“பொருளாதார கொள்கை – நம் முன் உள்ள வாய்ப்புகள்” என்ற பொருளில் நித்தி ஆயோக் அமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்த பொருளாதார நிபுணர்கள் மற்றும் பிற வல்லுநர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், வேளாண்மை, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், வரிவிதிப்பு மற்றும் வரி தொடர்பான விவகாரங்கள், கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம், வீட்டுவசதி, சுற்றுலா, வங்கி, ஆளுமை சீர்திருத்தம், தரவு அடிப்படையிலான கொள்கை, வளர்ச்சிக்கான எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல்வேறு வகையான பொருளாதார விவகாரங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஆலோசனையின்போது பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பினரும் தங்களது பரிந்துரைகளையும், கருத்துக்களையும் தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக, திறன் மேம்பாடு, சுற்றுலா போன்ற துறைகளில் புத்தாக்க கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பட்ஜெட் சக்கரம் குறித்துப் பேசிய பிரதமர், இது உண்மையான பொருளாதாரத்தின் வெளிப்பாடு என்று தெரிவித்தார். தற்போது நாம் பின்பற்றிவரும் பட்ஜெட் காலண்டரின்படி, செலவினங்களுக்கான ஒப்புதல், பருவமழை தொடங்கும்போதே அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, அரசு திட்டங்களின் பலன்கள், பருவமழைக்கு முந்தைய மாதங்களிலேயே கிடைப்பதில்லை என்று அவர் தெரிவித்தார். இதனைக் கருத்தில் கொண்டு, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியை முன்கூட்டியே நிர்ணயம் செய்துள்ளதாகவும், இதனால், புதிய நிதியாண்டு தொடங்கும்போதே, செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் திரு.அருண் ஜேட்லி, திட்டமிடல் துறை இணை அமைச்சர் திரு.ராவ் இந்தர்ஜித் சிங், நித்தி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் திரு.அரவிந்த் பனகாரியா மற்றும் மத்திய அரசு, நித்தி ஆயோக் அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேலும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களான பேராசிரியர் பிரவீண் கிருஷ்ணா, பேராசிரியர் சுக்பால் சிங், பேராசிரியர் விஜய் பால் சர்மா, திரு.நீல்காந்த் மிஸ்ரா, திரு.சுர்ஜித் பல்லா, டாக்டர் புலாக் கோஷ், டாக்டர் கோவிந்த ராவ், திரு.மாதவ் சவான், டாக்டர் என்.கே.சிங், திரு.விவேக் தெஹேஜியா, திரு.பிரமாத் சின்ஹா, திரு.சுமித் போஸ், திரு.டி.என்.நைனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.