When the entire country stands with our forces, the strength of our jawans increases 125 crore times: PM Modi during #MannKiBaat
Decision to implement demonetisation wasn’t easy. There will be inconvenience to rid the country of troubles of 70 years: PM #MannKiBaat
Govt, post offices, banks are working hard & with dedication to fight evils of black money & corruption: PM Modi during #MannKiBaat
Despite inconvenience, people across the country have accepted demonetisation drive. This shows their potential: PM during #MannKiBaat
Villages, farmers & small traders have a pivotal role in our country’s economy: PM Modi during #MannKiBaat
Urge small traders to embrace technology by using banking apps & digital payment systems: PM Modi during #MannKiBaat
By embracing technology, we can build a cashless society. This will be a big transformation: PM during #MannKiBaat
We can gradually move from a ‘less-cash’ society to a cashless society. Youth can play a major role in this: PM Modi during #MannKiBaat
Youth can be the agents of change in fighting black money & corruption: PM Narendra Modi during #MannKiBaat

‘எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். கடந்த மாதங்களில் நாம் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும் தீபாவளியின் போது, நான் மீண்டும் ஒரு முறை படை வீரர்களோடு தீபாவளியைக் கொண்டாடி மகிழ, சீன எல்லைப் பகுதிகளுக்குச் சென்றேன். ITBP, இந்திய திபேத்திய எல்லைப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோருடன் நான் இமயத்தின் சிகரங்களில் தீபாவளியைக் கொண்டாடினேன். நான் ஒவ்வொரு முறையும் செல்கிறேன், ஆனால் இந்த தீபாவளி அளித்த அனுபவம் அலாதியானது. நாட்டின் 125 கோடி மக்களூம் இந்த தீபாவளியை பாதுகாப்புப் படையினருக்கு அர்ப்பணித்தார்கள், இதன் தாக்கம் அங்கே இருந்த ஒவ்வொரு பாதுகாப்புப் படைவீரர் முகத்திலும் பிரதிபலித்தது. அவர்கள் உணர்வுகள் நிறைந்து காணப்பட்டார்கள்; இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் எனக்கு அனுப்பிய நல்வாழ்த்துச் செய்திகள், அவர்கள் தங்கள் சந்தோஷங்களில் நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு பங்களித்தது ஆகியன அற்புதமான மறுமொழியாக அமைந்தது. மக்கள் வெறும் தகவல்களை மட்டும் அனுப்பவில்லை, மனதோடு இணைந்தார்கள்; ஒருவர் கவிதைகளை வடித்தார், மற்றவர் படங்கள் வரைந்தார், வேறு ஒருவர் கார்ட்டூன்களை உருவாக்கினார், மற்றுமொருவர் வீடியோ தயாரித்தார். அதாவது ஒவ்வொரு இல்லமும் படைவீரர்கள் வசிக்கும் இடங்கள் போல ஆனது. கடிதங்களைக் காணும் போது, மக்கள் மனங்களில் தான் எத்தனை கற்பனைத் திறன் இருக்கிறது, எவ்வளவு உணர்வுகள் இருக்கின்றன என்று நான் சொக்கிப் போனேன்; இவற்றையெல்லாம் பார்த்த பிறகு இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஒரு காபி டேபிள் புத்தகமாக (coffee table book) வடிவமைக்கலாம் என்று mygovஇல் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, உங்கள் அனைவரின் பங்களிப்பு மூலமாக, நாட்டின் படைவீரர்களின் உணர்வுகளை பற்றிய உங்கள் கற்பனை, நாட்டின் பாதுகாப்புப் படைகள் பற்றிய உங்கள் உணர்வு-உலகம் ஆகியன இந்தத் தொகுப்பில் இடம் பெறும்.

படையின் ஒரு வீரர் எனக்கு எழுதியிருந்தார் – பிரதமர் அவர்களே, படைவீரர்களான எங்கள் அனைவருக்குமே, தீபாவளி, ஹோலி போன்ற ஒவ்வொரு பண்டிகையும் எல்லைப்புறங்களிலேயே அமையும்; ஒவ்வொரு கணத்தையும் நாங்கள் நாட்டின் பாதுகாப்பு பற்றிய எண்ணங்களிலேயே செலவிடுவோம். ஆம், இருந்தாலும், பண்டிகை நாட்களில் வீடு பற்றிய நினைப்பு வந்து விடுகிறது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த முறை அப்படிப்பட்ட நினைப்பே ஏற்படவில்லை. இந்தப் பண்டிகை நாளிலே நாம் வீட்டில் இல்லையே என்ற எண்ணம் கொஞ்சம் கூட ஏற்படவே இல்லை. ஏதோ, 125 கோடி பாரதவாசிகளோடு சேர்ந்து நாங்களும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தோம்.

            எனதருமை நாட்டுமக்களே. இந்த தீபாவளிப் பண்டிகையின் போது, நமது நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கிடையில், படைவீரர்கள் மனதில் துளிர்த்த உணர்வு இந்த வேளையில் உண்டான அனுபவம், சில கணங்களோடு மறைந்து போக வேண்டுமா? நாம், ஒரு சமுதாயம் என்ற வகையில், நாடு என்ற முறையில், இந்த உணர்வை ஏற்படுத்துவது நமது இயல்பாக ஆக வேண்டும், நம் உணர்வுகளில் கலக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சரி, பண்டிகையாக இருந்தாலும் சரி, சந்தோஷமான வேளையாக இருந்தாலும் சரி, நமது நாட்டின் படைவீரர்களை நாம் ஏதாவது ஒரு வகையில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதுமே படையினரோடு தோளோடு தோள் நிற்கும் போது, படையின் பலமும் சக்தியும் 125 கோடி மடங்கு அதிகரிக்கும் என்பது உறுதி.

            சில காலம் முன்பாக ஜம்மு கஷ்மீரத்தின் கிராமங்களைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். இவர்கள் ஜம்மு கஷ்மீரத்தின் பஞ்சாயத்து மாநாட்டைச் சேர்ந்தவர்கள். கஷ்மீரப் பள்ளத்தாக்கின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்தார்கள். சுமார் 40-50 தலைவர்கள் இருந்தார்கள். கணிசமான நேரம் வரை அவர்களோடு உரையாடும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவர்கள் தங்கள் கிராமங்களின் வளர்ச்சி தொடர்பான சில விஷயங்களைப் பேச வந்திருந்தார்கள், சிலர் சில கோரிக்கைகளோடு வந்திருந்தார்கள், ஆனால் உரையாடல் நீளத் தொடங்கிய போது, பள்ளத்தாக்கின் சூழல், சட்டம் ஒழுங்கு நிலைமை, பிள்ளைகளின் எதிர்காலம், என பல்வேறு விஷயங்கள் அதில் இடம் பெற்றன என்பது இயல்பான ஒன்றாக அமைந்தது. மிக்க அன்போடும், திறந்த மனதோடும், கிராமத்தின் இந்தத் தலைவர்கள் உரையாடிய விதம் இதயத்தைத் தொடும்படியாக அமைந்தது. பேச்சு வாக்கில், கஷ்மீரத்தில் எரிக்கப்பட்ட பள்ளிகள் பற்றிய பேச்சு எழுந்த போது, நம் நாட்டுமக்களுக்கு இதனால் எத்தனை துயரம் ஏற்பட்டதோ, அதைப் போலவே இந்த கிராமத் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது; பள்ளிகள் எரிக்கப்படவில்லை, பிள்ளைகளின் எதிர்காலம் தீக்கிரையாக்கப் பட்டிருக்கிறது என்றே அவர்கள் கருதினார்கள். நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பிறகு இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் என்று வேண்டிக் கொண்டேன். கஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்த இந்த அனைத்துத் தலைவர்களும் எனக்கு அளித்த வாக்கினை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது; அவர்கள் கிராமங்களுக்குச் சென்று தொலைவில் இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டினார்கள். சில நாட்கள் முன்பாக வாரியத் தேர்வுகள் நடைபெற்ற போது, கஷ்மீரத்தின் 95 சதவீதக் குழந்தைகள், இந்த வாரியத் தேர்வுகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். வாரியத் தேர்வுகளில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் மாணவ மாணவியர் பங்கு எடுத்துக் கொள்வது என்பது, ஜம்மூ கஷ்மீரத்தின் நமது குழந்தைகள் வளமான எதிர்காலத்துக்காக, கல்வி வாயிலாக, வளர்ச்சியின் புதிய சிகரங்களை எட்ட மனவுறுதி பூண்டிருக்கிறார்கள் என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. அவர்களின் இந்த ஊக்கத்திற்காக நான் அந்த மாணவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவர்களின் பெற்றோர், உறவினர்கள், அவர்களின் ஆசிரியர்கள், அனைத்து கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கும் எனது இருதய பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

            அன்பு நிறை சகோதர சகோதரிகளே, இந்த முறை நான் மனதின் குரலுக்காக மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரிய போது, அனைவரின் ஆலோசனைகளும் ஒரு விஷயம் பற்றியே வந்தது. அனைவருமே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் குறித்து நான் விரிவான முறையில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு நான் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பேரியக்கத்தைத் தொடங்குவது பற்றிப் பேசினேன். எந்த வேளையில் நான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேனோ, அதை உங்கள் முன்பாக வைத்தேனோ, அப்போதே இந்த முடிவு சாதாரணமானது அல்ல, கஷ்டங்கள் நிறைந்த ஒன்று என்று நான் பொதுப்படையாகவே கூறினேன். ஆனால் தீர்மானம் எத்தனை மகத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியம் அதை செயல்படுத்துவது என்பதும். நமது சராசரி வாழ்க்கையில் பலவகையான புதுப்புது கடினங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது எனக்கு உத்தேசமாகத் தெரியும். அப்போதுமே கூட இந்த முடிவு மிகப் பெரியது, இதன் பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வர 50 நாட்கள் ஆகி விடும் என்று கூறியிருந்தேன். அதன் பிறகு தான் இயல்பு நிலை நோக்கி நம்மால் அடியெடுத்து வைக்க முடியும். 70 ஆண்டுக்காலமாக நாம் என்னென்ன நோய்களையெல்லாம் சுமந்து வருகிறோமோ, அந்த நோய்களிலிருந்து விடுதலை பெறும் முயற்சி என்பது அத்தனை சுலபமாக இருக்க முடியாது. நீங்கள் சந்திக்கும் கஷ்டங்களை எல்லாம் என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் உங்கள் ஆதரவை நான் பார்க்கும் வேளையில், உங்கள் ஒத்துழைப்பைக் காணும் போதினில், உங்களை திசை திருப்பி மிரள வைக்கும் ஏராளமான முயற்சிகளையும், தொய்வடைய வைக்கும் முயற்சிகளையெல்லாம் தாண்டி, நீங்கள் சத்தியமான இந்த வழியை நன்கு புரிந்து கொண்டு விட்டீர்கள், நாட்டு நலன் கருதி இந்த விஷயத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், இத்தனை பெரிய தேசம், இத்தனை அளவு நோட்டுக்கள், பல இலட்சம் கோடி நோட்டுக்கள், இப்படிப்பட்ட தீர்மானம் – ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது, ஒவ்வொரு பொருளாதார வல்லுனரும் இதை அதிகம் அலசிக் கொண்டிருக்கிறார்கள், மதிப்பீடு செய்து வருகிறார்கள். இந்துஸ்தானத்தின் 125 கோடி நாட்டு மக்களும் இடர்களை சகித்துக் கொண்டு வெற்றி பெற்று விடுவார்களா என்று ஒட்டு மொத்த உலகமும் இந்த விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தோர் மனங்களில் ஒரு வேளை கேள்விக்குறி இருக்கலாம்! பாரதத்துக்கு, பாரதத்தின் 125 கோடி நாட்டு மக்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது, 125 கோடி நாட்டு மக்களும் தங்கள் மனவுறுதிப்பாட்டின் இலக்கை எட்டியே தீர்வார்கள் என்ற உறுதிப்பாடு இருக்கிறது. நமது தேசம் சொக்கத் தங்கத்தைப் போல, ஒவ்வொரு வகையிலும் தகித்துப் பிரகாசிக்கும் என்றால் இதற்கான முழுமுதற் காரணம் நமது நாட்டின் குடிமக்கள் தான், அதற்கான காரணம் நீங்கள் தான், இந்த வெற்றிப் பாதை கூட உங்கள் காரணமாகத் தான் சாத்தியமாகியிருக்கிறது.

நாடு முழுவதிலும் மத்திய அரசு, மாநில அரசுகள், வட்டார உள்ளாட்சி அமைப்புக்களின் அனைத்துப் பிரிவுகள், ஒரு இலட்சத்து 30000 வங்கிக் கிளைகள், இலட்சக்கணக்கான வங்கிப் பணியாளர்கள், ஒண்ணரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்கள், ஒண்ணரை இலட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி முகவர்கள், இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு இதில் பங்கு கொண்டார்கள். பலவகையான அழுத்தங்களுக்கு இடையில், இவர்கள் அனைவரும் மிகவும் அமைதியான மனதோடு, இந்த நாட்டுப்பணியை ஒரு வேள்வியாகவே கருதி, ஒரு மகத்தான மாற்றம் ஏற்படுத்தும் ஒரு முயற்சி என்றே கருதி இதில் முழுமனதோடு ஈடுபட்டார்கள். காலையில் தொடங்கி, இரவு எப்போது நிறைவு செய்வார்கள் என்பது தெரியக் கூட செய்யாது, ஆனால் அனைவரும் செய்கிறார்கள். இதன் விளைவாகத் தான் பாரதம் இந்தப் பணியில் வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் கூட, வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் அனைவரும் பணியாற்றுகிறார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். மனித நேயம் என்ற விஷயம் வரும் போது, அவர்கள் சற்றுக் கூடுதலாகவே பயணித்துத் தான் செயல்பட்டு வருகிறார்கள். கண்டவா என்ற இடத்தில் ஒரு வயதானவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று ஒருவர் என்னிடம் கூறினார். திடீரென்று பணம் தேவைப்பட்டது. அங்கே இருக்கும் வங்கிப் பணியாளர் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்ட போது, அவரே நேரில் முதியவர் இல்லம் சென்று பணத்தை சேர்ப்பித்து, சிகிச்சைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட கணக்கே இல்லாத பல சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் டிவியில், ஊடகங்களில், செய்தித் தாள்களில், உரையாடல்களில் இடம் பெறுகின்றன. இந்த மகா வேள்வியில் உழைப்பவர்கள், பங்களிப்பு நல்குபவர்கள் என அனைத்துத் தோழர்களுக்கும் நான் என் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோதித்துப் பார்க்கும் போது தான் உண்மையான சக்தி என்ன என்பது புரிய வரும். பிரதம மந்திரியின் ஜன் தன் திட்ட இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வந்த போது, வங்கிப் பணியாளர்கள் எப்படி அதை தங்கள் தோள்களில் சுமந்தார்கள், 70 ஆண்டுகளில் முடியாத ஒரு காரியத்தை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்கள் தங்கள் திறமையை அப்போது வெளிப்படுத்தினார்கள். இன்று மீண்டும் ஒரு முறை அதே போன்றதொரு சவாலை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள், 125 கோடி நாட்டுமக்களின் மனவுறுதி, அனைவரின் சமுதாய ரீதியிலான முனைப்பு, இந்த தேசத்தை ஒரு புதிய சக்தியாக உருமாற்றி சிறப்புறச் செய்யும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் தீயவை எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்றால், இன்றும் கூட சிலரிடமிருந்து தீய நடைமுறைகள் ஒரு பழக்கமாகிப் புரையோடி இருக்கின்றன. இப்போதும் கூட இந்த ஊழல் பணம், இந்த கருப்புப் பணம், கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம், பினாமிப் பணம், ஆகியவற்றை ஏதோ ஒரு வழியைத் தேடிப் பிடித்து உயிர்ப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பணத்தைக் காபந்து செய்ய சட்ட விரோதமான செயல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் ஏழைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி. ஏழைகளை மதி மயக்கி, ஆசை வார்த்தைகள் பேசி அல்லது மனதை மயக்கி, அவர்களின் கணக்குகளில் பணத்தைப் போட்டோ, அவர்களிடமிருந்து ஏதோ ஒரு வேலையை வாங்கிக் கொண்டோ, தங்கள் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பேர்வழிகளிடம் நான் இன்று கூறிக் கொள்ள விரும்புவது ஒன்று தான் – திருந்துவதோ, திருந்தாமல் போவதோ உங்கள் இஷ்டம், சட்டத்தை மதித்து நடப்பதோ, நடக்காமல் இருப்பதோ உங்கள் இஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் தயவு செய்து நீங்கள் ஏழைகளின் வாழ்கையோடு விளையாடாதீர்கள். பதிவுகளில் ஏழையின் பெயர் வந்து, பின்னர் புலனாய்வின் போது என் பிரியமான ஏழை உங்கள் பாவச்செயல் காரணமாகப் பிரச்சனையில் சிக்கும் வகையில் ஏதும் செய்யாதீர்கள். பினாமிச் சொத்துக்கள் தொடர்பாக மிகவும் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது, இது அமலுக்கு வரவிருக்கிறது, அதில் நிறைய கஷ்டங்கள் ஏற்படும். நமது நாட்டுமக்களுக்கு எந்த விதமான கஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதையே அரசு விரும்புகிறது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷீஷ் அவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாயிலாக ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர் பற்றி எனக்குத் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார், இதைப் பாராட்டினார் –

ஐயா வணக்கம், எனது பெயர் ஆஷீஷ் பாரே. நான் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தில் இருக்கும் திராலி தாலுகாவின் திராலி கிராமத்தில் வசிக்கிறேன். நீங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் நாணய விலக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது. பல அசவுகரியங்களைப் பொறுத்துக் கொண்டும் கூட தேசத்தின் முன்னேற்றத்துக்காக இந்தக் கடுமையான முயற்சிக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் பல எடுத்துக்காட்டுகள் மூலமாக மனதின் குரலில் விளக்க வேண்டும் என்று விரும்புகிறேன்; இதனால் மக்களுக்கு ஒரு வகையில் உற்சாகம் அதிகரிக்கும், தேசத்தை உருவாக்கும் பணியில் ரொக்கமில்லா வழிமுறை மிகவும் அவசியமானது, நான் ஒட்டுமொத்த நாட்டோடு இசைந்திருக்கிறேன், நீங்கள் இந்த 500-1000 ரூபாய் நோட்டுக்கள் விலக்கி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, என்று கூறியிருக்கிறார்.

 

இதே போல கர்நாடகத்தைச் சேர்ந்த யெல்லப்பா வேலான்கர் அவர்களும் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார் –

மோடிஜி வணக்கம், நான் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலிருந்து பேசுகிறேன். உங்களுக்கு நான் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால், நீங்கள் தானே நல்ல நாட்கள் பிறக்கும் என்று சொன்னீர்கள்; ஆனால் இத்தனை பெரிய முயற்சியை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மூலமாக கருப்புப் பணம் வைத்திருப்போர், ஊழல்வாதிகள் ஆகியோருக்கு நல்லதொரு பாடத்தை நீங்கள் புகட்டியிருக்கிறீர்கள். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கா விட்டால், பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல காலம் எப்போதுமே ஏற்பட்டிருக்காது. இதற்காகவே நான் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

சில விஷயங்கள் ஊடகம் மூலமாக, மக்கள் வாயிலாக, அரசு தரப்புகளிலிருந்து கிடைக்கப் பெறும் போது பணியாற்ற உற்சாகம் அதிகரிக்கிறது. என் தேசத்தின் சாமான்ய பிரஜையிடம் என்ன ஒரு அற்புதமான திறன் இருக்கிறது என்பது தெரிய வரும் போது அளவில்லாத ஆனந்தமும், பெருமிதமும் உண்டாகிறது. மகாராஷ்ட்ரத்தின் அகோலாவில், தேசிய நெடுஞ்சாலை 6இல் ஒரு உணவு விடுதி இருக்கிறது. அவர்கள் ஒரு மிகப் பெரிய அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறார்கள்; உங்கள் வசம் பழைய நோட்டு இருந்தால் கூட, நீங்கள் உணவு உண்ண விரும்பினால், பணம் பற்றி கவலைப் பட வேண்டாம், இங்கிருந்து பசியோடு மட்டும் திரும்பிச் செல்ல வேண்டாம், உணவை உண்டு விட்டே செல்ல வேண்டும், எப்போதாவது இந்தப் பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டி வந்தால், கண்டிப்பாக பணத்தை செலுத்துங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அங்கே மக்கள் செல்கிறார்கள், உணவு உண்கிறார்கள், 2-4-6 நாட்களுக்குப் பிறகு அந்த வழியாக மீண்டும் பயணிக்கும் போது, அவர்கள் பணத்தைத் திரும்பச் செலுத்துகிறார்கள். இது தான் என் தேசத்தின் சக்தி, இதில் சேவை மனப்பான்மை, தியாக உணர்வு ஆகியவை பளிச்சிடுகின்றன.

தேர்தல் காலத்தில் நான் தேநீர் வேளை உரையாடலில் ஈடுபட்டேன், உலகம் முழுவதிலும் இந்தக் கருத்து பரவியது. உலகின் பல நாட்டு மக்கள் தேநீர் வேளை உரையாடல் என்பதை சொல்லவும் தொடங்கி விட்டார்கள். ஆனால் இந்த தேநீர் வேளை உரையாடலின் போது திருமணங்கள் கூட நடைபெறும் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. நவம்பர் மாதம் 17ஆம் தேதி சூரத்தில் நடைபெற்ற ஒரு திருமணம், தேநீர் வேளை உரையாடலுடன் நடந்தது. குஜராத்தின் சூரத்தில் ஒரு பெண் தன் வீட்டு திருமணத்துக்காக வந்தவர்களுக்கு வெறும் தேநீர் மட்டுமே அருந்தக் கொடுத்தார், வேறு எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை, எந்த விருந்துணவையும் படைக்கவில்லை, எதுவும் இல்லை – ஏனென்றால் நாணயவிலக்கல் காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. ஊர்வலத்தாரும் இதையே கௌரவம் என்று கருதினார்கள். சூரத்தின் பரத் மாரூ மற்றும் தக்ஷா பர்மார் – இவர்கள் தங்கள் திருமணம் வாயிலாக ஊழலுக்கு எதிராக, கருப்புப் பணத்துக்கு எதிராக நடைபெற்று வரும் பெரும்போரில் தங்கள் பஙக்ளிப்பை நல்கியிருக்கிறார்கள், இதுவே பெரும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. நவபரிணீத் பரத்துக்கும் தக்ஷாவுக்கும் பலப்பல ஆசிகள் அளிக்கும் அதே வேளையில், திருமண வைபவத்தைக் கூட ஒரு மஹா வேள்வியாக உருமாற்றி, ஒரு புதிய வாய்ப்பாக அதை ஆக்கியதற்காக உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சங்கடங்கள் வரும் போது, மக்கள் அதற்கான தீர்வுகளையும் மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்கிறார்கள்.

     தாமதமாக வீடு திரும்பிய வேளையில், ஒரு முறை டிவி செய்தியில் பார்க்க நேர்ந்தது. அசாம் மாநிலத்தின் தேகியாஜுலீ என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமம் இருக்கிறது. தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாராந்திர அடிப்படையில் கூலி கிடைக்கிறது. இப்போது 2000 ரூபாய் நோட்டு கிடைத்திருக்கும் வேளையில் அவர்கள் என்ன செய்தார்கள்? அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 4 பெண்கள் ஒன்று கூடினார்கள், நால்வரும் ஒன்றாகச் சென்று பொருட்களை வாங்கினார்கள், 2000 ரூபாய் மூலமாக பணத்தை செலுத்தினார்கள், அவர்களுக்கு குறைவான மதிப்பு உடைய நாணயங்கள் தேவை இருக்கவில்லை, ஏனென்றால் நால்வருமாக இணைந்து பொருட்களை வாங்கினார்கள், அடுத்த வாரம் சந்திக்கலாம், அப்போது கணக்கு வழக்கைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள். மக்கள் தங்களுக்குள்ளாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனியுங்கள். எங்கள் பகுதிக்கு ஏ.டி.எம்.மைக் கொண்டு வாருங்கள் என்று அசாமின் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் கோரிக்கை பற்றி அரசுக்கு தகவல் கிடைத்தது,  கிராமப்புற மக்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன பாருங்கள். இந்த இயக்கம் வாயிலாக சிலருக்கு உடனடியாக பலன் கிடைத்திருக்கிறது. தேசத்துக்கு இனிவரும் நாட்களில் பலன் கிட்டும், ஆனால் சிலருக்கு லாபம் உடனடியாக வசப்பட்டிருக்கிறது. நடந்திருப்பவை பற்றி நான் கேட்ட போது, சின்னச்சின்ன நகரங்களிலிருந்து சில தகவல்கள் எனக்குக் கிடைக்கப் பெற்றன. சுமார் 40-50 நகரங்கள் தொடர்பான தகவல்கள் எனக்குக் கிடைத்தன, இந்த நாணய விலக்கல் காரணமாக பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாயின, வரி ஏய்ப்பு செய்தவர்கள் – தண்ணீர் மீதான வரி, மின்சாரம் மீதான வரி போன்றவற்றை செலுத்தாதவர்கள் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரியும் – ஏழை பாழைகள் எல்லாம் 2 நாட்கள் முன்னதாகவே சென்று செலுத்தி விடும் பழக்கத்தை மேற்கொண்டிருப்பார்கள். சக்தி படைத்தவர்கள், சட்டத்தின் கரங்களுக்கு அப்பால் இருப்பவர்கள், அவர்களைக் கேள்வி கேட்பார் யாரும் இல்லை, அவர்கள் தான் பணத்தை செலுத்துவதே இல்லை. அவர்கள் கணக்கில் ஏகப்பட்ட பாக்கி இருக்கும். ஒவ்வொரு நகராட்சியும் மிகவும் சிரமப்பட்டு 50 சதவீதத் தொகையையே ஈட்டுகிறது. ஆனால் இந்த முறை 8ஆம் தேதியின் இந்த தீர்மானம் காரணமாக, அனைவரும் தங்கள் பழைய நோட்டுக்களை செலுத்த ஓடோடி வந்தார்கள். 47 நகர அலகுகளில் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் சுமார் 3000-3500 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஒரு வாரக்காலத்தில் மட்டும் அவர்களுக்கு 13000 கோடி ரூபாய் பணம் வசூலாகி இருக்கிறது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஒருசேர அளிக்கலாம். 3000-3500 கோடி ரூபாய் எங்கே, 13000 கோடி எங்கே!! அதுவும் நேரடியாக வந்து செலுத்தியிருக்கிறார்கள். இப்போது இந்த நகராட்சிகளுக்கு 4 மடங்குப் பணம் வந்திருப்பதால், ஏழை மக்களுக்காக கழிவுநீர் அமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதோ, நீர் வழங்கல் அமைப்புக்கள் உருவாக்கப்படுவதோ, ஆங்கன்வாடி மையங்கள் நிறுவப்படுவதோ இயல்பாகவே அமையும் இல்லையா? நேரடிப் பயன்கள் கண்ணுக்குத் தெரியும் வகையில் ஏற்பட்டிருக்கும் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

சகோதர சகோதரிகளே, நமது கிராமங்கள், நமது விவசாயிகள், இவர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தின் பலமான தூண்கள். ஒரு புறம் பொருளாதாரத்தின் இந்த புதிய மாற்றம் காரணமாக, இடர்களுக்கு இடையே, ஒவ்வொரு குடிமகனும் அதற்கேற்ப தன்னைத் தானே சீர்செய்து கொண்டு வருகிறார். ஆனால் நான் என் தேச விவசாயிகளுக்கு இன்று சிறப்பாக என் வணக்கங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இப்போது தான் நான் இந்தப் பருவத்தின் விதைப்பு தொடர்பான புள்ளி விபரங்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். கோதுமையாகட்டும், பருப்பு வகைகளாகட்டும், எண்ணெய்ப் பயிர்கள் ஆகட்டும், நவம்பர் 20ஆம் தேதி வரை என்னிடம் கணக்கு இருக்கிறது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும் போது, விதைப்பு அதிகரித்திருக்கிறது. கஷ்டங்களுக்கு இடையேயும், விவசாயிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அரசுமே கூட பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது, இதில் விவசாயிகளுக்கும், கிராமங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் கூட கஷ்டங்கள் இருக்கின்றன என்றாலும், இயற்கை இடர்களாகட்டும், எந்த ஒரு இன்னலாகட்டும் அவற்றை சகித்துக் கொண்டு உறுதியாக சமாளிக்கும் நமது விவசாயி, இந்த முறையும் மனவுறுதியோடு இதை எதிர்கொண்டிருக்கிறார்.

நமது நாட்டின் சிறிய வியாபாரிகள் வேலைவாய்ப்பையும் அளிக்கிறார்கள், பொருளாதார செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறார்கள். கடந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் நாங்கள் ஒரு மகத்துவம் நிறைந்த முடிவைச் செய்தோம்; பெரிய பெரிய mallகளைப் போலவே, கிராமங்களில் உள்ள சின்னச் சின்ன கடைகளும் கூட 24 மணி நேர வியாபாரம் செய்ய முடியும், எந்த சட்டமும் அவர்களுக்குத் தடை விதிக்காது. ஏனென்றால், பெரிய பெரிய mallகளுக்கு எல்லாம் 24 மணி நேரம் திறக்க வாய்ப்பு கிடைக்கும் போது, கிராமத்தின் ஏழை கடைக்காரருக்கு ஏன் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க கூடாது என்பது என் கருத்தாக இருந்தது. முத்ரா திட்டத்தின்படி அவர்களுக்கு கடன் அளிக்கும் விதமாக முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பல கோடிக்கணக்கான ரூபாய் முத்ரா திட்டத்தின் படி எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டது, ஏனென்றால் இது போன்ற சிறு தொழில்களில் கோடிக்கணக்கான பேர் ஈடுபட்டு வருகிறார்கள், பல இலட்சம் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரத்துக்கான வேகத்தை அளிக்கிறார்கள். ஆனால் இந்த தீர்மானம் காரணமாக அவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று தான்; இப்படிப்பட்ட நிலையிலும், நமது இந்த சிறு வியாபாரிகளும் கூட தொழில்நுட்பம் வாயிலாக, mobile app வாயிலாக, மொபைல் வங்கி வாயிலாக, கடன் அட்டை வாயிலாக, தங்கள் தங்கள் வழிமுறைகள் மூலம் நுகர்வோர் சேவையில் ஈடுபட்டு வருவதையும், நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதையும் என்னால் பார்க்க முடிந்தது.

இன்று நான் எனது சிறு வணிகம் செய்யும் சகோதர சகோதரிகளிடம் கூற விரும்புவதெல்லாம், இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நீங்கள் டிஜிட்டல் உலகில் நுழையுங்கள். நீங்களும் உங்கள் மொபைல் ஃபோன் மூலமாக வங்கிகளின் appஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கடன் மற்றும் பற்று அட்டைகளின் பரிவர்த்தனைகளுக்கான விற்பனை முக (Point of Sale) இயந்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் எப்படி ரொக்கப் பணத்தைக் கையாளாமல் வியாபாரம் செய்வது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். எப்படி பெரிய mallகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிறார்களோ, அதைப் போல, ஒரு சிறிய வியாபாரியும், எளிமையான பயனாளிக்கு நேசமான தொழில்நுட்பம் வாயிலாக, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதில் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை, சிறப்பான வாழ்க்கையே ஏற்படும். ரொக்கப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயத்தை உருவாக்க உங்கள் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்க முடியும், நீங்கள் உங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள, மொபைல்போன் மூலமாக மொத்த வங்கிச் செயல்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்று நோட்டுக்களை கையாளாமல், வியாபாரத்தை பல வழிகளில் நம்மால் நடத்த முடியும். தொழில்நுட்ப வழிகள் இருக்கின்றன, அவை பாதுகாப்பானவை, விரைவானவை. நீங்கள் இந்த இயக்கம் வெற்றி பெற உங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று மட்டும் நான் விரும்புகிறேன். இது மட்டுமல்ல, மாற்றத்தை நீங்கள் தான் தலைமையேற்றி நடத்திச் செல்ல வேண்டும், இப்படிப்பட்ட தலைமையை உங்களால் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த கிராமத்தின் வியாபாரத்தையும் நீங்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உழைப்பாளி சகோதர சகோதரிகளிடத்திலும் நான் கூற விரும்புவது, உங்களுக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது தான். காகிதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் ஊதியம் ஒன்று, உங்கள் கைகளில் கொடுக்கப்படும் தொகையாக வேறு என்ற நிலைமை ஒன்று. எப்போதாவது மொத்த ஊதியமும் கைகளில் கிடைத்தாலும், வெளியே ஒருவர் நின்று கொண்டிருப்பார், அவருக்கு ஒரு பங்கை உங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்க வேண்டி இருக்கும், பலவந்தமாக இப்படிப்பட்ட கொடுமை நிறைந்த வாழ்க்கையை வாழும் நிலைக்கு கூலித் தொழிலாளி தள்ளப் படுகிறார். இந்த புதிய வழிமுறை வாயிலாக, வங்கிகளில் உங்களுக்கென ஒரு கணக்குத் தொடங்கப்பட்டு, உங்கள் ஊழியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும். உங்களுக்கு உங்கள் ஊதியம் முழுக்க கிடைக்க வேண்டும், யாருக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்காது. உங்கள் மீது கொடுமை இழைக்கப்படக் கூடாது. உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டால், நீங்களுமே கூட ஒரு சின்ன மொபைல்போன் மூலமாக, அக்கம்பக்கக் கடைகளில் பொருள் வாங்க முடியும், அதன் மூலமாகவே பணத்தை செலுத்தி விடவும் முடியும்; இதற்கு எந்த ஸ்மார்ட் போனும் தேவையில்லை, இப்போதெல்லாம் உங்கள் மொபைல் போனே கூட ஈ-வேலட் என்ற வகையில் உங்கள் பர்ஸ் செய்யும் வேலையைச் செய்து விடுகிறது. ஆகையால் என் உழைப்பாளி சகோதர சகோதரிகளே, இந்தத் திட்டத்தில் உங்கள் பங்களிப்பை நான் சிறப்பாக வேண்டுகிறேன், ஏனென்றால் இத்தனை பெரிய ஒரு முடிவை நான் நாட்டின் ஏழைகளுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளிகளுக்காக, நசுக்கபட்டவர்களுக்காக, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர்களுக்கு நலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கொண்டிருக்கிறேன்.

இன்று நான் விசேஷமாக இளைஞர்களோடு உரையாட விரும்புகிறேன். பாரதத்தில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று உலகம் முழுக்க தண்டோரா போட்டு வருகிறோம். நீங்கள் என்னாட்டின் இளைஞர்கள், யுவதிகள், நான் எடுத்திருக்கும் இந்த முடிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை நான் நன்கறிவேன். நீங்கள் இந்த முடிவை முழுமையாக ஆதரிக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இதை ஆக்கபூர்வமான வழிகளில் முன்னெடுத்துச் செல்ல பெருமளவு பங்களிப்பு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். தோழர்களே, நீங்கள் தான் எனது உண்மையான சிப்பாய்கள், நீங்களே என் உண்மைத் தோழர்கள். அன்னை பாரத மாதாவுக்கு சேவை செய்ய ஒரு அற்புதமான வாய்ப்பு நம் அனைவருக்கும் வாய்த்திருக்கிறது, இது தேசத்தைப் பொருளாதார சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்லும் பொன்னான வாய்ப்பு. எனது இளைய சமுதாய நண்பர்களே, உங்களால் எனக்கு உதவி செய்ய இயலுமா? எனக்கு துணை நிற்பதோடு மட்டும் வேலை முழுமை பெறாது. இன்றைய உலக நடைமுறை பற்றி உங்களுக்கு இருக்கும் அளவுக்கு, முந்தைய தலைமுறையினருக்கு இல்லை. ஏன், உங்கள் குடும்பத்திலேயே கூட உங்கள் மூத்த சகோதரருக்கு, உங்கள் தாய் தந்தையருக்கு, சித்தப்பா சித்திகளுக்கு, மாமா மாமிகளுக்கு உங்கள் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். App, அதாவது செயலி என்றால் என்ன என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், ஆன்லைன் பேங்கிங், அதாவது கணிணி மூலம் வங்கியலுவல் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள், கணிணி மூலம் பயணச்சீட்டுப் பதிவு ஆகியவற்றை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு இந்த விஷயங்கள் மிக எளிமையானவை, நீங்கள் இவற்றைப் பயன்படுத்தவும் செய்கிறீர்கள். ஆனால் இன்று நாடு செய்ய விரும்பும் மகத்தான பணி, நமது கனவான ரொக்கப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயம். நூறு சதவீதம் ரொக்கப் பரிவர்த்தனை இல்லா சமுதாயம் என்பது சாத்தியமல்ல என்பது சரி தான். ஆனால் ஏன் நாம் பாரதத்தை குறைந்த ரொக்கப் பயன்பாட்டு சமுதாயமாக ஆக்க ஒரு தொடக்கத்தைச் செய்யக் கூடாது. ஒரு முறை நீங்கள் இந்தக் குறைந்த ரொக்கப் பயன்பாட்டு சமூகம் என்பதைத் தொடங்கி விட்டால், ரொக்கப் பரிவர்த்தனையே இல்லாத சமூகம் என்ற இலக்கு தொலைவில் இருக்காது. எனக்கு இந்த விஷயத்தில் உங்கள் உடல்ரீதியான உதவி, உங்கள் நேரம், உங்கள் உறுதிப்பாடு ஆகியன தேவை. நீங்கள் எப்போதும் எனக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது; ஏனென்றால், நாம் அனைவரும் இந்துஸ்தானத்தின் ஏழையின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற ஆசையை மனதில் சுமந்து கொண்டிருப்பவர்கள். ரொக்கப் பணப் பரிவர்த்தனை இல்லா சமூகத்தை ஏற்படுத்த, டிஜிட்டல் வங்கி சேவையை அறிமுகப்படுத்த அல்லது மொபைல் வங்கிச் சேவையை அறிமுகப்படுத்த இன்று எத்தனை வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு வங்கியும் ஆன்லைன் வசதியை அளிக்கிறது. ஹிந்துஸ்தானத்தின் ஒவ்வொரு வங்கியிடமும் பிரத்யேகமான ஒரு மொபைல் app இருக்கிறது, ஒவ்வொரு வங்கியிடமும் பிரத்யேகமான வாலட் இருக்கிறது. வாலட்டின் நேரடிப் பொருள் e-purse. பலவகையான அட்டைகள் கிடைக்கின்றன. ஜன் தன் திட்டத்தின்படி பாரதத்தின் கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களிடம் ரூபே அட்டை இருக்கிறது, மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வந்த ரூபே அட்டை, 8ஆம் தேதிக்குப் பிறகு, அதிகமாகப் பயன்படத் தொடங்கி விட்டது, சுமாராக 300 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. மொபைல் போனில் வரும் prepaid அட்டையைப் போலவே வங்கிகளிடமும் பணத்தை செலவு செய்ய prepaid அட்டை கிடைக்கிறது. வியாபாரம் செய்ய ஒரு அருமையான தளம் UPI, இதன் மூலமாக நீங்கள் பொருட்களை வாங்கவும் முடியும், பணத்தை அனுப்பவும் முடியும், பணத்தைப் பெறவும் முடியும். இந்தப் பணி நீங்கள் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்புவதைப் போல அத்தனை எளிமையானது. எந்தப் படிப்பும் இல்லாதவருக்குக் கூட இன்று வாட்ஸ்அப்பில் தகவல் எப்படி அனுப்ப வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார், எப்படி ஃபார்வர்ட் செய்ய வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிறார். இது மட்டுமல்லாமல், இந்த வேலைக்கு பெரிய ஸ்மார்ட் போன் எல்லாம் தேவை என்றில்லாத அளவுக்கு தொழில்நுட்பம் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. சாதாரண வசதிகள் கொண்ட போன் மூலமாகக் கூட பணப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். சலவைத் தொழிலாளி, காய்கறி விற்பனையாளர், பால் விற்பனையாளர், செய்தித்தாள் விற்பனையாளர், தேநீர்க்கடைக்காரர், பலகாரம் விற்பனை செய்பவர் என யாராக இருந்தாலும் இதை எந்தச் சிரமமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் இந்த வழிமுறையை மேலும் சுலபமாக்கும் முயற்சிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன். அனைத்து வங்கிகளும் இதில் ஈடுபட்டிருக்கின்றன, செய்து கொண்டிருக்கின்றன. இப்போது நாங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கான கூடுதல் கட்டணத்தையும் ரத்து செய்து விட்டோம். மேலும், ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத சமூகம் என்ற கருத்துக்கு வலு சேர்க்க, அட்டை தொடர்பான இது போன்ற வரிகளையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம், இதை நீங்கள் கடந்த 2-4 நாட்களுக்குள்ளான செய்தித்தாள்களில் பார்த்திருக்கலாம்.

எனது இளைய நண்பர்களே, இவையனைத்தும் ஆன பிறகும் ஒரு தலைமுறை முழுவதுக்கும் இது பரிச்சயமில்லாததாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த மகத்தான பணியில் ஆக்கப்பூர்வமாக இணைந்திருக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். WhatsAppல் படைப்பாற்றல் மிக்க செய்திகளை நீங்கள் அளித்தல், கோஷங்கள், கவிதைகள், துணுக்குகள், கார்ட்டூன்கள், புதிய புதிய கற்பனை, நகைச்சுவை என அனைத்தையும் நான் கவனித்து வருகிறேன்; சவால்களுக்கு இடையேயும் நமது இளைய சமுதாயத்தினரின் படைப்புத் திறனைப் பார்க்கும் போது எனக்கு என்ன படுகிறது என்றால், போர்க்களத்தில் கூட ஒரு காலத்தில் கீதை பிறந்தது என்பது தான் இந்த பாரத பூமியின் விசேஷம் என்பதைப் போல, இன்று இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் காலத்தை நாம் சந்திக்கும் வேளையில் உங்களுக்குள்ளே ஒரு அடிப்படையான படைப்பாற்றல் வெளிப்படுவதை நான் பார்க்கிறேன். ஆனால் எனக்குப் பிரியமான இளைய தோழர்களே, நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், எனக்கு இந்தப் பணியில் உங்கள் உதவி தேவைப்படுகிறது. ஆம், ஆம் ஆம், நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், எனக்கு உங்கள் உதவி தேவை, நீங்கள், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பீர்கள் என்று இன்று முதல் உறுதி பூணுங்கள். உங்கள் மொபைல் ஃபோனில் ஆன்லைன் செலவுகளுக்கான அனைத்துத் தொழில்நுட்பத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது மட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என உங்களால் எத்தனை நேரம் அளிக்க முடியுமோ, குறைந்த பட்சம் 10 குடும்பங்களுக்கு நீங்கள் இந்த தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள், இதை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி தத்தமது வங்கிகளின் Appஐ தரவிறக்கம் செய்ய முடியும், தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை செலவு செய்யும் வழிமுறை என்ன, எப்படி கடைக்காரருக்குப் பணம் கொடுக்க முடியும் என்று கற்றுக் கொடுங்கள். அதே போல கடைக்காரருக்கும் இந்த வழிமுறையில் எப்படி வியாபாரம் செய்ய முடியும் என்பதைப் புரிய வையுங்கள். ரொக்கப் பணப் பரிவர்த்தனையில்லாத சமூகம், நோட்டுக்களின் வலையிலிருந்து வெளிவரும் பேரியக்கம், நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்கும் இயக்கம், கருப்புப் பணத்திலிருந்து விடுதலை அளிக்கும் இயக்கம், மக்களுக்கு இடர்கள் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரம் அளிக்கும் இயக்கம் – இவற்றுக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும். ஒரு முறை மக்களுக்கு Rupay அட்டையின் பயன் எப்படி இருக்கிறது என்பதை நீஙக்ள் கற்றுக் கொடுத்து விட்டால், ஏழை உங்களுக்கு ஆசிகள் அளிப்பார். சாதாரண குடிமகனுக்கு நீங்கள் இந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்து விட்டீர்கள் என்றால், அனைத்துக் கவலைகளிலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் இந்தப் பணியில் இந்துஸ்தானத்தின் அனைத்து இளைஞர்களும் ஈடுபட்டார்களேயானால், இதை செய்து முடிக்க அதிக காலம் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். ஒரே மாதத்திற்குள்ளாக, நம்மால் ஒரு புதிய ஹிந்துஸ்தானமாக நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியும், இந்தப் பணியை நீங்கள் உங்கள் மொபைல் ஃபோன் மூலமாக உங்களால் செய்ய முடியும்; தினமும் பத்து வீடுகளுக்குச் செல்லுங்கள், தினமும் 10 வீடுகளை இதில் இணையுங்கள். நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், உங்கள் ஆதரவு மட்டும் போதாது, நாம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் களவீரர்களாக மாறுவோம், மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவோம். தேசத்துக்கு கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கும் இந்தப் போரில் நாம் முன்னேறுவோம். இளைஞர்கள் நாட்டின் போக்கையே மாற்றியமைத்த நாடுகள் உலகிலே உண்டு; அதே போல யார் மாற்றத்தைக் கொண்டு வருகிறாரோ, அவர் இளைஞராகவே இருப்பார், யார் புரட்சியை ஏற்படுத்துகிறாரோ அவர் இளைஞராகத் தான் இருப்பார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். கீன்யா சவாலை ஏற்றுக் கொண்ட வகையில், M-PESA என்ற ஒரு மொபைல் அமைப்பினை புகுத்தியது, தொழில்நுட்பப் பயன்பாட்டினை ஏற்படுத்தியது, M-PESA என்ற பெயரிட்டது. இன்று கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் கீன்யாவின் அனைத்துப் பரிவர்த்தனைகளும் இதன் மூலம் நடைபெறக் கூடிய அளவுக்கு தயாராகி விட்டது. இந்த நாடு ஒரு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

என் நெஞ்சம் நிறைந்த இளைஞர்களே, நான் மீண்டும் ஒரு முறை, மீண்டும் ஒரு முறை உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு பள்ளியும், கல்லூரியும், பல்கலைக்கழகமும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன சமுதாய அளவில், தனிப்பட்ட முறையில் என இந்தப் பணியில் ஈடுபட உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வோம். நாட்டுக்கு மிக உன்னதமான சேவை செய்ய நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது, இந்த நல்வாய்ப்பை, பொன்னான வாய்ப்பை நழுவ விடக் கூடாது.

என் இனிய சகோதர சகோதரிகளே, நாட்டின் ஒரு மகத்தான கவிஞர், ஹரிவன்ஷ்ராய் பச்சன் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஹரிவன்ஷ்ராய் அவர்களின் பிறந்த நாளான இன்று, அமிதாப் பச்சன் அவர்கள் தூய்மை இயக்கத்துக்கான ஒரு கோஷத்தை அளித்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் அதிகம் விரும்பப்படும் கலைஞரான அமிதாப் அவர்கள், தூய்மை இயக்கத்தை மிகுந்த முனைப்போடு முன்னெடுத்துச் செல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவரது நாடி நரம்புகளிலெல்லாம் தூய்மை தொடர்பான விஷயம் பரவி விட்டது போலத் தோன்றுகிறது; இதனால் தான் தனது தந்தையாரின் பிறந்த நாளன்று கூட, அவருக்கு தூய்மை பற்றிய நினைவு எழுகிறது. ஹரிவன்ஷ்ராய் அவர்களின் ஒரு கவிதையின் சரணங்களைத் தான் எழுதுவதாய் அவர் கூறுகிறார் – மக்கி மறையும் உடல், மயக்கத்தில் ஆழும் மனம், கணநேர வாழ்க்கை, இதுவே என் அடையாளம். ஹரிவன்ஷ்ராய் அவர்கள் இந்த வரியின் வாயிலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மக்கி மறையும் உடல், மயக்கத்தில் ஆழும் மனம், கணநேர வாழ்க்கை, இதுவே என் அடையாளம், என்பதை அடியொற்றி அவரது அருமந்த மகனான அமிதாப் அவர்கள், தூய்மையான உடல், தூய்மையான மனம், தூய்மையான பாரதம், இதுவே என் அடையாளம் என்று எழுதுகிறார். நான் ஹரிவன்ஷ்ராய் அவர்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். அமிதாப் அவர்கள் இது போல மனதின் குரலில் இணைவதற்கும், தூய்மைப் பணியை முன்னெடுத்து வழிநடத்திச் செல்வதற்கும் நான் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

என் உளம் நிறைந்த நாட்டுமக்களே, இப்போது மனதின் குரல் வாயிலாக உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகள் ஆகியன, உங்கள் கடிதங்கள் வாயிலாகவும், myGovஇலும், narendramodiappஇலும் தொடர்ந்து என்னை உங்களோடு இணைத்து வைக்கிறது. இப்போது 11 மணிக்கு மன் கீ பாத் (மனதின் குரல்) ஒலிபரப்பாகும், ஆனால் மாநில மொழிகளில், இது நிறைவடைந்த உடனேயே தொடங்கி விடும். அகில இந்திய வானொலியைச் சேர்ந்தவர்கள் இந்த முனைப்பை மேற்கொண்டிருப்பதற்கு நான் அவர்களுக்குக் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; எங்கெல்லாம் இந்தி மொழி புழக்கத்தில் இல்லையோ, அங்கே இருக்கும் என் நாட்டு மக்களுக்கும் இதோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.