மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, பாரத ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். ``நான் சார்ந்துள்ள கட்சியின் மீதான, அரசின் மீதான அல்லது என்மீதான தாக்குதல்கள் புரிந்து கொள்ளக் கூடியவை. ஆனால் ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களை அரசியலில் இழுக்கக் கூடாது. அவற்றின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்று பிரதமர் திரு மோடி கருத்து தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தில் ரிசர்வ் வங்கிக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும், அதற்கு நாம் ஆக்கபூர்வமாக பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களை மேலும் பலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ளது என்று திரு மோடி மேலும் கூறினார். ``நாங்கள் ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் செய்து நிதி பாலிசி கமிட்டியை உருவாக்கியுள்ளோம். இது நீண்டகாலம் நிலுவையில் இருந்தது. எங்கள் அரசு இதைச் செய்துள்ளது. இந்தக் கமிட்டியில் எந்த உறுப்பினரும் மத்திய அரசைச் சார்ந்தவர் இல்லை'' என்று மோடி கூறினார்.