பிரதமர் திரு நரேந்திர மோடி, ஓர் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்தார். காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தபோது, உடன் இறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான புகைப்படக் கலைஞர் கோபால் பிஷ்ட்டின் இறுதிச் சடங்கு. அப்போது அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. அந்த அழைத்தவர் வேறு யாருமில்லை. பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்.
“மோடி, எங்கே இருக்கிறீர்கள்.... ?” அடல்ஜி கேட்டார்.
அதற்கு மோடி, “ஓர் இறுதிச் சடங்கில் இருக்கிறேன்...” என்று பதிலளித்தார். “ அடடா, இறுதிச் சடங்கில் இருக்கும்போது, பேச முடியாதே...” என்று கூறிய பிரதமர் வாஜ்பாய், தனது வீட்டுக்கு வரும்படி மோடியை அழைத்தார்.
அதையடுத்து, நரேந்திர மோடி சந்தித்தபோது பிரதமர் வாஜ்பாய், “தில்லியில் ரொம்ப நாள் தங்கிவிட்டீர்கள். குஜராத்துக்குச் செல்லுங்கள்... ” என்றார்.
இதைச் சரியாகப் புரிந்துகொண்ட மோடி, பிரதமரின் முடிவு குறித்து வியப்படைந்தார். சட்டப் பேரவை உறுப்பினர் பொறுப்பில் இல்லாத நிலையில், மோடிக்கு இது மிகப் பெரிய பொறுப்பாக இருந்தது. ஆனால், பிரதமர் வலியுறுத்தும்போது யார் என்ன சொல்ல முடியும்...?
இது குறித்து நினைவுகூர்ந்த மோடி, “குஜராத்திற்கு பல ஆண்டுகளாகச் செல்லவில்லை. எனது கட்சி சகாக்களை அழைத்துப் பேசினேன். அவர்களிடம், நீங்கள் (கட்சி சகாக்கள்) அழைக்கிறீர்கள். ஆனால், எனக்கு வீடு இல்லை. நான் எங்கே செல்வேன்? குஜராத்திற்கு நான் நீண்டகாலமாகச் செல்லவில்லை என்றேன். ஆனால், அரசு விருந்தினர் விடுதியில் (சர்க்கியூட் ஹவுஸ்) அறைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினர். அதற்கு, நான் எம்.எல்.ஏ. அல்ல. எனவே, அதற்கான முழுக்கட்டணத்தையும் செலுத்துகிறேன் என்றேன்” என்றார்.
இப்படித்தான் குஜராத் முதலமைச்சராக மோடியின் ஆட்சிப் பணி தொடங்கியது. நான்கு முறை பதவி ஏற்று, நீண்டகாலம் தொடர்ந்து மாநில முதலமைச்சராகப் பணியாற்றிய பெருமை பெற்றார்.