PM Modi campaigns in Hardoi & Barabanki, urges people to elect a BJP Govt
SP, BSP and the Congress never thought welfare of people and always focused on political gains: PM
What is the reason that Uttar Pradesh tops the chart in the entire nation in crime rates? This must change: PM
Our Govt is committed to empower the poor: PM Modi

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மற்றும் பாராபங்கி மாவட்டங்களில் மாபெரும் பொதுக் கூட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மாநிலத்தில் முதல் இரு கட்டங்களில் வாக்குப் பதிவில் அதிக அளவில் மக்கள் வாக்களித்தமைக்கு பிரதமர் திரு. மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். உத்தரப்பிரதேசம் வளரும்போது நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் அகற்றப்படும் வரையில் மாநிலம் வளர்ச்சி பெறாது என்று திரு. மோடி கூறினார். ``சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருபோதும் மக்கள் நலன்களைப் பற்றி சிந்தித்தது கிடையாது. அரசியல் ஆதாயங்களில்தான் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றனர். இது மாறிட வேண்டும்'' என்று அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியை கடுமையாகச்  சாடிய திரு. மோடி, மாநிலத்தில் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதாகத் தெரிவித்தார். ``குற்றங்கள் அதிகரித்து வருவது பற்றி மாநில அரசு கவனத்திலாவது கொண்டதா ? இருட்டிய பிறகு வீடுகளைவிட்டு வெளியே செல்வது பாதுகாப்பற்றது என பெண்கள் கருதுகிறார்கள். நேர்மையாளர்கள் துன்புறுத்தப் படுகின்றனர். குற்றச் செயல்களுக்கான வரைபடத்தில் நாட்டில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. ஆயுத சட்டம் தொடர்பான வழக்குகளில் 50 சதவீத வழக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகின்றன'' என்று அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் அமல் செய்யவுள்ள வியாபார் கல்யாண் வாரியம் மற்றும் விஸ்வகர்ம ஷ்ரம்மா சம்மான் திட்டம் ஆகியவை பற்றி திரு. மோடி பேசினார். உர விலைகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதையும் முந்தைய அரசுகள் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். ``சவுத்ரி சரண்சிங் ஜி இருந்த காலத்தில், உரங்களின் விலையை அவர் குறைத்தார். அவரது செயலால் உத்வேகம் அடைந்து, விவசாயிகள் நலனுக்கு உயர் முக்கியத்துவம் அளித்து, உரங்களின் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கைகள் எடுத்தோம். வேறு எந்தக் கட்சியும் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று மோடி தெரிவித்தார்.

யூரியாவுக்கு வேம்பு பூச்சு செய்வது பற்றிக் குறிப்பிட்ட அவர், அதனால் எந்த அளவுக்கு ஏராளமான விவசாயிகள் பயன்பெற்றனர் என்பதை விளக்கினார். பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பிரதமர் பட்டியலிட்டார். அதுதான்  முன் எப்போதும் இருந்ததைவிடவும் மிகவும் விரிவான பயிர்க் காப்பீட்டுத் திட்டம்  என அவர் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிராக தமது அரசின் போர் முடிவுக்கு வராது என்று திரு. மோடி தெரிவித்தார். அரசில் ஊழலைக் குறைப்பதற்காக, அரசில் கிரேடு 3 மற்றும் கிரேடு 4 தொகுப்புகளில் உள்ள பணிகளுக்கு நியமனம் செய்வதற்கு நேர்காணல்களை தமது அரசு ரத்து செய்ததாகவும் கூறினார். ``முன்பு கிரேடு 3 மற்றும் கிரேடு 4 பணிகளில் சேருவதற்கு லஞ்சம் பெறப்பட்டது. நேர்காணல் நடைமுறைகளை நாங்கள் ரத்து செய்துவிட்டோம். இது ஊழலைத் தடுத்துள்ளது'' என்று பிரதமர் தெரிவித்தார்.

ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது என்று பிரதமர் திரு. மோடி கூறினார். ``சமுதாயத்தில் ஊழலை ஒழித்துவிட்டால் ஏழைகளுக்கு அதிகாரம் கிடைத்துவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார். இருதய சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் -களின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதால், ஏராளமான மக்கள் நேரடியாக பயன்பெறுவார்கள் என்றும், சிகிச்சை செலவு குறையும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், இந்தத் தேர்தல் உத்தரப்பிரதேச மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றப்போகும் தேர்தல் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Click here to read full text speech at Hardoi