PM Modi attends Pravasi Bharatiya Divas 2017
Indians abroad are valued not just for their strength in numbers. They are respected for the contributions they make: PM
The Indian diaspora represents the best of Indian culture, ethos and values: PM
Engagement with the overseas Indian community has been a key area of priority: PM
The security of Indian nationals abroad is of utmost importance to us: PM

மரியாதைக்குரிய தலைவர்களே, நண்பர்களே,

துவக்கத்தில் போர்த்துகல் நாட்டின் மகத்தான தலைவரும், முன்னாள் அதிபரும், பிரதமரும் உலகத்தலைவர்களில் ஒருவருமான திரு. மரியோ சோவரஸ் அவர்கள் மறைவை ஒட்டி போர்த்துகல் நாட்டு மக்களுக்கும் அரசிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கும் போர்த்துகலுக்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பித்த சிற்பியாக அவர் விளங்கினார். இந்தத் துயரமான நேரத்தில் நாம் போர்த்துகல் நாட்டுடன் இணைந்து நிற்கிறோம்.

மரியாதைக்குரிய சுரினாம் நாட்டின் துணை அதிபர் திரு. மைக்கேல் அஸ்வின் அதின் அவர்களே, போர்த்துகல் நாட்டின் பிரதமர் டாக்டர் அண்டோனியோ கோஸ்டா அவர்களே, கர்நாடக மாநில ஆளுநர் திரு. வாஜு பாய் வாலா அவர்களே, கர்நாடக மாநில முதல்வர் திரு. சித்தராமையாஜி அவர்களே, மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு வந்துள்ள பிரமுகர்களே, அனைத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியக் குடும்பங்களே,

இந்த 14வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

உங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட நெடுந்தொலைவிலிருந்து எங்களுடன் இணைந்து கொள்ள இங்கு வந்திருக்கிறீர்கள். மேலும் பல லட்சக்கணக்கானோர் மின்னணு ஊடகங்களின் மூலம் நம்முடன் இணைந்துள்ளனர்.

இன்றைய நாள் வெளிநாட்டில் வசித்த மகத்தான இந்தியரான மகாத்மா காந்தி இந்தியாவிற்குத் திரும்பியதைக் கொண்டாடும் நாளாக அமைகிறது.

இந்த விழாவில் நீங்கள் விருந்தினர் மட்டுமல்ல; நீங்களும் இதை நடத்துபவர்கள்தான். உங்கள் பாரம்பரிய நாட்டில் வசிக்கும் மக்களை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கும் விழாவாகவும் இது இருக்கிறது. உங்கள் அன்பிற்குரியவர்களை சந்திக்க இது வாய்ப்பாக அமைகிறது. இவர்களில் பலரையும் நீங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்கவும் மாட்டீர்கள் என்று கூடச் சொல்லலாம். இந்த நிகழ்வின் உண்மையான பொருள் என்பது உலகின் எந்தப் பகுதியிலிருந்து நீங்கள் வந்திருந்தாலும் சரி, நம் அனைவருக்கும் பெருமை தருகின்ற, நமது பாரம்பரியத்தை நினைவூட்டுகின்ற இந்த விழாவில் இணைத்துக் கொண்டுள்ள உங்கள் அனைவரையும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

இந்த நிகழ்வை மிக அழகான நகரமான பெங்களூருவில் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்ட கர்நாடக முதல்வர் திரு. ராமைய்யாஜி, அவரது அரசு முழுவதற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.

மரியாதைக்குரிய போர்த்துகல் பிரதமர், சுரினாம் நாட்டின் துணை அதிபர், மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் ஆகிய அனைவரையும் இந்த நிகழ்வில் வரவேற்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர்களது சாதனைகளும், அவர்களது சொந்த நாட்டு சமூகத்திலும் உலக அளவிலும் அவர்கள் பெற்றுள்ள புகழும் நம் அனைவருக்கும் ஊக்கமூட்டுவதாக அமைகின்றன. உலகம் முழுதிலுமுள்ள 3 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்கள் அடைந்துள்ள வெற்றி, புகழ், திறமை ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் இது அமைகிறது. அவர்களின் காலடித் தடங்களை உலகம் முழுவதிலும் நம்மால் காண முடியும். என்றாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்களின் எண்ணிக்கையின் வலிமையினால் மட்டுமே மதிக்கப்படுவதில்லை. அவர்கள் வசிக்கின்ற சமூகங்களுக்கும், நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் அளித்துவரும் பங்களிப்புகளால்தான் அவர்கள் போற்றப்படுகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள முற்றிலும் புதிய நிலங்களில், சமூகக் குழுக்களில், அவர்கள் மேற்கொண்ட பாதை எதுவாக இருந்தாலும், எத்தகைய இலக்குகளை அவர்கள் பின்பற்றி வந்தாலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மிகச் சிறந்த இந்திய கலாச்சாரத்தை, நெறிமுறைகளை, மதிப்பீடுகளை பிரதிபலிப்பவர்களாகவே உள்ளனர். அவர்களது கடின உழைப்பு, ஒழுங்கு முறை, சட்டத்தை மதித்து நடப்பது, அமைதியை விரும்பும் தன்மை ஆகியவை வெளிநாடுகளில் வந்து குடியேறும் இதர இனத்தவருக்கும் முன்மாதிரியாக அமைகின்றன.

எண்ணற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளித்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் மேற்கொண்ட பாதை வேறுபட்டதாக இருக்கலாம். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருக்கலாம். என்றாலும் உங்கள் அனைவரின் மனதிலும் உள்ள உணர்வு இந்தியன் என்பதுதான். இந்தியர்கள் தாங்கள் செயல்படும் உலகை கர்மபூமியாகத்தான் பார்க்கின்றனர். அதிலிருந்துதான் தாய் நாட்டையும் நோக்குகிறார்கள். இன்று உங்கள் கர்மபூமியில் வெற்றியை அடைந்துள்ள நீங்கள் தாய் நாட்டிற்கு வெற்றியோடு வந்திருக்கிறீர்கள். உங்களது முன்னோர்கள் இந்தத் தாய்நாட்டிலிருந்துதான் செயல்திறனுக்கான உற்சாகம் பெற்றார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் வளர்ச்சியடைந்துள்ளனர். இணையற்ற ஒத்துழைப்புடன் வாழ்கின்றனர். முடிந்தவரை தாய்நாட்டிற்கும் பங்களித்தும் வருகின்றனர்.

நண்பர்களே, தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது அரசிற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருப்பது முன்னுரிமை மிக்க, மிக முக்கியமான பகுதியாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, ஐக்கிய அரபுக் குடியரசுகள், கட்டார், சிங்கப்பூர், ஃபிஜி, சீனா, ஜப்பான், தென் கொரியா, கென்யா, மொரீஷியஸ், செஷல்ஸ், மலேசியா போன்று வெளிநாடுகளுக்கு நான் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் எனது பல்லாயிரக்கணக்கான சகோதர, சகோதரிகளை சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கு அனுப்பி வரும் சுமார் 69 பில்லியன் டாலர்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கு மதிப்பிடற்கரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

நமது நாட்டின் வளர்ச்சி பற்றி வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மிகவும் வலுவானது. நாட்டின் வளர்ச்சியை அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் நமது மதிப்பிற்குரிய பங்குதாரர்கள். இந்தியாவிலிருந்து அறிவுச்செல்வம் வெளியே செல்வது பற்றி அதிகமாகப் பேசப்படுவதில்லை. அப்போது நான் பிரதமராக இருக்கவில்லை. என்னிடம் இதைப் பற்றிப் பேசும்போது நான் அதற்கு இவ்வாறு பதில் சொல்வது வழக்கம்: அப்படியென்றால் இந்தியாவிலேயே இருப்பவர்கள் எல்லாம் அறிவீனர்களா? ஆனால் இன்று மிகுந்த நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும். இன்றைய அரசு அறிவுச் செல்வம் வெளியே போவதை அல்ல; அந்த அறிவிலிருந்து பலன் பெறுவதை முன்னெடுத்துச் செயல்பட்டு வருகிறது. இதை அவ்வாறு மாற்றவே நாங்கள் விரும்புகிறோம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன்தான் இதை நிறைவேற்ற முடியும். அப்படித்தான் நான் நம்புகிறேன்.

வெளிநாடு வாழ் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரிவுகளில் மகத்தான பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். அவர்களிடையே அரசியல்வாதிகள், மரியாதைக்குரிய விஞ்ஞானிகள், தலைசிறந்த மருத்துவர்கள், அறிவுத்திறன் மிக்க கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், இசைக்கலைஞர்கள், புகழ்பெற்ற வள்ளல்கள், பத்திரிக்கையாளர்கள், வங்கியாளர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பினரும் நிறைந்துள்ளனர். மன்னிக்கவும். நமது புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைச் சொல்ல நான் மறந்துவிட்டேன் அல்லவா?

நாளைய தினம் வெளிநாடு வாழ் இந்தியர்களில் 30 பேர் குடியரசு தலைவரிடமிருந்து மதிப்பிற்குரிய ப்ரவாஸி பாரதீய சம்மான் விருதைப் பெறவிருக்கிறார்கள். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதாக அந்த விருது அமைகிறது.

நண்பர்களே, அவர்களது பின்னணி, தொழில் எதுவாக இருந்தாலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரின் நலனும் பாதுகாப்பும் எங்களது உயர்ந்தபட்ச முன்னுரிமையாக உள்ளது. இதற்காக, எங்களது நிர்வாக ஏற்பாடுகளின் சூழல் முழுவதையுமே நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம். தங்கள் கடவுச்சீட்டுகளை இழந்திருந்தாலோ, சட்டரீதியான உதவி தேவைப்பட்டாலோ, மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ, தங்குமிடம் அல்லது இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதற்கான உதவி தேவைப்பட்டாலோ உதவி செய்வதற்கான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அனைத்திற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்சினைகளை உடனடியாக கவனிக்கும் வகையில் செயல்படும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.

எளிதாக அணுகுவதற்கான ஏற்பாடு, உணர்வுபூர்வமான பிரதிபலிப்பு, விரைவாகவும், உடனடியாகவும் செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் தேவைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தியத் தூதரகங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரம் செயல்படுகின்றன. இந்தியர்களுடன் நேரடியாக கருத்துப் பரிமாற்றத்திற்கான ஏற்பாடு, தூதர்களின் முகாம்கள், கடவுச்சீட்டு சேவைகளுக்கென டுவிட்டர் சேவை, உடனடியாக தொடர்பு கொள்வதற்கென சமூக ஊடகங்களின் பயன்பாடு போன்ற பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் நாங்கள் இருக்கிறோம் என்பதை தெளிவாகத் தெரிவிக்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் எவ்வித வேறுபாடும் எங்களுக்கில்லை. இந்தியர்கள் சோதனைகளை சந்திக்கும் நேரங்களில் எல்லாம் அவர்களின் பாதுகாப்பையும், மீட்பையும், மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதையும் உறுதிப்படுத்த நாங்கள் விரைந்து வந்திருக்கிறோம். குறிப்பாக, எமது வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். வெளிநாடுகளில் இந்தியர்கள் துன்பத்திற்கு ஆளாகும்போதெல்லாம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவர்களை உடனடியாக அணுகி வருகிறார்.

‘சங்கட் மோச்சன்’ என்ற நடவடிக்கையின் மூலம் ஜூலை 2016இல் தெற்கு சூடானில் இருந்து 48 மணி நேரத்திற்குள் 150க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாங்கள் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அதற்கு முன்பாக, யேமன் நாட்டில் நிலவிய மோதல் சூழ்நிலைகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இந்திய குடிமக்களை உடனடியாகவும், திறமையாகவும் செயல்பட்டு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். 2014முதல் 2016 வரையிலான இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 54 நாடுகளிலிருந்து 90,000க்கும் அதிகமான இந்திய குடிமக்களை திரும்ப இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். வெளிநாடுகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் இருக்கும் 80,000க்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மக்கள் நல நிதியின் மூலம் உதவி செய்துள்ளோம்.

வெளிநாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் அவரது தாய்நாடு தொலைதூரத்தில் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். தொலை தூரத்தில் இருந்தாலும் இந்தியாவின் ஒளி அவர்களுக்கு (தண்மை)பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். தூரத்தில் இருப்பதால் அந்தத் தண்மையை உணர முடியாது என்று யாரும் அதை அணைத்து விடுவதில்லை. வெளிநாடுகளில் வசதிகளைத் தேடிச் செல்லும் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சமான வசதிகளை உருவாக்கித் தருவது, வசதிக் குறைவுகளை மிகக் குறைந்தபட்சமாக ஆக்குவதை உறுதிப்படுத்துவதே எங்கள் முயற்சியாக இருந்து வருகிறது.

“பாதுகாப்பாகச் சென்று வாருங்கள். பயிற்சி பெறச் செல்லுங்கள். நம்பிக்கையுடன் செல்லுங்கள்” என்பதே எங்கள் தாரக மந்திரமாக உள்ளது. இதற்காக எமது வழிமுறைகளையும் நாங்கள் ஒழுங்குபடுத்தியிருக்கிறோம். வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளிகளின் பாதுகாப்பிற்கென பல்வேறு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கென இணையத்தின் மூலமாகவே 6 லட்சம் பொறியாளர்களுக்கு வெளிநாடுகளில் வேலைக்காகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் குறித்த தகவல்களை இணைய தளத்தில் வெளிநாட்டு முதலாளிகள் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறோம்.

அதைப்போன்றே, வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளிகளின் குறைகள், புகார்கள், மனுக்கள் ஆகியவற்றை ஈ-மைக்ரேட், மதத் இணைய தளங்களின் மூலம் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சட்டவிரோதமான ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோத முகவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகளை சி.பி.ஐ. அல்லது மாநில காவல்துறை மேற்கொள்ளவும், இத்தகைய ஆட்சேர்ப்பு முகவர்கள் பதிவிற்கான முன் தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தியும் இந்த வகையில் ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் இந்திய தொழிலாளிகள் நல்ல பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை நாங்கள் விரைவில் துவங்க இருக்கிறோம். வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வதில் ஆர்வமுள்ள இந்திய இளைஞர்களை இலக்காகக் கொண்டதாக இத்திட்டம் இருக்கும்.

ஒரு சிலர் முதன் முறையாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். அந்த நாட்டைப் பற்றி அவர்கள் புரிந்து கொள்ள 15 நாள் அல்லது ஒரு மாத பயிற்சி போதுமானதாக இருக்கும். வீட்டுப் பராமரிப்பு பணிக்காகக் கூட அவர்கள் வெளிநாடுகளுக்குப் போகலாம். இங்கு இதுவரை பெற்றுள்ள அனுபவம் கூட அதற்குப் போதுமானதாக இருக்கலாம்; அதன் மீது நம்பிக்கையும் இருக்கலாம். எனவே இந்த மேம்பாட்டு திட்டம் என்பது அவர்களின் மதிப்பை மேலும் அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியே ஆகும். அதை நோக்கியே நாங்கள் செல்கிறோம். சிறு சிறு விஷயங்களும் கூட அவர்களுக்கு இதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் போகும் நாடுகளில் ஒரு சில வார்த்தைகள், ஒரு சில நடவடிக்கைகள், ஒரு சில கலாச்சார பண்புகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது முக்கியமானதாக இருக்கும். நம்மிடம் ஏராளமான படித்த இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை பயன்படுத்திக் கொள்வதே எங்கள் திட்டமாகும். இவற்றைத் தான் நாங்கள் மென் திறன் மேம்பாடு என்கிறோம். அந்த நாட்டைப் பற்றித் தெரிந்தால் இயற்கையாகவே நம்பிக்கை ஏற்படும். அங்குள்ள மக்களை தெரிந்து கொண்டால் உடனடியாக அவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும். இதைக் கவனத்தில் கொண்டே இந்த திட்டத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.

பல தலைமுறைகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து இதர நாடுகளில் குடியேறி வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் நமக்கு மிகவும் சிறப்பான உறவு உள்ளது. தாங்கள் ஆரம்ப கால நாட்டின் மீது அவர்கள் மிக ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் நெருங்கியவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் நான்கு அல்லது ஐந்து தலைமுறைக்கு முன்னால் இந்தியாவிலிருந்து சென்றிருந்தால் அவர்கள் ஓ.சி.ஐ. அடையாள அட்டையைப் பெறுவதில் உள்ள சிரமங்களையும் நாங்கள் அறிவோம். அவர்களின் கவலையை அறிந்து கொண்ட வகையில் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

மொரீஷியசில் குடியேறிய இந்திய வம்சாவளியினரில் இருந்து இந்த நடவடிக்கையைத் துவங்கியுள்ளோம் என்பதை இங்கு அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஓ.சி.ஐ. அட்டைகளைப் பெறுவதற்காக இந்த பரம்பரையினர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தர வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு புதிய நடைமுறைகளை உருவாக்கி வருகிறோம். இதே போன்ற இடையூறுகளை எதிர்கொண்டு வரும் ஃபிஜி, ரீயூனியன் தீவுகள், சுரினாம், கயானா மற்றும் இதர கரீபியன் நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

சென்ற ஆண்டு நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்வில் நான் கேட்டுக் கொண்டதைப் போலவே இந்திய வம்சாவளி அட்டைகளை வைத்திருப்பவர்கள் அவற்றை ஓ.சி.ஐ. அட்டைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் பன்முகப்பட்ட வேலைகளிடையே இந்த மாற்றம் இன்னும் முழுமையடையவில்லை. எனவே உங்களை மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்.

எவ்வித அபராதமும் இன்றி 2017 ஜூன் 30 வரை இவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து தில்லி, பெங்களூரு விமான நிலையங்களில் ஓ.சி.ஐ. அட்டை வைத்திருப்பவர்களுக்கென குடியேற்ற மையங்களில் தனி கவுண்ட்டர்கள் உருவாக்கியிருக்கிறோம்.

நண்பர்களே, இன்று சுமார் 7 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்று வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியருமே இந்தியாவின் முன்னேற்றத்தில் விருப்பத்துடன்தான் இருக்கின்றனர். அவர் பெறுகின்ற அறிவு, விஞ்ஞான அறிவு, இந்தியாவை மிக உயரத்திற்கு இட்டுச் செல்வதாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் இத்தகைய திறமை வாய்ந்த, வெற்றிகரமான இளைஞர்களை இணைப்பதற்கான வாய்ப்பை உருவாக்க நான் எப்போதுமே முயற்சி செய்து வந்திருக்கிறேன். அதை நம்பியும் வந்திருக்கிறேன். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில். இதில் நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்.

இதில் ஒன்று இந்தியாவின் அறிவியல்-தொழில்நுட்பத் துறை துவங்கவுள்ள இந்தியாவின் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிக்கக் கூடிய வகையில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ஆய்வு ஆசிரியர்களாக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு அறிவியல் அறிஞர்களை நியமிக்கும் வஜ்ரா என்ற திட்டமாகும். இதன்படி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள எந்தவொரு அறிவியல் நிறுவனத்திலும் ஒன்றிலிருந்து மூன்று மாதங்கள் வரை பணியாற்ற முடியும். அதுவும் நல்ல வசதிகளுடன். அவர்கள் அனைவருமே இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்களிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

நண்பர்களே, இந்தியாவிற்கும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் இடையேயான தொடர்பு என்பது நீடித்த ஒன்றாக, இருவரையும் வளப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே என் உறுதியான நம்பிக்கை. இந்த இலக்கை அடையும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபரில், மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று புதுதில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மையத்தை துவக்கி வைக்கும் பெருமை எனக்குக் கிடைத்தது. இந்த மையம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டதாகும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் குடியேற்றம், அனுபவங்கள், போராட்டங்கள், சாதனைகள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கான அறிகுறியாக அந்த மையம் மாற வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்களுடனான தனது உறவை மேலும் திறம்படச் செய்ய இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான முக்கியமானதொரு மேடையாக அந்த மையம் மாறும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தலைமுறையின் அனுபவமும் இந்தியாவிற்குப் பயனளித்து வந்துள்ளது. அவர்களின் மீதான எமது அன்பு தனித்தன்மை வாய்ந்தது. இப்போது வெளிநாடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாகவும் தனிச்சிறப்பு மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். இந்த வலுவான இளைஞர்களோடு இந்தியாவை இணைக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் தாய்நாட்டை காண்பதற்கும் தங்களது வேர்கள், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றோடு மீண்டும் தங்களை இணைத்துக் கொள்வதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அரசு இந்தியாவை அறிவோம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் உள்ள ஆறு இளைஞர் குழுக்கள் முதன்முறையாக இந்த ஆண்டு இந்தியாவிற்கு வரவிருக்கின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய இளைஞர்களில் 160 பேர் இந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்வில் பங்கேற்றுள்ளனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இளைஞர்களுக்கு எனது தனிப்பட்ட வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்றபிறகு இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்புகளை வைத்துக் கொள்வீர்கள் என்றே நான் நம்புகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும், மீண்டும் மீண்டும் இந்தியாவிற்கு வாருங்கள் என்றே கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய இளைஞர்களுக்கு என ‘இந்தியாவை தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற வினாடி வினாப் போட்டி முதல்முறையாக கடந்த ஆண்டு இணைய தளத்தில் நடத்தப்பட்டது. 5000க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் இதில் பங்கேற்றனர். இந்த ஆண்டும் நடைபெறவிருக்கும் போட்டியில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் குறைந்தபட்சம் 50,000 இளைஞர்களாவது பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன்.

எனது இளம் நண்பர்களே, இந்த இலக்கில் நான் வெற்றியடைய எனக்கு உதவுவீர்களா? என்னோடு இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஏன் 50,000த்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்? இன்று இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது. இந்த முன்னேற்றம் என்பது பொருளாதார ரீதியானது மட்டுமல்ல; சமூக ரீதியான, அரசியல் ரீதியான, ஏன் அரசு முறையிலானதும் கூட என்றே கூறலாம். பொருளாதாரத் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் முழுமையாக தாராளமயமாக்கப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டு விதிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் அதற்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன.

ஒரு விளக்கம் என்பது ‘நேரடி அந்நிய முதலீடு’. அடுத்தது ‘முதலில் இந்தியாவை மேம்படுத்து’ என்பதாகும். திரும்ப எடுத்துச் செல்லாத வகையில் இந்திய வம்சாவளியினர் மேற்கொள்ளும் முதலீடுகள், அவர்கள் நடத்துகின்ற நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்ற அமைப்புகளின் முதலீடுகள் இந்தியாவில் இருப்பவர்கள் போடும் முதலீட்டிற்கு இணையாகவே கருதப்படும். எமது முன்னோடி திட்டங்களான தூய்மையான இந்தியா, இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவது, இந்தியாவில் புதிய தொழில்களைத் துவங்குவது போன்ற பலவற்றிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கேற்பு நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும். உங்களில் சிலர் வர்த்தக முயற்சிகளிலும் முதலீட்டிலும் பங்களிப்பதில் விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கக் கூடும். வேறு சிலர் தூய்மையான இந்தியா, கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் போன்றவற்றில் பங்களிப்பு செய்ய விரும்பலாம்.

வேறு சிலர் தங்களது விலைமதிப்பு மிக்க நேரத்தை இந்தியாவில் உள்ள வசதியற்றவர்களுக்கு உதவுவது, அல்லது பல்வேறு துறைகளிலும் நடைபெற்று வரும் திறன் வளர்க்கும் திட்டங்களில் பங்கு பெறுவதில் விருப்பம் செலுத்தக் கூடும்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்த முனையும் உங்கள் அனைத்து வகையான முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு மாநாட்டில் நடைபெறும் கண்காட்சியையும் சென்று பார்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இப்போது நிறைவேற்றி வரும் முக்கியமான திட்டங்கள் பற்றிய அறிமுகத்தை அந்தக் கண்காட்சி உங்களுக்கு வழங்கும். இதில் எந்த அளவிற்கு பங்கேற்க முடியும் என்பதையும் உங்களால் முடிவு செய்யவும் முடியும்.

இங்கு வந்தபிறகு ஊழலுக்கு, கருப்புப் பணத்திற்கு எதிராக நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கருப்புப் பணமும் ஊழலும் எங்கள் அரசியலை, சமூகத்தை, நிர்வாகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டு வந்தது. கருப்புப் பணத்திற்கு ஆராதனை செய்து வரும் பூசாரிகள் சிலர் எங்களது முயற்சிகளை எதிர்த்து வருகின்றனர். ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாறுவதற்கான முயற்சிகளுக்கு எதிராகவும் அரசு மேற்கொள்ளும் கொள்கைகள் மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கே ஆகும். இந்த முயற்சியில் நீங்கள் வெளிப்படுத்திய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

நண்பர்களே, இறுதியாக ஒன்றை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தியர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும் பொதுவான பாரம்பரியம் உள்ளது. அதுவே நம் அனைவரையும் பின்னிப் பிணைத்துள்ளது. நாம் எங்கிருந்தாலும் சரி, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, நம்மிடையே உள்ள இந்த உறவுதான் நம்மை வலிமையானவர்களாக இருக்கச் செய்கிறது.

எனவே, எனது சக குடிமக்களே, போற்றத்தக்க கனவுகளைக் கொண்டவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் கனவுகளை நனவாக்கும் மன உறுதியும் உங்களிடம் உள்ளது. அத்தகைய கனவுகள்தான் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. இந்தச் சட்டங்கள் விதிகளையும் மாற்ற வேண்டிய நிலைக்குக் கொண்டு செல்கின்றன. இதற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய நாம் ஒவ்வொருவரும் உறுதி மேற்கொள்வோம். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கான நூற்றாண்டு என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

மிக்க நன்றி.

ஜெய் ஹிந்த்!