தூய்மையான இந்தியா என்பது 2019-ல் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தினையொட்டி அவருக்கு செலுத்தும் மிகப்பெரிய காணிக்கையாகும் – என்று 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி புதுதில்லி ராஜ்பத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஒரு இயக்கமாக நடத்தப்படுகிறது.
இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தினை வழிநடத்தி செல்லும் பிரதமர் மோடி, தூய்மை இந்தியா சுகாதார இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டார். புதுதில்லி மந்திர் மார்க் காவல்நிலையத்தில் பிரதமர் மோடியே தூய்மைப்பணிகளை தொடங்கினார். துடைப்பத்தை எடுத்து அழுக்குகளையும், குப்பைகளையும் அகற்றி தூய்மை இந்தியா பணிக்கான பிரச்சார இயக்கத்தினை நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மக்களிடம் குப்பையை போடாதீர்கள், மற்றவர்களையும் குப்பை கொட்ட அனுமதிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். இந்த தூய்மை இந்தியா இயக்கப்பணியில் 9 பேர் குழு ஈடுபட வேண்டும் என்றும் அந்த ஒன்பது பேரும் மேலும் ஒன்பது பேரை இந்த இயக்கப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த பணியில் மக்கள் ஈடுபட்டால் தூய்மை பிரச்சாரம் பெரும் தேசிய இயக்கமாக மாறும், இந்த இயக்கத்தின் மூலம் தூய்மை இந்தியா குறித்த பொறுப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும். அனைத்து குடிமக்களும் இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட்டால் மகாத்மாவின் கனவுக்கு முழு வடிவம் கிடைத்துவிடும்..
பிரதமர் மோடி மக்களை இந்த இயக்கத்தில் ஈடுபட வைக்க தனது வார்த்தைகளையும் செயலையும் பயன்படுத்தி தூய்மை இந்தியா எனப்படும் “ஸ்வச் பாரத் “ தகவலை பரப்ப உதவுகிறார்.
வாரணாசியில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான பணிகளை அவரே மேற்கொண்டார். அங்கு அசிசிகாட் பகுதியில் கங்கை நதிக்கரையில் நடந்த பணியில் பிரதமர் மோடியே மண்வெட்டி பிடித்து வேலைகளை தொடங்கினார். இந்த பணியின்போது அவருடன் உள்ளுர் மக்களும் இணைந்து தூய்மை இந்தியா பிரச்சாரத்தில் பங்கெடுத்தனர்.
இதுபோன்று இந்திய மக்களின் வீடுகளில் முறையான கழிப்பறை வசதி இல்லாததால் பல்வேறு சுகாதார குறைபாடுகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள் என்பதை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பல்வேறு தரப்பு மக்களும் இந்த தூய்மை இந்தியா திட்டப்பணிகளில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர் அதிகாரிகள் முதல் பாதுகாப்பு படை வீர்ர்கள் வரையிலும், நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரையிலும், தொழிலதிபர்கள் முதல் ஆன்மிக தலைவர்கள் வரையிலும், என அனைத்து தரப்பினரும் வரிசைகட்டி இந்த பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள். அரசின் பல்வேறு துறைகளும் நடத்திவரும் தூய்மைப்பணிகளில் நாட்டின் லட்சோப லட்சம் மக்கள் தினந்தோறும் பங்கேற்கிறார்கள். தொண்டு நிறுவனத்தினர், உள்ளூர் சமுதாய மையங்கள் போன்றவையும இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சிறப்பு தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி சுகாதாரம் பற்றி மக்களிடம் எடுத்து சொல்லப்படுகிறது. நாடகங்கள், இசை நிகழ்ச்சி வாயிலாகவும் நாடு முழுவதும் இந்த பணியின் நோக்கம் பற்றி பரப்புரை செய்யப்படுகிறது.
பாலிவுட் திரை நட்சத்திரங்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள், தூய்மை இந்தியா இயக்கப்பணியில் ஆர்வமுடன் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். அமிதாப்பச்சன், அமீர்கான், கைலாஷ் கேர், பிரியாங்கா சோப்ரா, சாப் தொலைக்காட்சி குழுமத்தினர் என அனைத்து குறிப்பிடத்தக்க பிரபலங்களும் இதில் பங்கேற்று தங்களுடைய பங்களிப்பை தந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா, சாய்னா நேவால், மேரி கோம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு துறை பிரபலங்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியின் மாதாந்திர மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி உரையில், தூய்மை இந்தியா பிரச்சார இயக்கத்தினை வெற்றி பெற வைக்க பிரபலங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். சுத்தமான இந்தியா திட்டத்திற்காக சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேசத்தின் ஹார்தா மாவட்ட அதிகாரிகள் குழு ஒன்றிற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபோன்று பெங்களுருவில் உள்ள நியூ ஹொரைசான் பள்ளி மாணவர்கள் 5 பேர் குப்பைகளை வாங்கவும், விற்கவும் செல்போனை அடிப்படையாக கொண்ட பயன்பாட்டு சேவையை தொடங்கி இருப்பதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐ.சி.ஐ.சி.ஐ., பஞ்சாப் நேஷனல் பாங்க், எக்.எல்.ஆர்.ஐ. ஜாம்ஷெட்பூர், மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு, உள்ளிட்ட நிறுவனங்கள் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை தொடங்கி அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்த இயக்கத்தில் பங்கெடுத்தவர்களுக்கம் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அதுபோன்று வாரணாசியில் பிரபுகாத் இயக்கத் தன்னார்வ தொண்டர்கள் தஷ்சின்ஷா உள்ளிட்டோருக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தினுடனேயே ” என் தூய்மை இந்தியா” என்ற இயக்கத்தினையும் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மேற்கொண்ட சுத்தப்பணிககளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா பிரச்சார இயக்கத்திற்கு நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. நாட்டு மக்கள் இதில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்திற்காக உறுதி ஏற்கின்றனர். , துடைப்பம் எடுத்து தெருவை கூட்டுதல், குப்பைகளை அகற்றல், சுகாதாரத்திற்கு முழு கவனம் செலுத்துதல், ஆகியவை தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுகாதாரமே தெய்வீகத்தின் தன்மை என்ற பிரச்சாரத்தை எடுத்துச்செல்வதில் மக்களும் தீவிரமாக பங்கெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
நகர்புறங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிபட்ட கழிப்பிடங்கள், சமுதாய கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கு கவனம் செலுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் நடைமுறை செயல்பாடுகள் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக தனி நபர்களுக்கிடையேயான தொடர்புகள், கிராம பஞ்சாயத்துக்கள் அளவில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்துதல், நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய நடைமுறைகள் என பல செயல்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. அதேபோல கிராமப்புறங்களில் கழிப்பறை கட்டுவதற்கான ஊக்கத்தொகை வரம்பு பத்தாயிரத்தில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்கும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.