மாணவர்களின் சான்றிதழ் தொகுப்புகளை ஒருங்கிணைத்து வைக்கும் தேசிய கல்விசார் வைப்பகம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை செயல்படுத்தும் மேலும் ஒரு பரிணாமத்தின் விரிவாக்கத்திற்கு இந்த திட்டம் உதவும்.
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த தேசிய கல்விசார் வைப்பகம் அமைக்கும் திட்டம் (என்.ஏ.டி) இன்னும் 3 மாதங்களில் நடைமுறைக்கு வரும். 2017-18ம் ஆண்டில் இத்திட்டம் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வரும்.
இந்த ஆண்டு பிப்பரவரி மாதம் 2016-17ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ஆற்றிய உரையில், பள்ளி படிப்பு சான்றிதழ் , பட்டப்படிப்பு மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளுக்கான சான்றிதழ்கள் பாதுகாக்கப்பட்ட ஆவண காப்பகம் முறையில் ஒருங்கிணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்தவகையில் என்.எ.டி. அமைப்பு என்.எஸ்.டி.எல். மற்றும் சி.எஸ்.டி.எல் . தகவல் மேலாண்மை நிறுவனங்களால் செயலாக்கம் செய்யப்படும். இந்த இரு நிறுவனங்களும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபியின் 1992ம் ஆண்டுவிதிப்படி துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த முறையில் பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களின் உண்மைத் தன்மைக்கு கல்வி நிறுவன்ங்கள்தான் பொறுப்பாகும். இந்த டெபாசிட்டரி அமைப்பானது ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, கல்வி நிறுவனங்கள், வாரியங்கள், மதிப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றினை பதிவு செய்து வைத்திருக்கும். அத்துடன் மாணவர்கள், மற்றும் இதர பயன்பாட்டாளர்களின் தகவல்கள், சான்றிதழ்களை சரிபார்க்கும் வங்கிகள், வேலை வழங்கும் நிறுவனங்கள், அரசு முகமைகள் ஆகியவற்றின் விவரங்களும் இந்த என்ஏடி தன்னுள் தொகுத்து வைத்திருக்கும்.
இந்த அமைப்பானது கல்விச்சான்றிதழ் தொடர்பான அச்சிட்ட மதிப்பீட்டு அறிக்கையை தேவையானவர்களுக்கு வழங்கும். அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் கேட்கும் கல்விச்சான்றிதழ்களின் நம்பகத்தன்மை மற்றும் விவரங்களை பற்றிய கேள்விகளுக்கு ஒரே நாளில் இந்த அமைப்பு பதில் அளிக்கும்.
வேலை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஒரு மாணவரின் கல்வி விவரங்களை சம்மந்தப்பட்டவரின் ஒப்புதலோடு என்.ஏ.டி. மூலம் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.
இந்த கல்வி சான்றிதழ் தகவல் தொகுப்பின் நம்பகத்தன்மை, ரகசியம், உள்ளிட்டவற்றை என்.ஏ.டி. பராமரிக்க வேண்டும். இதற்கான பயிற்சிகளையும் சம்மந்தப்பட்ட வர்களுக்கு இந்த நிறுவனம் வழங்கும்.