வணங்குகிறேன் அம்மா அவர்களே,
மேடையில் அமர்ந்திருக்கும் மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்!
இந்தப் புனிதமான, பக்தி நிறைந்த நிகழ்ச்சியில், எனது மிகுந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல்நலத்தையும் அளிக்கும்படி எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன். அம்மா அவர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார். அது மட்டுமின்றி, பல பக்தர்களின் வாழ்க்கையின் அர்த்தமாகவும் விளங்குகிறார். ஓர் அன்னையைப் போல் தனது நேரடியான மற்றும் மறைமுகமான அருட்செயல்களின் மூலமாகவும்; நேரடி தரிசனம் மூலமும் மறைமுகமாகவும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
அம்மாவின் அருளாசியைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஏராளமானோரின் மத்தியில் இருப்பதால் நான் அதிர்ஷ்டம் உடையவன். அம்மா அவர்களின் 60ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களையொட்டி அவரை வணங்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன் அமிர்தபுரியில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று, அது போல் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும் அவரை இன்றைய நவீன தொழில்நுட்ப வசதி மூலம் அமைந்த தொடர்பு வழியாக வாழ்த்துவதை எண்ணிப் பூரிப்படைகிறேன்.
இப்போதுதான் கேரளத்திலிருந்து திரும்பியிருக்கிறேன். கேரள மாநில மக்கள் என் மீது அன்பையும் பாசத்தையும் பொழிவதை எண்ணி நெகிழ்கிறேன்.
எங்கும் நிறைந்த கடவுளை எல்லா இடங்களிலும் காணும் இவரைப் போன்ற துறவியரைக் கொண்ட நாடு இந்தியா. எல்லாவற்றிலும் மானுட நேயமே முதன்மையானது. அதனால்தான், மக்கள் தொண்டே அவர்களுக்கு முக்கியமான குறிக்கோளாக உள்ளது. அம்மா அவர்கள் தனது சிறு வயதிலேயே தன்னுடைய உணவை மற்றவர்களுக்கு வழங்கி வந்தார் என்பதை அறிவேன். முதியோருக்குத் தொண்டு புரிவதும் இல்லாதோருக்கு உதவுவதும் அவரது சிறுவயது ஆர்வமாக இருந்தது.
அத்துடன், சின்ன வயதிலேயே அம்மா அவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வை வழிபட்டுவந்தார்.
இந்த இரு குணங்களும் அவரது பெரிய பலமாக இருந்தன. அம்மா அவர்களுடன் ஏற்பட்ட இந்த நல்லுறவின் மூலம் கடவுளின் மீதான பக்தி, ஏழைகளுக்கும் உதவும் அர்ப்பணிப்பு ஆகிய இரு இயல்புகளையும் தனிப்பட்ட முறையில் நான் கற்றுக் கொண்டேன். உலகம் முழுதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களும் இதில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
அம்மா அவர்கள் நடத்திவரும் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் சமூக, அறப் பணிகளையும் பல்வேறு திட்டங்களையும் நான் அறிவேன். உலகில் உள்ள ஏழைகளின் ஐந்து அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், உடல்நலம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு உதவுவதில் அம்மா அவர்கள் உறுதியாக இருக்கிறார்.
சுகாதாரம், குடிநீர், வீட்டு வசதி, கல்வி, மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படும் சமூகப் பணிகள், அவற்றுக்காக அளித்த நன்கொடைகள் ஆகியவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அத்தகைய பணிகளின் மூலம் பயனடைந்தவர்கள் இன்று சான்றிதழ்களைப் பெற இருக்கின்றனர் என்பதை அறிகிறேன். குறிப்பாக, கழிப்பறைகளைக் கட்டும் பணியில் அம்மா அவர்களின் முன்முயற்சி எங்களது “தூய்மை இந்தியா” திட்டத்திற்குப் பெரும் உதவியாக இருக்கிறது.
கேரளத்தில் சுகாதாரப் பணிகளுக்காக நூறு கோடி ரூபாய் அளித்து உதவுதாக அம்மா அவர்கள் உறுதி பூண்டுள்ளார். இதில், ஏழைகளுக்காக 15 ஆயிரம் கழிப்பறைகளைக் கட்டும் பணியும் அடக்கம். அம்மா அவர்களின் ஆசிரமம் கேரள மாநிலம் முழுவதும் இரண்டாயிரம் கழிப்பறைகளைக் கட்டி முடித்துவிட்டதாக இன்று தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலுக்கான பல்வேறு பணிகளில் இது ஒரே ஓர் எடுத்துக்காட்டுதான் என்பதை நான் அறிவேன். “கங்கை தூய்மைத் திட்டத்திற்காக” அம்மா அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் ஒரு கோடி ரூபாய் வாரி வழங்கியுள்ளார். அத்துடன், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோர் அந்தத் துயர்களிலிருந்து மீள அம்மா அவர்கள் உதவிக் கரம் நீட்டியதையும் அறிவேன். உலக அளவில் பாதிப்பு தரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய அணுகுமுறைகளைக் கண்டறிவதில் அமிர்தா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருவது உள்ளத்தைத் தொடுகிறது.
இறுதியாக, இந்த விழாக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் அம்மா அவர்களுக்கு எனது மிகுந்த மரியாதைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.