மக்களும் பங்குபெறக்கூடிய வகையிலான ஆக்கபூர்வமான நிர்வாகத்திற்கும், உரிய நேர செயல்பாட்டுக்கும் உதவும் ஒருங்கிணைந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சார்ந்த பிரகதி (PRAGATI) எனும் பன்முகட்டு இயக்குதளம் மூலம் இன்று தனது பதினாறாவது கலந்துரையாடலை நிகழ்த்தினார் பிரதமர்
தொழிலாளர் வைப்பு நிதியம், தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.5), லேபர் கமிஷனர் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்ந்த புகார்களை நிவர்த்தி செய்வதில் எத்தகைய முன்னேற்றம் உள்ளது என்பது குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். புகார்களை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்து செயலாளர் விளக்கினார். கேட்புத்தொகையை ஆன்லைன் மூலம் பெறவும், எலக்ட்ரானிக் செலுத்துச்சீட்டு, மொபைல் செயலிகள், குறுந்தகவல் அறிவிப்புகள், UANஐ ஆதார் எண்ணுடன் இணைப்பது, தொலைதூர மருத்துவச் சேவை அறிமுகம், நிறைய பல்சேவை மருத்துவமனைகளை அதிகாரபூர்வ பட்டியலில் சேர்ப்பது ஆகியவை அதில் அடங்கும்.
தொழிலாளர் மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி பயனாளர்கள் தரப்பில் நிறைய புகார்கள் வருவது குறித்து அக்கறை தெரிவித்த பிரதமர், தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து அரசு செயல்படும் என தெரிவித்தார். சட்டபூர்வமான தங்கள் பணத்தை பெற ஜனநாயக நாட்டில் தொழிலாளர்களுக்கு எந்த கஷ்டமும் இருக்க கூடாது என்றும், ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே அவர்களுக்கு தரப்பட வேண்டிய ஓய்வூதியம் சம்பந்தமான அலுவல் பணிகளை துவங்குவதற்கு ஏதுவான நிர்வாகமுறை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறினார். எதிர்பாராத மரணம் நிகழும் நிலையில் உடனுக்குடன் அனைத்து பணிகளையும் முடித்து, கொடுக்கப்படவேண்டிய பணம் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அதிகாரிகளே பொறுப்பு என்றும் பிரதமர் கருத்து தெரிவித்தார்.
E-NAM முன்னெடுப்பு எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து பிரதமர் ஆய்ந்த போது, ஏப்ரல் 2016ல் 8 மாநிலங்களில் 21 மண்டிகளுடன் துவங்கப்பட்ட இத்திட்டம் இப்போது 10மாநிலங்களில் 250மண்டிகளாக விரிவாக்கம் பெற்றுள்ளது. 13மாநிலங்கள் APMC சட்டத்தை திருத்தியுள்ளன. பிற மாநிலங்களும் சீக்கிரமாக APMC சட்டட்தை திருத்தி நாடு முழுதும் இத்திட்டத்தை பரவச்செய்ய வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். மதிப்பிடல் மற்றும் தரம்பிரித்தல் வசதிகள் கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் மண்டிகளில் தங்கள் பொருட்களை விற்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் e-NAM திட்டத்திற்கு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, கேரளா, உத்தரபிரதேசம், தில்லி, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், சிக்கிம், மேற்குவங்கம், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளான ரயில்வே, சாலைகள், ஆற்றல், இயற்கை வாயு துறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளையும் பிரதமர் ஆய்வு செய்தார். திட்டங்களை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதன் மூலம் அதிக செலவீனங்களை தவிர்க்க முடியும் என்றும், திட்டப்பயன்கள் மக்களை முறையாக போய் சேரும் என்றும் தெரிவித்தார். இரண்டாம் கட்ட ஐதராபாத்-செகந்தராபாத் மல்டி-மோடல் போக்குவரத்து திட்டம், அங்கமலி-சபரிமலை ரயில்வே லைன், தில்லி-மீரட் எக்ஸ்பிரஸ் பாதை, சிக்கிம் ரெனோக்-பாக்யாங்க் சாலை, கிழக்கிந்தியாவில் ஐந்தாம் கட்ட மின்சக்தி உட்கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் இன்று ஆய்வுசெய்யப்பட்டன. உத்தரபிரதேசத்தில் ஃபுல்புர்-ஹால்டியா வாயு குழாய் பதிப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
புத்துயிர்ப்பு மற்றும் நகரமயமாக்கலுக்கான அடல் மிஷன் திட்டத்தின் (AMRUT) மேம்பாடுகளும் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது. AMRUT திட்டத்தின் கீழ் உள்ள 500 நகர மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு தலைமை செயலாளர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். நகர் என்ற இந்தி வார்த்தையில் ’ந’ல் என்பது குடிநீர் என்றும், ’க’ட்டர் என்பது சாக்கடை வசதிகள் என்றும், ’ர’ஸ்தா என்பதை சாலைகள் என்றும் எடுத்துக்கொள்ளவேண்டும் என பிரதமர் தெரிவித்தார். AMRUT திட்டம் குடிமக்களை மையமாக கொண்டு இயங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் எல்லா மாற்றங்களும் எல்லா துறைகளிலும் நடக்கவேண்டுமென வேண்டினார். வர்த்தகம் செய்வதற்கான எளிய வழிமுறைகள் குறித்த உலக வங்கியின் அறிக்கையை குறிப்பிட்ட பிரதமர் அனைத்து தலைமை செயலாளர்களையும், இந்திய அரசு செயலாளர்களையும் அந்த அறிக்கையை படிக்குமாறும், எந்தெந்த துறைகளில் அது சார்ந்து மாற்றங்களை செய்ய முடியும் என கண்டறியுமாறும் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் ஒரு மாதத்திற்கும் இதுகுறித்த அறிக்கை வேண்டும் என்றும், அந்த அறிக்கைகளை அமைச்சரவை செயலாளர் ஆய்வு செய்வார் என்றும் குறிப்பிட்டார்.
திட்டங்களை விரைவாக முடிக்க ஏதுவாக மத்திய அரசின் பட்ஜட் தாக்கல் ஒருமாதத்திற்கு முன்பே நடக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களையும் இதற்கேற்ப தயார் செய்துகொள்ளுமாறும், சூழ்நிலையை முடிந்த அளவு சாதகமாக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
சர்தார் பட்டேல் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து செயலாளர்கள் மற்றும் தலைமை செயலாளர்களையும் ஒவ்வொரு துறையிலும் ஒரே ஒரு இணையதளமாவது அங்கீகரிக்கப்பட்ட இந்திய அலுவல் மொழிகள் அனைத்திலும் இருக்குமாறு உறுதிசெய்யும்படி கேட்டுக்கொண்டார்.