“… விரிவான அளவில் நிலவி வரும் ஊழல், அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் திருமதி. இந்திரா காந்தி அவற்றுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். குடியரசுத் தலைவர் அதை ஏற்றுக் கொண்டார். மேலும் ….” இதுதான் 1975 ஜூன் 25-ம் தேதிய செய்தியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாக, சட்டத்தைப் பொருட்படுத்தாமல் தனக்கேற்ற வகையில் அதை வளைப்பதென்று திருமதி. காந்தி முடிவு செய்தார். “அவசரநிலை அறிவிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, 21 மாதங்களுக்கு இந்தியா அதன் ‘இருண்ட காலத்திற்குள்’ தள்ளி விடப்பட்டது. என் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் இந்த நெருக்கடி நிலை பற்றி மிக லேசான நினைவுதான் இருக்கும். அந்த நாட்களில் அதிகாரப் பசி மிகுந்த காங்கிரஸ் எவ்வாறு ஆட்சியதிகாரத்தை எந்த அளவிற்குத் தவறாகப் பயன்படுத்தியது என்பதைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதை முக்கியமாகக் கருதாமல், நமது தொலைக்காட்சி ஊடகத்தின் தயவில் அவசரநிலையின் ஆண்டுவிழாவின்போது ‘செயல்வீரர்’களாக இருந்த திரைப்பட நடிகர்களைப் பேட்டி கண்டதை அப்போது பார்த்திருந்தோம்.


அதே நேரத்தில் திருமதி. காந்தியின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் தங்களின் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்ய முடிவு செய்த பல தனிநபர்கள், அமைப்புகளின் பெயர்களும் வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு மறைக்கப்பட்டன என்பதைக் குறிப்பிட வேண்டியதும் அவசியமாகும். இன்னும் சொல்லப்போனால், நாட்டின் விடுதலைக்கான இயக்கத்திற்குப் பிறகு அதிகாரப்பசி மிக்க காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடிக்க அரசியல் கட்சிகளும் அரசியல் சாராத சக்திகளும் ஒன்றுபட்ட மிகப் பெரும் போராட்டமும் இதுவே ஆகும். காலப்போக்கில் நானாஜி தேஷ்முக், ஜெயப்பிரகாஷ் நாராயண், நாதலால் ஜக்டா, வசந்த் கஜேந்திரகட்கர், பிரபுதாஸ் பட்வாரி போன்ற (இந்தப் பெயர் பட்டியல் மிக நீளமானது) மக்களை அணிதிரட்டியவர்கள் மக்களின் நினைவிலிருந்து மறைந்து போய்விட்டனர். எவ்வித பாராட்டையும் பெறாத வீரர்கள்தான் அவர்கள். இதற்கு ‘மதசார்பற்ற’ ஊடகத்திற்கும் நாம் ‘நன்றி’ சொல்ல வேண்டும்.

குஜராத் மாநிலமும் இதில் மிக முக்கியமானதொரு பங்கை வகித்தது. இன்னும் சொல்லப் போனால் அவசர நிலைக்கு எதிராக நின்ற பலருக்கும் அது முன்மாதிரியாகத் திகழ்ந்தது. குஜராத் மாநிலத்தில் உருவான நவநிர்மாண் இயக்கம்தான் ஆட்சியதிகாரத்திற்கான தங்களின் பேராசை, குறைந்த பட்சம் குஜராத்தில், நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்பதை காங்கிரசிற்கு உணர்த்தியது. விடுதியில் வழங்கப்படும் உணவிற்கான தொகையை உயர்த்தியதை மோர்பி கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் மட்டுமே எதிர்த்ததையும் அது எவ்வாறு நவநிர்மாண் என்ற இயக்கமாக மாநிலம் முழுவதிலும் விரிவாகப் பரவியது என்பதையும் தெரிந்து கொள்வது பயனளிப்பதாக இருக்கும். உண்மையில் பீகாரில் இதேபோன்றதொரு இயக்கத்தைத் துவக்கிய ஜெயப்ரகாஷ் நாராயணுக்கு குஜராத் ஆதர்சமாக இருந்தது. அந்த நாட்களில் ‘குஜராத்தைப் பின்பற்றுவோம்!’ என்பதே அந்த நாட்களில் பீகாரில் புகழ்பெற்ற கோஷமாக இருந்தது. அதைப் போன்றே குஜராத் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் அல்லாத கட்சிகள் முன்வைத்த கோரிக்கையே பீகாரில் காங்கிரஸ் அல்லாத சக்திகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. எனவேதான் குஜராத் சட்டமன்றத்தைக் கலைத்தது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என இந்திரா காந்தி ஒரு முறை குறிப்பிட்டார். சிமன்பாய் பட்டேலின் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. (காங்கிரஸ் தேர்தலை நடத்தவே விரும்பவில்லை. காங்கிரஸ் விட்டுக் கொடுத்து மாநிலத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மொரார்ஜி தேசாய் தான் முயற்சிகளை எடுத்தார்.)

குஜராத்தில் முதன்முறையாக பாபுபாய் ஜே. படேலை முதல்வராகக் கொண்டு காங்கிரஸ் அல்லாத அரசு ஆட்சியில் அமர்ந்தது. அப்போது குஜராத்தில் இருந்த அரசுக்கு மக்கள் முன்னணி அரசு என்றே பெயர். அந்த நாட்களில் குஜராத் மக்களை ஏமாற்றுவதற்கு இந்திரா காந்தி அனைத்து வழிகளையும் பயன்படுத்தினார் என்பதை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு சூழ்நிலைகளிலும் ‘நான் குஜராத் மாநிலத்தின் மருமகள்’ என்று கூறி வாக்குகளை கோரியிருக்கிறார். அவரது மோசடி அரசியலுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என்பதை திருமதி. காந்தி அரிதாகவே உணர்ந்திருந்தார்.


குஜராத்தில் மக்கள் முன்னணி அரசு ஆட்சியில் இருந்ததாலேயே அவசரநிலையின் பிரம்மாண்டமான அத்துமீறல்களை குஜராத் மக்கள் பலரும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படவில்லை. சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரும் குஜராத்திற்கு குடிபெயர்ந்தனர். அந்த மாநிலம் தனியொரு தீவாகவே, ஜனநாயகத்திற்காகப் பாடுபடுவோர் தஞ்சம் புகும் இடமாகவே அது மாறியது. மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று மத்திய அரசு மக்கள் முன்னணி அரசின் மீது அடிக்கடி புகார் கூறி வந்தது. (இங்கு ஒத்துழைப்பு என்பதற்கு பொருள் காங்கிரசிற்கு எதிரான சக்திகளை உடைத்து நொறுக்குவதில் குஜராத் அரசு உதவ வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்பியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத் அரசு அதற்குத் தயாராக இல்லை). இந்த அவசரநிலைக் காலத்தில்தான் மிக அபரிமிதமான தணிக்கையையும் நாடு சந்தித்தது.

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை ஒட்டி அகில இந்திய வானொலி ஒலிபரப்ப இருந்த குஜராத் மாநில முதல்வரான பாபுபாய் படேல் தனது சுதந்திர தின உரையை தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திரா காந்தி அவரை கேட்டுக் கொள்ளும் அளவிற்கு காங்கிரசின் அதிகார துஷ்பிரயோகம் அமைந்திருந்தது. (அந்த நாட்களில் அகில இந்திய வானொலி மூலம் தங்கள் மாநில மக்களுக்கு செய்திகளைத் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று மாநில முதல்வர்கள் உரையாற்றுவது வழக்கமாக இருந்தது. இத்தகைய இயக்கங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், தன் உயிரைப் பணயம் வைத்தாவது நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும் என ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் ஒருவர் மனப்பூர்வமாக செயல்பட்டு வந்தார். அவர் வேறுயாருமல்ல. நமது பிரதமர் திரு. நரேந்திர மோடிதான். மற்ற ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களைப் போலவே இந்த இயக்கத்திற்காக மக்களை அணிதிரட்டுவது, கூட்டங்கள் நடத்துவது, இயக்கம் குறித்த பிரசுரங்களை விநியோகிப்பது போன்ற பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. அந்த நாட்களில் நரேந்திர மோடி நாத்பாய் ஜக்தா, வசந்த் கஜேந்திர்கட்கர் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அவசர நிலை திணிக்கப்பட்ட நாளிலிருந்தே அதிகாரப் பசிமிக்க காங்கிரசின் அத்துமீறல்களைத் தடுப்பதற்கான அமைப்பு முறையையும், வழிமுறைகளையும் கொண்டதாக ஆர். எஸ். எஸ். மட்டுமே இருந்தது. ஆர். எஸ். எஸ். அமைப்பின் அனைத்துப் பிரச்சாரகர்களும் இந்த நியாயமான நோக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவசர நிலை திணிக்கப்பட்ட உடனேயே காங்கிரசின் அநியாயமான வழிமுறைகளை எதிர்கொள்வதற்கான மன உறுதியும், திறமையும் ஆர். எஸ். எஸ். அமைப்பிற்கு உள்ளது என்பதை காங்கிரஸ் உணர்ந்தது. தனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் அரசு ஆர். எஸ். எஸ். அமைப்பிற்கு தடை விதிக்க முடிவு செய்தது.

இந்த நேரத்தில்தான் மூத்த ஆர். எஸ். எஸ். தலைவரான கேசவராவ் தேஷ்முக் குஜராத்தில் கைது செய்யப்பட்டார். திட்டமிட்டபடி நரேந்திர மோடி அவருடன் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். எனினும் தேஷ்முக் கைது செய்யப்பட்டதால் அது நடைபெறவில்லை. கேசவராவ் கைது செய்யப்பட்டார் என்று தெரிந்தவுடனேயே, மற்றொரு மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான நாத்லால் ஜக்டாவை ஒரு ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று விட்டார். கேசவராவ் தேஷ்முக்கிடம் முக்கியமான ஆவணங்கள் இருப்பதையும் அவர் உணர்ந்தார். எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க அந்த ஆவணங்களை மீட்டெடுப்பது அவசியம் என்பதையும் அவர் உணர்ந்தார். எனினும் தேஷ்முக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடமிருந்து அந்த ஆவணங்களைப் பெறுவதென்பது கிட்டத்தட்ட இயலாத செயலாகவே இருந்தது. எனினும் இந்தச் சவாலை நரேந்திரமோடி ஏற்றுக் கொண்டு, மணிநகரைச் சேர்ந்த சுயம் சேவக் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரி ஒருவரின் துணையுடன் அவற்றை மீட்டெடுப்பதற்காக திட்டமிட்டார். இந்தத் திட்டத்தின்படி இந்தப் பெண் தேஷ்முக்-ஐ சந்திக்க காவல் நிலையத்திற்குச் சென்றார். இதற்கிடையே நரேந்திர மோடியின் திட்டப்படி காவல் நிலையத்திலிருந்து அந்த ஆவணங்கள் மீட்கப்பட்டன. மேலும் அவசரநிலையின்போது சுயேச்சையான பத்திரிக்கைகளை தணிக்கைக்கு உட்படுத்துவது என திருமதி. காந்தி முடிவு செய்தார். பத்திரிக்கையாளர்கள் பலரும் மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதைப் போன்றே புகழ்பெற்ற பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான மார்க் டுலி உட்பட வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் இந்தியாவிற்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அப்போதைய நிலையில் உண்மையான, சரியான தகவலை முற்றிலுமாக அகற்றிவிடுவது என்பதாகவே இருந்தது. இவை போக முக்கியமான அரசியல் எதிரிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். செய்திகளை மக்களுக்கு எடுத்துச் செல்வது இயலாததொரு செயலாகவே தோன்றியது. ஆனால் இந்த நேரத்தில்தான் இந்த மாபெரும் கடமையை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை நரேந்திர மோடியும் இதர ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர்களும் ஏற்றுக் கொண்டனர்.

தகவல்களைப் பரப்புவது, இது தொடர்பான இலக்கியங்கலை விநியோகிப்பது ஆகியவற்றில் நரேந்திர மோடி மிகவும் புதுமையான வழிகளை மேற்கொண்டு வந்தார். அரசியல் அமைப்புச் சட்டம், சட்டங்கள், காங்கிரஸ் அரசின் அத்துமீறல்கள் ஆகியவை குறித்த இலக்கியங்கள் குஜராத்திலிருந்து இதர மாநிலங்களுக்குச் செல்லும் ரயில் வண்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டவுடன் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில் இது மிகவும் அபாயகரமானதொரு கடமையாகும். எனினும் நரேந்திர மோடியும் இதர பிரச்சாரகர்களும் பயன்படுத்தி வந்த நுட்பமான முறை மிகவும் சிறப்பாகவே செயல்பட்டது. ஆர். எஸ். எஸ். அமைப்பு தடை செய்யப்பட்டு, தணிக்கை விதிமுறைகள் மிகவும் பரவலாக இருந்த நிலையில் தங்களுக்குப் பொறுப்பான மாவட்டங்களில் சுயம் சேவக்குகளை வளர்த்தெடுப்பது எனவும், அவர்களை ஜனத் திரள் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக மாற்றுவது எனவும் ஆர். எஸ். எஸ். முடிவு செய்தது. இந்த நேரத்தில்தான் இந்த இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சுயம் சேவக்குகளின் குடும்பங்களை ஆதரிக்க வேண்டிய தேவையை நரேந்திர மோடி உணர்ந்தார். சுயம் சேவக்குகளின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடிய நபர்களை கண்டறிய நரேந்திர மோடி முன்முயற்சி எடுத்தார்.

ஆர். எஸ். எஸ். அமைப்பின் நடவடிக்கைகளை உடைத்து நொறுக்க வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நரேந்திர மோடி தலைமறைவாக இருந்து கொண்டே இயக்க வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நேரத்தில்தான் காவல் துறைக்குத் தெரியாமல் மணி நகரில் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நரேந்திர மோடி இந்தப் பணியை மிகவும் சிறப்பாக நிறைவேற்றினார். காங்கிரஸ் அரசின் அத்துமீறல்களுக்கு எதிரான தலைமறைவு இயக்கத்தில் நரேந்திர மோடி தீவிரமாக ஈடுபட்டு வந்தபோதுதான் திரு. பிரபுதாஸ் பட்வாரியுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. தனது வீட்டில் வந்து சந்திக்குமாறு அவர் மோடியை கேட்டுக் கொண்டார். அவரது இல்லத்தில்தான் கொடூரமான அவசரநிலையை எதிர்த்த இயக்கத்தில் பங்கேற்றிருந்த திரு. ஜார்ஜ் ஃபெர்னாண்டசை திரு. நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது முஸ்லிம் வேடத்திலிருந்த திரு. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் திரு. நரேந்திர மோடியிடம் தனது திட்டத்தை விளக்கினார். இந்த நேரத்தில்தான் திரு. ஜார்ஜ் ஃபெர்னாண்டசுடன் நானாஜி தேஷ்முக் சந்திக்கவும் நரேந்திர மோடி காரணமாக இருந்தார். திரு. நரேந்திர மோடி, திரு. நானாஜி ஆகியோருடன் நடந்த சந்திப்பில் இந்திரா காந்தியின் அத்துமீறல்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் ஒன்றை துவக்க வேண்டும் என்ற தனது திட்டத்தையும் அவர் வெளிப்படுத்தினார். எனினும் திரு. நானாஜியும் திரு. நரேந்திர மோடியும் இந்தத் திட்டத்திற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்தனர். அவர்களைப் பொறுத்தவரையில், திருமதி. இந்திரா காந்தியின் அத்துமீறல்கள் எவ்வளவு வன்முறையானதாக இருந்தபோதிலும் இந்த இயக்கம் வன்முறையற்றதாக இருப்பது அவசியம் என்பதாகவே இருந்தது. அவசரநிலை காலத்தில் அரசு அகில இந்திய வானொலியை தனது பிரச்சாரக் கருவியாக பயன்படுத்தி வந்தது. மேலும் அதன் மோசமான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் ஒரு வார இதழும் மத்திய அரசிற்குச் சார்பாக அப்போது செயல்பட்டு வந்தது. அகில இந்திய வானொலியால் தகவல்கள் தணிக்கை செய்யப்படும் போக்கினால் மக்கள் மிகவும் சோர்வடைந்தனர். இந்த நேரத்தில்தான் மக்கள் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு அகில இந்திய வானொலியின் தலைமையகமான ஆகாஷ்வாணி கட்டிடத்திற்கு முன்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தையும், சட்டங்களையும் இதர இலக்கியங்களையும் மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் படிக்கும் இயக்கத்தை நடத்தியது.

மற்ற ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர்களைப் போலவே திரு. நரேந்திர மோடியும் இந்த மக்கள் ஒற்றுமைக்கான கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதிலும் அதற்காக மக்களை அணிதிரட்டுவதிலும் ஈடுபட்டு வந்தார். ஏனெனில் திட்டமிட்ட முறையில் மக்களை அணிதிரட்டுவதற்கான கட்டமைப்பும் அமைப்பும் கொண்டிருந்த ஒரே அமைப்பாக அந்த நேரத்தில் ஆர். எஸ். எஸ். மட்டுமே இருந்தது. இன்றும் காங்கிரசை சார்ந்த வகையில் அதற்குப் பணிந்து போகின்ற ஊடகத்தின் ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டு நாம் கவலை கொள்கிறோம். காங்கிரசால் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதையும் தகவலுக்கான மேடைகளை தங்களது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதையும் அவசரநிலையிலும் கூட நம்மால் காண முடிந்தது. (ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் என் டி ராமராவ் காங்கிரஸை தோற்கடித்த போதிலும் அந்தத் தகவலை அகில இந்திய வானொலி எவ்வாறு இருட்டடிப்பு செய்தது என்பதை இது நினைவூட்டுகிறது. ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநர் பதவியேற்க அவருக்கு அழைப்பு விடுத்தபோதுதான் என் டி ராமராவ் என்ற நபரைப் பற்றியே இந்த நாடு அறிந்து கொண்டது.) அரசால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதிலும் நரேந்திர மோடி ஈடுபட்டு வந்தார். வேஷம் போடுவதில் சிறந்தவராக இருந்த அவர், கைது செய்யப்படும் அபாயம் இருந்தபோதிலும், வேஷம் போட்டுக் கொண்டு சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த தலைவர்களுக்கு முக்கிய தகவல்களை வழங்கிக் கொண்டு வந்தார். ஒரேயொரு முறை கூட காவல் துறையால் நரேந்திர மோடியை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அந்த நாட்களில் அவசர நிலைக்கு எதிராகவும், தணிக்கைக்கு எதிராகவும் தனது துணிவைக் காட்ட சாதனா என்ற இதழ் முடிவு செய்தது. இந்த இதழ் மக்களை சென்றடைவதில் ஆர். எஸ். எஸ். அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மற்ற பிரச்சாரகர்களைப் போலவே, திரு. நரேந்திர மோடியும் இந்த ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

அவசர நிலை காலத்தில் இந்திரா அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக பல இயக்கங்கள் உருவாவதற்கு திரு. நரேந்திர மோடி உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிரச்சாரகர்கள் காரணமாக இருந்தனர். இந்த நாட்களில் ஆர் எஸ் எஸ் ஆதரவிலான மக்கள் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு ‘முக்தி ஜோதி’ பயணம் ஒன்றையும் நடத்தியது. சைக்கிள் பேரணியாக நடைபெற்ற இந்தப் பயணத்தில் பல பிரச்சாரகர்களும் பங்கேற்று, சைக்கிளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்து ஜனநாயகம் குறித்த செய்தியை பரப்பி வந்தனர். நந்தியாத் என்ற இடத்திலிருந்து துவங்கிய இந்த முக்தி ஜோதி பயணத்தை துவக்கி வைத்தவர் சர்தார் வல்லபாய் படேலின் மகளான திருமதி மணிபென் படேல் என்பதை ஒருசிலரே அறிவார்கள். (நேரு-காந்தி குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையைப் பற்றியும் இந்த நாட்டிற்கு நன்றாகத் தெரிந்திருக்கும் அதே நேரத்தில் விடுதலை இயக்கத்தின் மகத்தான தலைவர்களைப் பற்றியும் அவர்களது குடும்பத்தையும் பற்றியும் மிக மிகக் குறைவாகாவே தெரிய வந்துள்ளது மிகப் பெரிய நகைமுரண் தான். விடுதலை இயக்கத்தில் ‘பங்கேற்ற’ கட்சி என்று பெருமை பேசும் காங்கிரஸ் இன்று திருமதி. மணிபென் படேல் போன்றவர்களை புறக்கணிக்கிறது). திரு. நரேந்திர மோடியைப் பற்றிய தனது நூலில் திரு. கே.வி. காமத் மிகச் சரியாகவே கூறியுள்ளது போல, அவசர நிலையின் போதுதான் நரேந்திர மோடியின் மிக சிறப்பான திறமைகளை மக்கள் அறிந்து கொள்ள முடிந்தது. சுயநலமற்ற பிரச்சாரகராக அவர் செயல்பட்டு வந்த அதே நேரத்தில் தான் சார்ந்த அமைப்பும், இதர பிரச்சாரகர்களும் எவ்வித நிதி நெருக்கடியையும் எதிர்நோக்காதவாறு செயல்படுவதையும் அவர் உறுதி செய்தார்.

திரு. காமத் மிகச் சரியாகக் குறிப்பிட்டது போலவே பிரச்சாரகர்களுக்கு நிதியுதவியை ஏற்பாடு செய்வது மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் வாழும் இந்தியர்களுக்கு அவசர நிலையின் அத்துமீறல்களைப் பற்றிய உண்மையான, சரியான தகவல்கள் கிடைப்பதையும் அவர் உறுதி செய்தார். திரு. நரேந்திர மோடியின் மிகச்சிறந்த ஆட்சியின் பயன்களை நாம் அனைவரும் இன்று அனுபவித்து வருகிறோம். எனினும் அவசர நிலை காலத்தில் சுயநலமற்ற செயல்பாட்டாளராக அவரது பங்களிப்பை அங்கீகரிப்பதும் மிக முக்கியமானதாகும். அதைப் போன்றே மக்கள் முன்னணி அரசின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த குஜராத் அரசும் சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. இன்று நமது நாடு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியாவில் நெருக்கடியைப் போன்றதொரு நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஊழல் மலிந்த ஆட்சியிலிருந்து இந்தியர்களைக் காப்பாற்ற புதியதொரு நவநிர்மாண் இயக்கத்திற்காக குஜராத்தையும் நரேந்திர மோடியையும் இந்தியாவிலுள்ள மக்கள் எதிர் நோக்குகிறார்கள். புதியதொரு நவநிர்மாண் வெகு விரைவில் துவங்க வேண்டும் என்றும் நான் விழைகிறேன்…