற்கொண்டார். மங்கோலியாவிற்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையையும் அவர் இதன் மூலம் பெற்றார். அவர் பயணம் மேற்கொண்ட மற்றொரு இடம் தென் கொரியா ஆகும். இங்கு முக்கியமான தொழில் அதிபர்களை அவர் சந்தித்தார். கப்பல் கட்டும் தளம் ஒன்றையும் பார்வையிட்டார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.
2015 ஜூலையில் உஸ்பெஸ்கிஸ்தான், கஸாக்ஸ்தான், துர்க்மீனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளுக்கு திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். இப்பகுதியுடன் இந்தியாவின் உறவுகளில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவருவதாக அவரது மத்திய ஆசிய பயணம் அமைந்தது. மின்சக்தி, கலாச்சார உறவுகள் ஆகியவற்றிலிருந்து துவங்கி ஆழமான பொருளாதார ஒத்துழைப்பு வரை இங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மிகவும் விரிவானதாக அமைந்திருந்தன.
மேற்காசியப் பகுதியுடன் இந்தியாவின் நீண்ட கால உறவுகளை அங்கீகரித்த வகையில் பிரதமர் அவற்றை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். 2016 மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அரசு முறையிலான உறவுகள் மற்றும் பொருளாதார உறவுகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் அவர் சவூதியின் முக்கிய தலைவர்களையும், தொழில் அதிபர்களையும் சந்தித்துப் பேசினார். குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அங்கிருந்த எல் அண்ட் டி நிறுவன தொழிலாளர்களின் முகாமிற்கும் திரு. மோடி சென்று அங்கு வேலை செய்து வருபவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார். அவர்களின் கடுமையான உழைப்பைப் பாராட்டியதோடு, அவர்களின் மனஉறுதியையும் புகழ்ந்துரைத்தார். 2015 ஆகஸ்ட் மாதத்தில் திரு. மோடி ஐக்கிய அரபுக் குடியரசுகளுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டார். இங்கு பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
முக்கியமான உலகத்தலைவர்களையும் இந்தியா வரவேற்றது. 2015 ஜனவரியில் குடியரசு தின அணிவகுப்பின் முக்கிய விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகை தந்தார். இந்திய-அமெரிக்க தொழிலதிபர்களிடையே பிரதமர் மோடி, அதிபர் ஒபாமா ஆகியோர் கூட்டாக உரையாற்றியதோடு, மிக விரிவான பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர். 2014 செப்டெம்பரில் பிரதமர் டோனி அப்பாட் இந்தியாவிற்கு வருகை தந்தார். அதே மாதத்தில் அதிபர் ஸி ஜின் பிங் இந்தியாவிற்கு வருகை தந்தார். பிரதமர் மோடி அவரை குஜராத் மாநிலத்தில் வரவேற்றார். 2014 டிசம்பரில் இந்தியாவிற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புடின் அவர்களின் பயணம் மிக முக்கியமானதாக அமைந்தது. அப்போது அணுசக்தி, வர்த்தக உறவுகள் ஆகியவை குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடுகளுடனும் திரு. மோடி தொடர்புகளை மேற்கொண்டார். 2014 நவம்பரில் ஃபிஜி நாட்டிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின்போது பசிபிக் பகுதியிலுள்ள அனைத்து தீவுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்தார். இப்பகுதியுடன் இந்தியாவின் உறவுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். அதே ஆண்டில் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடு ஒன்றில் கலந்து கொள்ள தில்லிக்கு வந்தனர். கடந்த ஓராண்டு காலத்தில் பிரதமர் அரபு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக எப்போதுமே இருந்து வரும் பகுதியான அரபு உலகத்துடன் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.
பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடுகளுடனும் திரு. மோடி தொடர்புகளை மேற்கொண்டார். 2014 நவம்பரில் ஃபிஜி நாட்டிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின்போது பசிபிக் பகுதியிலுள்ள அனைத்து தீவுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்தார். இப்பகுதியுடன் இந்தியாவின் உறவுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். அதே ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடு ஒன்றில் கலந்து கொள்ள தில்லிக்கு வந்தனர். கடந்த ஓராண்டு காலத்தில் பிரதமர் அரபு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக எப்போதுமே இருந்து வரும் பகுதியான அரபு உலகத்துடன் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.