#MannKiBaat: PM Modi extends Diwali greetings to people across the country
#MannKiBaat: Diwali gives us the message to move from darkness to light, says PM Modi
#MannKiBaat: Diwali has now become a global festival. It is being celebrated across several countries, says PM
#MannKiBaat: PM Narendra Modi lauds courage of our jawans #Sandesh2Soldiers
#MannKiBaat –Our jawans display courage not only at borders but whenever there are natural calamities or even law and order crisis: PM
Aspirations of the poor must be kept in mind while formulating policies: PM Modi during #MannKiBaat
Discrimination between sons and daughters must be ended in society: PM Modi during #MannKiBaat
#MannKiBaat: PM Modi recalls contribution of Sardar Patel towards unity of the country, pays tribute to former PM Indira Gandhi
SardarPatel gave us ‘Ek Bharat’, let us make it ‘Shreshtha Bharat’, says Prime Minister Modi during #MannKiBaat
PM Modi pays tribute to Guru Nanak Dev during #MannKiBaat

எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தீபாவளி உற்சாகத்துடனும் குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. 365 நாட்களும், நாட்டின் ஏதாவது ஒரு மூலையில், ஏதாவது ஒரு பண்டிகை நடைபெற்று வரும் தேசம் நம் பாரத தேசம். தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு பாரத மக்களின் வாழ்க்கை என்பது பண்டிகைகளின் இன்னொரு பெயர் என்றே படும், இது இயல்பானதும் கூட. வேத காலம் தொட்டு இன்று வரை, பாரதத்தில் பண்டிகைகளின் பாரம்பரியமானது நீடித்து வந்திருக்கிறது, காலத்துக்கேற்ப மாற்றங்கள் அடைந்த பண்டிகைகளும் இவற்றில் உண்டு, காலத்துக்கு ஒட்டி வராத பண்டிகைகளை நாம் மனவுறுதியோடு களையவும் செய்திருக்கிறோம்; காலம், சமூகம் ஆகியவற்றின் தேவைக்கேற்ப பண்டிகைகளில் இயல்பான வகையில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் இவை அனைத்திலும் நாம் தெளிவாக காணக்கூடிய ஒரு விஷயம், பாரத நாட்டு பண்டிகைகளின் இந்த முழுமையான பயணம், அவற்றின் பரவல், அவற்றின் ஆழம், மக்களிடம் அவற்றுக்கு இருக்கும் ஏற்புத்தன்மை என இவை அனைத்தும் ஒரு மூல மந்திரத்தோடு இணைந்திருக்கின்றன – தனிமனிதனை சமுதாயத்தை நோக்கி இட்டுச் செல்லுதல் என்பது தான் அது. மனிதனையும் அவனது தனித்துவத்தையும் விசாலப்படுத்தும் அதே வேளையில், அவனது குறுகிய எண்ணப்பாட்டை, சமுதாயத்தின் விசாலத்தை நோக்கி விரிவடையச் செய்யும் முயற்சி, அதை இந்தப் பண்டிகைகள் வாயிலாகச் செய்வது. ஆனால் அவற்றில் கூட, பருவநிலை எப்படி இருக்கிறது, எந்த பருவநிலையில் எதை உண்ண வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்கள் எவை, அந்த விளைச்சலை எப்படி பண்டிகைகளாக மாற்றுவது, உடல்நலக் கண்ணோட்டத்தில் என்ன வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் நம் முன்னோர் அறிவியில் பூர்வமாக, பண்டிகைகளில் கலந்து வைத்திருக்கின்றார்கள். இன்று உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழல் பற்றிய பேச்சாக இருக்கிறது. இயற்கை அழிவு கவலையளிப்பதாக இருக்கிறது. பாரதத்தின் பண்டிகை பாரம்பரியத்தில் இயற்கை மீதான நேசம் வெளிப்படுகிறது, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பண்புடையவர்களாக ஆக்குகிறது. மரம், செடி, நதி, விலங்குகள், மலைகள், பறவைகள் என அனைத்து குறித்தும் பண்டிகைகள் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. இப்போதெல்லாம் நாம் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையைக் கொண்டாடுகிறோம், ஆனால் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், உழைக்கும் வர்க்கமாகட்டும், மீனவர்களாகட்டும், அவர்கள் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விடுமுறையைக் கடைபிடித்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பவுர்ணமி, அமாவாசை நாட்கள் கடல் நீரில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இயற்கை மீது எந்த மாதிரியான தாக்கம் இருக்கிறது என்பதையெல்லாம் அறிவியல் நிரூபித்திருக்கிறது. இது மனித மனதின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது நமது நாட்டில் விடுமுறைகளைக் கூட, பேரண்டம், விஞ்ஞானம் ஆகியவற்றோடு இணைத்துக் கொண்டாடும் பாரம்பரியம் தழைத்திருக்கிறது. இன்று, நாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம், நான் முன்னர் கூறியதைப் போல, நமது ஒவ்வொரு பண்டிகையும் கல்வியூட்டுவதாக இருக்கிறது, ஞானத்தை அளிப்பதாக இருக்கிறது. இந்த தீபாவளிப் பண்டிகையும் தமஸோ மா ஜ்யோதிர்கமய, இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற செய்தியை நமக்கு அளிக்கிறது. ஒளி இல்லாததால் உண்டாகும் இருளை மட்டும் இது குறிக்கவில்லை; மூடநம்பிக்கை என்ற இருள், கல்வியறின்மை எனும் இருள், ஏழ்மை எனும் இருள், சமூகத் தீமைகள் எனும் இருள் ஆகியவற்றையும் குறிக்கிறது. தீபாவளி தீபத்தை ஏற்றி, சமூகத்தில் கசடுகளாக கப்பியிருக்கும் இருள், தனிமனிதனின் குறை என்ற இருள், இவற்றிலிருந்து நாம் விடுதலை அடைய முடிந்தால், இது தான் தீபாவளி தீபமேற்றி ஒளி பரப்புவதன் நோக்கம் எனக் கொள்ளலாம்.

 

ஒரு விஷயம் நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும், இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள், அது மிகப் பெரிய செல்வந்தர் இல்லமாகட்டும், அல்லது ஏழ்மை தாண்டவமாடும் ஏழையின் குடிசையாகட்டும், தீபாவளிப் பண்டிகையின் போது, ஒவ்வொரு குடும்பத்திலும் தூய்மை இயக்கம் மிளிர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தூய்மை காணப்படுகிறது. ஏழையிடம் மண்கலயம் இருக்கும், ஆனால் தீபாவளி வந்து விட்டது என்று அவர் தனது மண் கலயத்தைக் கூட சுத்தமாக வைத்திருப்பார். தீபாவளி ஒரு தூய்மை இயக்கமும் கூட. ஆனால் வீட்டில் மட்டும் தூய்மை என்பதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்த சுற்றுப்புறத்திலும் தூய்மை, வட்டாரம் முழுவதிலும் தூய்மை, கிராமம் முழுவதிலும் தூய்மை என நாம் நமது இந்த இயல்பையும், பாரம்பர்யத்தையும் விசாலப்படுத்த வேண்டும், விஸ்தரிக்க வேண்டும். தீபாவளி நன்னாள் என்பது இப்போது பாரத நாட்டு எல்லைகளோடு நின்று விடவில்லை. உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தீபாவளிப் பண்டிகையை நினைவில் கொள்கிறார்கள், கொண்டாடி மகிழ்கிறார்கள். உலகின் பல அரசுகளுமே, அங்கேயிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். கிழக்கத்திய நாடாகட்டும், மேற்கின் முன்னேறிய நாடாகட்டும் அல்லது வளர்ந்து வரும் நாடாகட்டும், ஆப்பிரிக்காவாகட்டும், அயர்லாந்தாகட்டும், அனைத்து நாடுகளிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் கண்ணைப் பறிக்கின்றன. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும், அமெரிக்க தபால் துறை இந்த முறை தீபாவளியையொட்டி தபால் தலை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கனடாவின் பிரதமர் தீபாவளியையொட்டி தீபம் ஏற்றும் தனது படத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் லண்டனில் தீபாவளியை முன்னிட்டு, அனைத்து சமுதாயங்களையும் இணைக்கும் வகையில் ஓர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார், அதில் தானே கலந்தும் கொண்டார்; பெரும் கொண்டாட்டங்களோடு தீபாவளியைக் கொண்டாடாத இங்கிலாந்து நகரமே இல்லை என்று கூட சொல்லலாம். சிங்கப்பூரின் பிரதமர் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை உலகத்தாரோடு மிகுந்த பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டார். சரி அந்தப் படம் என்ன தெரியுமா? சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் 16 பெண் உறுப்பினர்கள் பாரத நாட்டுப் புடவை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்தின் வாயிலில் நிற்கும் படம் தான் அது, இந்தப் படம் அதிகம் பரவிய படமானது. இவை அனைத்தும் தீபாவளியை முன்னிட்டு செய்யப்பட்டவை. சிங்கப்பூரின் அனைத்து தெருக்களிலும், பகுதிகளிலும் இப்போதெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் பாரத சமுதாயத்தினருக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, தீபாவளிப் பண்டிகையின் போது ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இருக்கும் அனைத்து சமுதாயத்தினரையும் இணைய அழைப்பு விடுத்தார். இப்போது தான் நியூசீலாந்து பிரதமர் வந்து விட்டுச் சென்றார், தனது நாட்டில் தீபாவளிப் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் விரைவாகச் செல்ல வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். நான் கூற விரும்பும் விஷயம் என்னவென்றால், தீபாவளி என்பது ஒளிகூட்டும் நன்னாள், உலக மக்கள் அனைவரையும் இருளிலிருந்து ஒளியை நோக்கி இட்டுச் செல்லும் ஊக்கத்தை அளிக்கும் பெரு நாள் என்பது தான்.

 

தீபாவளியின் போது நல்ல துணிமணிகள், நல்ல தின்பண்டங்களோடு சேர்த்து  பட்டாசுகளையும் நாம் கொளுத்தி மகிழ்கிறோம். சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இதில் ஆனந்தம் உண்டாகிறது. ஆனால் சிறுவர்கள் சில வேளைகளில் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறார்கள். பல பட்டாசுகளை ஒன்று திரட்டி, பெரிய ஓசை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, விபத்தை வரவேற்கிறார்கள். அக்கம்பக்கத்தில் என்ன பொருட்கள் இருக்கின்றன, அவை தீப்பற்றிக் கொள்ளுமே என்ற எண்ணமே வருவதில்லை. தீபாவளி நாட்களின் போது விபத்துக்கள், தீவிபத்துக்கள், அகால மரணம் ஆகியன பற்றிய செய்திகள் கவலையளிப்பதாக இருக்கின்றன. வேறு ஒரு கஷ்டமும் இருக்கிறது – தீபாவளியை ஒட்டி மருத்துவர்களும் பெரும் எண்ணிக்கையில் தங்கள் குடும்பங்களோடு தீபாவளி நன்னாளைக் கொண்டாடச் சென்று  விடுகிறார்கள் என்னும் போது ஒரு சங்கடத்தோடு மேலும் ஒரு சங்கடம் இணைந்து கொள்கிறது. குறிப்பாகத் தாய் தந்தையரிடமும், காப்பாளர்களிடமும் நான் விடுக்கும் குறிப்பான வேண்டுகோள் என்னவென்றால், குழந்தைகள் பட்டாசுகள் கொளுத்தும் போது, அவர்களோடு பெரியோர்களும் இருக்க வேண்டும் என்பது தான். எந்தத் தவறும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, அசம்பாவிதம் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் தீபாவளிப் பண்டிகை அதிக நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது ஒரு நாள் விஷயம் அல்ல; கோவர்த்தம் பூஜை, பாய் தூஜ், லாப் பஞ்சமி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், இது கார்த்திகை பௌர்ணமியின் ஒளிமயமான பண்டிகை வரை நீண்டு, ஒரு வகையில் இது நீண்ட நெடிய காலகட்டமாக இருக்கிறது. இவற்றோடு சேர்த்து நாம் தீபாவளிப் பண்டிகையையும் கொண்டாடி மகிழ்கிறோம், சட் பூஜைக்கான தயாரிப்பு முஸ்தீபுகளிலும் ஈடுபடுகிறோம். பாரதத்தின் கிழக்குப் பகுதிகளில் சத்-பூஜை பண்டிகை, ஒரு மிகப் பெரிய பண்டிகை. ஒரு வகையில் இது மிகப் பெரிய பண்டிகையாகத் திகழ்கிறது, 4 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது, ஆனால் இதற்கென ஒரு சிறப்பம்சம் இருக்கிறது – இது சமுதாயத்துக்கு ஒரு பெரிய ஆழமான செய்தியை அளிக்கிறது. சூரிய பகவான் நமக்கு அனைத்தையும் அளிப்பவர், அவரிடமிருந்து தான் நாம் அனைத்தையும் அடைகிறோம். நேரடியாகவும் சரி, மறைமுகமாகவும் சரி, சூரிய பகவான் நமக்களிப்பவற்றைக் கணக்குப் பார்த்தல் என்பது கடினம். சத்-பூஜை சூரியனை உபாசிக்கும் நன்னாள். ஆனால் சூர்யோதயத்தை நாம் வணங்குவது என்பது தானே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த சத்-பூஜையின் போது சூரிய அஸ்தமனம் பூஜிக்கப்படுகிறது. இதில் மிகப் பெரிய சமுதாய செய்தி அடங்கியிருக்கிறது.

 

நான் தீபாவளி பற்றிச் சொன்னாலும், சத்-பூஜை பற்றிப் பேசினாலும், இது உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வேளை; மேலும், சிறப்பாக நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கவும் இது நல்லதொரு வாய்ப்பு. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஒரு வடிவம் எடுத்து வருகின்றன; நமது நிம்மதியான வாழ்வுக்காக நமது இராணுவப் படைவீரர்கள் தங்களது அனைத்தையும் பணயம் வைத்துப் பணியாற்றுகிறார்கள். இராணுவ வீரர்களின், பாதுகாப்புப் படைவீரர்களின் இந்தத் தியாகம், தவம், உழைப்பு ஆகியன உணர்வுபூர்வமாக எனது மனதில் வியாபித்திருக்கிறது. இந்த உணர்வுகளின் உலகிலிருந்து ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் – இந்த தீபாவளியை பாதுகாப்புப் படையினருக்கு நாம் அர்ப்பணிப்போம். #Sandesh2Soldiers, அதாவது படைவீரர்களுக்கு செய்தி என்ற ஒரு இயக்கத்தில் பங்கெடுக்க நான் நாட்டுமக்களிடம் அழைப்பு விடுத்தேன். நாட்டின் படைவீரர்கள் மீது அளப்பரிய நேசமும், படை மீது பெருமிதமும், பாதுகாப்பு படையினர் குறித்து பெருமையும் இல்லாத குடிமகன் யாரும் இல்லை என்பதை நான் தலை வணங்கித் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வெளிப்பாடு எந்த அளவுக்கு அமைந்திருக்கிறது என்றால், இது ஒவ்வொரு நாட்டுமக்களுக்கும் பலம் அளிப்பதாக இருக்கிறது. அவர்களின் நெஞ்சுரத்தையும் நம்பிக்கையையும் மேலும் வளப்படுத்தும் விதமாக உங்களின் ஒரு தகவல் பலம் சேர்ப்பதாக வெளிப்பட்டிருக்கிறது. பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும், மாணவர்களாகட்டும், கிராமங்களாகட்டும், ஏழைகளாகட்டும், வியாபாரிகளாகட்டும், கடைக்காரர்களாகட்டும், தலைவர்களாகட்டும், விளையாட்டு வீரர்களாகட்டும், திரைப்படத் துறையினராகட்டும், அவர்கள் யாராக இருந்தாலும், நாட்டின் படைவீரர்களுக்காக விளக்கேற்றாத துறையினரோ, அவர்களுக்கு செய்தி அனுப்பாதவர்களோ யாரும் இல்லை என்று சொல்லலாம். ஊடகத்தினரும் இந்த தீப உத்ஸவத்தை படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மாற்றி இருக்கிறார்கள். எல்லையோரப் பாதுகாப்புப் படையினராகட்டும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையாகட்டும், இந்திய திபத்திய போலீசாகட்டும், அசாம் ரைஃபிள்ஸ் படையாகட்டும், தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல் படை என அனைத்து படைவீரர்களையும் குறிப்பிட்டு நான் கூறுகிறேன். நமது படைவீரர்களான இவர்கள் என்ன மாதிரியான கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்கிறார்கள் தெரியுமா? – நாம் தீபாவளியைக் கொண்டாடும் வேளையில் ஒருவர் பாலைவனத்தில் இருக்கிறார், ஒருவர் இமயத்தின் சிகரத்தில் இருக்கிறார், ஒருவர் தொழிற்சாலையைப் பாதுகாக்கிறார், ஒருவர் விமானநிலையத்தில் காவல் புரிகிறார். என்னென்ன வகையில் தங்கள் கடமைகளை ஆற்றுகிறார்கள் பாருங்கள்! நாம் கொண்டாட்ட மனோநிலையில் இருக்கும் போது, அந்த வேளையில் அவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தோமேயானால், அந்த நினைவுகளுக்கு கூட ஒரு புதிய சக்தி பிறந்து விடுகிறது. ஒரு செய்தி கூட பன்மடங்கு சக்தி அளிக்கிறது, நாடு இதை செய்து காட்டியும் இருக்கிறது. நான் உண்மையிலேயே நாட்டுமக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கைவசம் கலை இருக்கும் பலர், அந்தக் கலை வாயிலாகத் தெரிவித்தார்கள். சிலர் சித்திரங்களை வரைந்தார்கள், கோலம் போட்டார்கள், கார்ட்டூன்கள் உருவாக்கினார்கள். கலைமகளின் அருள் இருப்பவர்கள், கவிதைகளாக வடித்தார்கள். பலர் நல்ல நல்ல கோஷங்களை உருவாக்கினார்கள். எனது narendra modi app அல்லது எனது my govஇல் பொங்கிவரும் உணர்வுக் கடலைக் காணும் போது ………. சொற்கள் வாயிலாக, பேனா மூலமாக, தூரிகை வாயிலாக, நிறங்கள் வடிவில் எண்ணற்ற வகையிலான உணர்வுகள்…… இவை எல்லாம் என் நாட்டின் படைவீரர்களுக்கு எத்தனை பெருமிதம் அளிக்கும் கணம் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. #Sandesh2soldiers என்ற hashtagஇல் இத்தனை விஷயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 

நான் திரு அஸ்வினி குமார் சவுஹான் அவர்கள் அனுப்பியிருக்கும் கவிதையைப் படிக்க விரும்புகிறேன்.

 

அஸ்வினி அவர்கள் எழுதுகிறார் –

 

” நான் பண்டிகை கொண்டாடுகிறேன், மகிழ்கிறேன், புன்னகைக்கிறேன்,

நான் பண்டிகை கொண்டாடுகிறேன், மகிழ்கிறேன், புன்னகைக்கிறேன்,

இவையெல்லாம் நீ இருப்பதால் தான் இருக்கின்றன, இன்று கூறுகிறேன்.

சுதந்திரமாய் நான் இருக்க நீ தானே காரணம், மகிழ்வுகளின் வெகுமதி நீ,

நிம்மதியாய் நான் உறங்க,

நிம்மதியாய் நான் உறங்க, சிகரங்களில் நீ கண் விழித்தாய்,

வானும் மலையும், பூங்காவனமும் உன் முன் தலைவணங்கி நிற்கும்.

நாட்டின் குடிமகன் நானும் உன்னை, வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்.

நாட்டின் குடிமகன் நானும் உன்னை, வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்.”

 

எனதருமை நாட்டுமக்களே, பிறந்த இடத்திலும் படைவீரர்கள் நிறைந்திருக்கிறார்கள், புகுந்த வீட்டிலும் படைவீரர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்ற நிலையில் ஒரு சகோதரி ஷிவானி எனக்கு தொலைபேசி வாயிலாகத் தகவல் அனுப்பி இருக்கிறார். படைவீரர் குடும்பத்தவர் என்ன கூற விரும்புகிறார்கள் என்பதைக் கேட்போம், வாருங்கள்.

 

“வணக்கம் பிரதமர் அவர்களே, நான் ஷிவானி மோஹன் பேசுகிறேன். இந்த தீபாவளியன்று நீங்கள் தொடக்கி இருக்கும் #Sandesh2Soldiers இயக்கம் மூலமாக நமது படையின் சகோதரர்களுக்கு பெரும் ஊக்கம் கிடைக்கிறது. எனது கணவர்  இராணுவ அதிகாரியாக இருக்கிறார், எனது தந்தை, மாமனார் என இருவரும் இராணுவ அதிகாரிகளாக இருந்தவர்கள். எங்களது குடும்பம் முழுக்க படைவீரர்கள் நிறைந்தது, எல்லைப்புறத்தில் பல அதிகாரிகளுக்கு இத்தனை நல்ல செய்தி கிடைத்து வருகிறது, இராணுவத்தினருக்கு அதிக ஊக்கம் கிடைத்திருக்கிறது. இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோருடன் அவர்களின் குடும்பங்கள், அவர்களின் மனைவிமார்களும் நிறைய தியாகங்களைச் செய்கிறார்கள். ஒரு வகையில் ஒட்டுமொத்த இராணுவ சமுதாயத்துக்கே கூட ஒரு மிக நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. நான் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து கூற விரும்புகிறேன், நன்றி.”

 

     எனக்கு பிரியமான நாட்டுமக்களே, இராணுவ வீரன் எல்லையில் மட்டுமல்ல, வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்படுகிறார். இயற்கைச் சீற்றமாகட்டும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகட்டும், எதிரிகளோடு சமர் புரிவதாகட்டும், சில வேளைகளில் தவறான பாதையில் பயணிக்கும் இளைஞர்களை மீண்டும் நல்வழியில் கொண்டு வருவதாகட்டும், நமது படைவீரர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பதிலும் தேசிய உணர்வினால் உந்தப்பட்டு பணியாற்றுகிறார்கள். ஒரு நிகழ்வு எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது – இதை நான் உங்கள் முன்பாக வைக்க விரும்புகிறேன். வெற்றியின் அடித்தளத்தில் எப்படிப்பட்ட விஷயங்கள் ஒரு மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கிறது என்பதனால் இதைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஹிமாச்சல பிரதேசம் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பது, என்ற பழக்கத்திலிருந்து விடுதலை அடைந்து விட்டது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தொடக்கத்தில் சிக்கிம் மாநிலம் இந்த நிலையை எட்டியது, இப்போது இமாச்சலமும் இந்த நிலையை அடைந்திருக்கிறது, நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் கேரளமும் இந்த நிலையை எட்டவிருக்கிறது. ஆனால் ஏன் இப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது, காரணத்தை நான் கூறுகிறேன். இந்திய திபத்திய எல்லைப் படையில் ஒரு படைவீரரான திரு. விகாஸ் தாக்கூர் என்ற ஒருவர் இருக்கிறார். – அவர் இமாச்சலத்தின் சிர்மவுர் மாவட்டத்தின் சிறிய கிராமம் பதானாவைச் சேர்ந்தவர். நமது இந்த இந்திய திபத்திய எல்லையோரப் படையைச் சேர்ந்த படைவீரர் விடுமுறைகளுக்கு தனது கிராமம் சென்றார். கிராமத்தில் பஞ்சாயத்து கூடும் வேளையில் அவர் அங்கு சென்றார். கிராமப் பஞ்சாயத்தில் கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பணத்தட்டுப்பாடு காரணமாக சில குடும்பங்களால் கழிப்பறைகளைக் கட்ட முடியவில்லை என்பது தெரிய வந்தது. இல்லை இல்லை இந்தக் களங்கத்தை அகற்றியாக வேண்டும் என்ற எண்ணம் தேசபக்தி நிறைந்த நமது இந்திய திபத்திய எல்லையோரப் படையைச் சேர்ந்த வீரனான விகாஸ் தாக்கூர் அவர்களுக்குப் பட்டது. பாருங்கள் இவரது தேசபக்தியை, எதிரிகள் மீது குண்டுகளைப் பொழிந்து மட்டும் அவர் நாட்டுப்பணியாற்றுகிறார் என்பது இல்லை! அவர் உடனடியாக தனது காசோலைப் புத்தகத்தை எடுத்து, 57000 ரூபாய்க்கான காசோலையை பஞ்சாயத்துத் தலைவரிடம் அளித்து, எந்த 57 வீடுகளில் கழிப்பறைகள் இல்லையோ, என் தரப்பிலிருந்து அந்த ஓவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் என அளித்து விடுங்கள், 57 கழிப்பறைகளைக் கட்டுங்கள், பதானா கிராமத்தை திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வையுங்கள் என்றார். விகாஸ் தாக்கூர் அவர்கள் செய்து காட்டியிருக்கிறார். 57 குடும்பங்களுக்குத் தலா 1000 ரூபாயை தானே அளித்து, தூய்மை இயக்கத்துக்கு ஒரு புதிய சக்தியை ஊட்டியிருக்கிறார். இவை போன்றவற்றால் தான் ஹிமாசல பிரதேசம் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை அடைந்திருக்கிறது. இதைப் போலவே கேரளத்திலும் நடந்திருக்கிறது, இதற்கு நான் இளைஞர்களுக்கு என் நன்றியை வெளிப்படுத்த விரும்புகிறேன். கேரளத்தின் தொலைவான, பாதைகளே இல்லாத காடுகளில், நாள் முழுக்க நடையாய் நடந்து தான் கிராமத்தை அடைய வேண்டி இருக்கும் இடங்களில் ஒன்று, பழங்குடி இனத்தவர் நிறைந்த இடமாலாகுடி, இங்கே சென்று சேர்வதே கடினமான ஒன்று. அங்கே யாரும் செல்வதே இல்லை. அதன் அருகில் நகர்ப்புறத்தில் இருக்கும் பொறியியல் மாணவர்களின் கவனத்துக்கு இந்த கிராமத்தில் கழிப்பறைகளே இல்லை என்ற விஷயம் வந்தது. உடனே தேசிய மாணவர் படையின் கேடட்டுகள், நாட்டு நலப்பணித் திட்டத்தவர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைவருமாக இணைந்து கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள். கழிப்பறைகள் கட்டத் தேவையான பொருட்களான செங்கல், சிமெண்ட் என அனைத்துப் பொருட்களையும் இந்த மாணவர்கள் நாள் முழுக்க தங்கள் தோள்களில் சுமந்து நடந்து, காட்டுக்குச் சென்றார்கள். அவர்களே தங்கள் உழைப்பின் மூலமாக கிராமத்தில் கழிப்பறைகளைக் கட்டினார்கள், இந்த இளைஞர்கள் தொலைவான காட்டில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை அளித்தார்கள். இவை போன்றவற்றால் தான் கேரளம் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கப்படாத மாநிலமாக ஆகவிருக்கிறது. குஜராத் மாநிலமும் அனைத்து நகராட்சிகள்-மாநகராட்சிகளில், 150க்கும் மேற்பட்டவைகளை திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டவை என்று அறிவித்திருக்கிறது. 10 மாவட்டங்களை இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டவையாக அறிவித்திருக்கிறது. அரியானாவிலிருந்தும் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைத்திருக்கிறது, அரியானா நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தனது பொன்விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் அவர்களும் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை என்ற நிலையை அடைய வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். 7 மாவட்டங்களில் இந்தப் பணி நிறைவடைந்து விட்டது. அனைத்து மாநிலங்களிலும் மிக துரிதமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. நான் சிலவற்றையே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். நாட்டிலிருந்து அசுத்தம் என்ற இருளை அகற்றும் பணியில் பங்களிப்பு நல்கிய இந்த அனைத்து மாநிலங்களின் குடிமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     என் நேசம் நிறைந்த நாட்டுமக்களே, அரசில் ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன. முதல் திட்டத்தைத் தொடர்ந்து, அதனை ஒட்டி இரண்டாவது திட்டம் வரும் போது, முதல் திட்டம் துறக்கப்பட வேண்டும். ஆனால் பொதுவாக இந்த விஷயங்களின் மீது கவனம் செலுத்தப்படுவதில்லை. பழைய திட்டமும் நடைபெற்று வரும், புதிய திட்டமும் செயல்படுத்தப்பட்டு வரும், அடுத்து வரும் திட்டமும் எதிர்பார்க்கப்படும், இப்படியே நடந்து கொண்டு வரும். நமது நாட்டில் எந்த வீடுகளில் எரிவாயு அடுப்பு இருக்கிறதோ, எந்த வீடுகளில் மின்சாரம் இருக்கிறதோ, அவர்களுக்கு மண்ணெண்ணெய் தேவை இல்லை. ஆனால் அரசில் யார் கவலைப்படுகிறார்கள், மண்ணெண்ணெயும் அளிக்கப்படுகிறது, எரிவாயும் அளிக்கப்படுகிறது, மின்சாரமும் கிடைத்து வருகிறது, இந்த நிலையில் இடைத்தரகரக்ளுக்கு பணம் பண்ண வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டதற்காக நான் அரியானா மாநிலத்துக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மண்ணெண்ணையிலிருந்து அரியானாவுக்கு விடுதலை அளிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். எந்தெந்த குடும்பங்களில் எரிவாயு அடுப்பு இருக்கிறதோ, எந்தெந்த குடும்பங்களில் மின்சாரம் இருக்கிறதோ, ஆதார் எண் மூலமாக சரிபார்த்து, 7 அல்லது 8 மாவட்டங்களை மண்ணெண்ணையிலிருந்து விடுதலை அடைந்தவைகளாக அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டிருக்கும் முனைப்பைப் பார்க்கும் போது, வெகு விரைவிலேயே ஒட்டுமொத்த மாநிலமும் மண்ணெண்ணெயிலிருந்து விடுதலை அடைந்த மாநிலமாகி விடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்படிப்பட்ட ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் பாருங்கள், கள்ள மார்க்கெட் விற்பனை தடுக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு நன்மை உண்டாகும், நமது அந்நியச் செலாவணி சேமிக்கப்படும், மக்களுக்கு வசதியும் அதிகரிக்கும். ஆம், இடைத் தரகர்களுக்கும், நாணயமற்றவர்களுக்கும் கஷ்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

       எனது பாசம் நிறைந்த நாட்டுமக்களே, காந்தியடிகள் நம்மனைவருக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். நாடு எங்கே செல்ல வேண்டும், எப்படிப் பயணிக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவரது கூற்றுத் தான் தரநிலையை நிர்ணயம் செய்கிறது. நீங்கள் எப்போது எந்தத் திட்டத்தை ஏற்படுத்தினாலும், முதலில் ஏழைகள், நலிவடைந்தவர்கள் ஆகியோரின் முகங்களை நினைவில் கொண்ட பின்னர், நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தால் அந்த ஏழைக்கு ஏதேனும் பலன் கிடைக்குமா என்று சிந்தித்து செயல்படுங்கள், இதனால் அவர்களுக்கு எந்தத் துயரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற தரநிலையை அடியொற்றி நீங்கள் முடிவெடுங்கள் என்று காந்தியடிகள் கூறுவார். நாட்டின் ஏழைகளின் ஆசைகள் அபிலாஷைகளின் மீது நாம் கவனத்தை செலுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவர்களுக்கு இடர்களிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும், இதற்காக நாம் ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். நமது பழைய எண்ணப்பாடு எப்படிப்பட்டதாக இருந்தாலும், சமுதாயத்தை ஆண்-பெண் என்ற வேறுபாட்டிலிருந்து விடுதலை அடையச் செய்ய வேண்டும். இப்போது பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கும் கழிப்பறைகள் இருக்கின்றன, சிறுவர்களுக்கு எனவும் கழிப்பறைகள் இருக்கின்றன. நமது பெண் குழந்தைகள் வேறுபாடுகளற்ற பாரதம் என்ற நிலையை எட்ட இது ஒரு நல்ல தருணம்.

      அரசு தரப்பில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, ஆனாலும் கூட பல லட்சக்கணக்கான பிள்ளைகள் தடுப்பூசி போடப்படுவதிலிருந்து விடுபட்டுப் போக நேர்கிறது, நோய்களுக்கு இலக்காகிறார்கள். மிஷன் இந்திரதனுஷ் என்ற தடுப்பூசி இயக்கம், தடுப்பூசி போடப்படுவதிலிருந்து விடுபட்டுப் போன பிள்ளைகளுக்காக நடத்தப்படுவது, இது பயங்கரமான நோய்களிலிருந்து விடுதலை பெறும் சக்தியை குழந்தைகளுக்கு அளிக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம், ஆனால் கிராமத்தில் இருள் சூழ்ந்திருக்கிறது என்ற நிலை இனி தொடர முடியாது, கிராமத்தில் மின்சாரத்தைக் கொண்டு சேர்க்க ஒரு மிகப் பெரிய இயக்கம் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ஏழைத் தாய், விறகடுப்பில் உணவு சமைத்து, 400 சிகரெட்டுக்கள் உமிழும் புகையைத் தன் உடலில் தாங்கும் போது அவளது உடல்நலம் எப்படி இருக்கும்! 5 கோடி குடும்பங்களுக்கு புகையிலிருந்து விடுதலை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

      சிறிய வியாபாரி, சிறுதொழில் செய்வோர், காய்கறி விற்பவர், பால் விற்பனையாளர், முடிதிருத்தும் கடை நடத்துபவர் ஆகியோர் அடகுத் தொழில் புரிவோரிடம் வட்டிக்குக் கடன் வாங்கி சிக்கிக் கொள்கிறார்கள். முத்ரா திட்டம், stand up திட்டம், ஜன் தன் திட்டம், இவை வட்டிக்குக் கடன் கொடுப்போரிடமிருந்து விடுதலை பெறத் தொடங்கப்பட்டிருக்கும் வெற்றிகரமான இயக்கங்கள். ஆதார் மூலமாக வங்கிகளில் நேரடியாகவே பணத்தை செலுத்தல், உரிமைதாரர்களுக்கு, பயனாளிகளுக்கு நேரடியாக பணம் கிடைத்தல். சாமான்யர்களின் வாழ்வில் தரகர்களிடமிருந்து விடுதலை பெற ஒரு நல்ல வாய்ப்பு. வெறும் மாற்றத்தையும், மேம்பாட்டையும் மட்டுமே ஏற்படுத்தும் இயக்கமாக இது நின்று விடாமல், பிரச்சனையிலிருந்து விடுதலை அளிக்கும் பாதையை செம்மையாக்க வழிவகை செய்யப்பட வேண்டும், அப்படி நடந்தும் வருகிறது.

    என் நெஞ்சில் நிறைந்த நாட்டுமக்களே, நாளை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இந்த நாட்டின் மாமனிதர், பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு தனது வாழ்கையையே தாரக மந்திரமாக்கியளித்தவர், அப்படியே வாழ்ந்தும் காட்டியவரான சர்தார் வல்லப் பாய் படேல் அவர்கள் பிறந்த திருநாள். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி, ஒரு புறம் ஒருமைப்பாட்டின், வாழும் மாமனிதரான சர்தார் அவர்களின் பிறந்த நாள் என்றால், மற்றொரு புறம் திருமதி காந்தி அவர்களின் நினைவு நாள். மாமனிதர்கள் பற்றிய நினைவுகளால் நம் நெஞ்சங்களை நாம் நிறைத்துக் கொள்கிறோம், அப்படி செய்யவும் வேண்டும். ஆனால் பஞ்சாபிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, அதிலிருந்த வலி, என் மனதைத் தொட்டது –

      ”பிரதமர் அவர்களே, வணக்கம், சார், நான் பஞ்சாபிலிருந்து ஜஸ்தீப் பேசுகிறேன். சார், அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாள். சர்தார் படேல் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டை ஒன்றிணைக்கப் பாடுபட்டார், அவர் இந்த இலக்கில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அனைவரையும் ஒன்றுபடுத்தியிருக்கிறார். நாட்டின் துரதிர்ஷ்டம் என்பதா, வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அன்றைய தினத்தில் தான் திருமதி இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் நாட்டில் எப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழ்ந்தன என்பது நாமனைவருக்கும் நன்கு தெரியும். இப்படிப்பட்ட துர்பாக்கியமான நிகழ்வுகளை நாம் எப்படி தடுப்பது என்பது பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”.

    என் உயிரினும் மேலான என் நாட்டுமக்களே, இந்த வலி ஒரு மனிதனுடையது மட்டுமல்ல. சாணக்கியனுக்குப் பிறகு, நாட்டை ஒருங்கிணைக்கும் பகீரதப் பணியை ஒரு சர்தார், சர்தார் வல்லப் பாய் படேல் செய்திருக்கிறார். சுதந்திர இந்தியாவை ஒரு கொடியின் கீழ் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான முயற்சியை, இத்தனை பெரிய பகீரதப் பிரயத்தனத்தை செயல்படுத்திய அந்த மாமனிதருக்கு அனந்த கோடி வணக்கங்கள். சர்தார் படேல் அவர்கள் ஒருமைப்பாட்டுக்காக முயற்சிகளை மேற்கொண்டார், ஒருமைப்பாடு அவரது முதன்மை நோக்கமாக இருந்த காரணத்தால், பலரது கோபத்துக்கும் அவர் ஆளாக நேர்ந்தது என்றாலும், அவர் ஒருமைப்பாடு என்ற பாதை, இலக்கிலிருந்து சற்றும் தளரவே இல்லை; ஆனால் அதே சர்தாரின் பிறந்த நாளன்று, ஆயிரக்கணக்கான சர்தார்கள், ஆயிரக்கணக்கான சர்தார்களின் குடும்பங்கள், திருமதி இந்திரா காந்தி அவர்களின் படுகொலைக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள். ஒருமைப்பாட்டுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த அந்த மாமனிதரின் பிறந்த நாளன்று, சர்தார்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட கொடுமை வரலாற்றின் ஒரு பக்கமாக, நம்மனைவருக்கும் வலியைத் தந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த சங்கடங்களுக்கு இடையிலும் கூட, ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தான் நாட்டின் மிகப் பெரிய பலம். பல மொழிகள், பல சாதிகள், பல ஆடை-அணிகள், பல உணவு முறைகள் என பலவகைப்பட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை தான் பாரதத்தின் பலம், பாரதத்தின் சிறப்பு. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு கடமை இருக்கிறது. நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒற்றுமைக்கான வாய்ப்பைத் தேடுவதிலும், ஒற்றுமை சித்தாந்தத்தை முன்னிறுத்துவதிலும் ஒவ்வொரு அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. பிரிவினைவாத எண்ணங்கள், பிளவு ஏற்படுத்தும் இயல்புகளிலிருந்து நாமும் விலகியிருப்போம், நாட்டையும் காப்போம். சர்தார் அவர்கள் நமக்கு ஒன்றிணைந்த பாரதம் ஒன்றினை அளித்திருக்கிறார், அதை உன்னதமான பாரதமாக ஆக்குவதில் நம்மனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒருமைப்பாடு என்ற மூல மந்திரம் தான் உன்னதமான பாரதம் என்ற பலமான அஸ்திவாரத்தை ஏற்படுத்துகிறது.

சர்தார் அவர்களின் வாழ்க்கைப் பயணம் விவசாயிகள் போராட்டத்தில் தான் துவங்கியது. அவர் ஒரு விவசாயியின் புதல்வர். விடுதலை வேள்வியை, விவசாயிகள் வரை கொண்டு செல்ல சர்தார் அவர்கள் மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தை கிராமத்தில் வலுவடையச் செய்ததில் சர்தார் அவர்களின் பங்குபணி மகத்தானது. அவரது அமைப்புத் திறன், ஆற்றல் ஆகியவற்றின் விளைவு தான் இது. ஆனால் சர்தார் அவர்கள் வெறும் போராட்டங்களோடு நின்று விடவில்லை, அவர் கட்டமைப்பை உருவாக்குவதிலும் சமர்த்தராக விளங்கினார். இன்று நாம் அமுல் என்ற பெயரைக் கேள்விப்படுகிறோம். அமுலின் ஒவ்வொரு பொருளும் இந்தியாவிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி அறிமுகமான ஒன்று. ஆனால் சர்தார் அவர்களின் தொலைநோக்குப் பார்வை காரணமாகவே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுத் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது என்பது வெகு சிலருக்கே தெரிய வாய்ப்பிருக்கிறது. கேடா மாவட்டம் அந்த நாட்களில் கேரா என்று அழைக்கப்பட்டது, 1942இல் அவர் இந்தக் கருத்துக்கு வலு சேர்த்தார், அதன் உருவமைப்பாக இன்று மிளிரும் அமுல் நிறுவனம், விவசாயிகளின் நலன்களுக்காக எப்படி சர்தார் அவர்கள் செயல்பட்டார் என்பதற்கான வாழும் ஒரு எடுத்துக்காட்டாக நம் முன்னே இருக்கிறது. நான் சர்தார் அவர்களுக்கு என் மரியாதையுடன் கூடிய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமைப்பாடு நாளான அக்டோபர் 31ஆம் தேதியன்று நாம் எங்கிருந்தாலும், சர்தார் அவர்களை நினைவில் கொள்வோம், ஒற்றுமைக்கான உறுதி பூணுவோம்.

     என் உள்ளம்நிறை நாட்டு மக்களே, இந்த தீபாவளித் தொடரில் கார்த்திகை பவுர்ணமி என்பது ஒளி உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. குரு நானக் தேவ் அவர்களின் அறவுரைகள் ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்குமானது, இது இந்தியாவுக்கு மட்டும் உரைக்கப்பட்டதல்ல, ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் சொந்தமானது, இது இன்றும் வழிகாட்டியாகத் துலங்குகிறது. சேவை, வாய்மை, சர்பத் தா பலா, அதாவது அனைவருக்குமான நன்மை - இவை தாம் குரு நானக் தேவ் அவர்களின் செய்தி. அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவையே மூல மந்திரங்களாகும். வேற்றுமை, மூடநம்பிக்கை, தீய பழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து சமுதாயத்துக்கு விடுதலை அளிக்கும் நோக்கம் தான் குரு நானக் தேவ் அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் அடங்கி இருந்தது. நம்மிடையே தீண்டாமை, சாதிக் கொடுமைகள், உயர்ந்தோர்-தாழ்ந்தோர் ஆகிய சீரழிவுகள் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டத்தில், குரு நானக் தேவ் அவர்கள், Bhai Lalo, பாய் லாலோ ஆகியோரைத் தனது சகாக்களாகத் தேர்ந்தெடுத்தார். நாமும் கூட, குரு நானக் தேவ் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் ஞான மார்க்கத்தில் பயணிப்போம். இது பேதங்களை அகற்ற கருத்தூக்கம் அளிக்கிறது, பேதபாவங்களுக்கு எதிராக போராட ஆணை பிறப்பிக்கிறது; அனைவரையும் அரவணைத்து, அனைவருக்கும் முன்னேற்றம் ஏற்படுத்துவது என்ற இலக்கை இந்த மந்திரத்தின் துணை கொண்டு தான் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; இதற்கெல்லாம் குரு நானக் தேவை விடச் சிறந்த வழிகாட்டி வேறு யாராக இருக்க முடியும். நான் குரு நானக் தேவ் அவர்களுக்கும், ஒளி நிறைந்த உற்சவத்தை ஒட்டி, நெஞ்சு நிறைந்த வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.

    என் உயிரில் கலந்த என் நாட்டுமக்களே, மீண்டும் ஒரு முறை, நாட்டின் படைவீரர்களின் பெயரால் கொண்டாடப்படும் இந்த தீபாவளியன்று, உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை உரிமையாக்குகிறேன். உங்களின் கனவுகள், உங்களின் உறுதிப்பாடுகள், அனைத்து விதங்களிலும் வெற்றி காணட்டும். உங்கள் வாழ்வு அமைதியாக அமைய, நான் என் மனமார்ந்த வாழ்த்துகளைக் காணிக்கையாக்குகிறேன். மிக்க நன்றி!!