2013ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அன்று பாட்னாவின் புகழ்பெற்ற காந்தி மைதானத்தைக் கூறு போட்ட வகையில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்காமல் இருந்திருந்தால் அதுவும் ஏனைய ஞாயிற்றுக்கிழமைகளைப் போலவேதான் கழிந்திருக்கும். இந்த மோசமான, துயரமிக்க சம்பவம் நிகழ்ந்த மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் அப்போது பி.ஜே.பி கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்த திரு. நரேந்திர மோடி பேசுவதாக இருந்தது.
மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் அந்த மைதானத்தை நோக்கி அலையலையாக வந்து குவிந்தபோதுதான் மைதானத்தின் அடித்தளப்பகுதியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக குண்டுகள் வெடிக்கத் துவங்கின.
திரு. நரேந்திர மோடி பாட்னா நகரத்தை வந்தடைந்தபோது அவருக்கு முன்னால் இரண்டு விதமான வாய்ப்புகள் இருந்தன. ஒன்று (அந்த மிகப் பெரும் மைதானத்தில் அப்போது நிலவியிருந்த பயத்தை மேலும் அதிகமாக்குவதைப் போல) பேரணியில் பேசாமல் குஜராத் மாநிலத்திற்குத் திரும்பிப் போவது; அல்லது திட்டமிட்டதைப் போல் அந்த மைதானத்திற்கு வந்து பேரணியில் உரை நிகழ்த்துவது.
அந்தப் பேரணியில் திரு. மோடி உரை நிகழ்த்தியது மட்டுமின்றி ஒருவரை எதிர்த்து மற்றொருவர் போராடுவதற்குப் பதிலாக இந்துக்களும் முஸ்லீம்களும் வறுமையை எதிர்த்துப் போராட ஒன்றிணைய வேண்டும் என்று மிகுந்த உணர்ச்சிகரமான வேண்டுகோளையும் அவர் அங்கே முன்வைத்தார். மேலும் யாருக்கும் எவ்விதமான இடையூறையும் ஏற்படுத்தாமல் ஒழுங்கு முறையுடன் அமைதியாக பேரணியிலிருந்து திரும்பிச் செல்லுமாறு அங்கு கூடியிருந்த பெருந்திரளினரை அவர் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார்.
திரு. மோடி பேசிக் கொண்டிருந்த மேடைக்குக் கீழே ஒரு வெடிகுண்டு இருந்தது பின்னர் தெரிய வந்தது.
இந்தப் பேரணி நடந்து முடிந்த சில வாரங்களுக்குப் பிறகு திரு மோடி குறிப்பிட்டார்.: “அந்தப் பேரணியில் ஏதாவதொரு விலங்கை அவிழ்த்து விட்டிருந்தாலும் கூட மிக அதிகமான அளவில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்பதை அமைப்பு ரீதியான நீண்ட கால அனுபவம் எனக்குக் கற்றுத் தந்திருந்தது. எனவே அங்கே வெடிகுண்டுகள் இருக்கின்றன என்றோ அல்லது அந்தப் பேரணியில் நான் பேசப்போவதில்லை என்றோ யாராவது அறிவித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். எனவே பேரணியில் பேசுவதற்காக மேடைக்குப் போவதில்லை என்ற கேள்வியே எனக்குள் எழவில்லை.”
இந்தச் சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்திற்குப் பிறகு திரு. மோடி மீண்டும் பாட்னா நகரத்திற்கு வந்தார். இந்தமுறை மைதானத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளால் தங்கள் உறவினர்களை இழந்த குடும்பங்களை சந்திக்கவே அவர் வந்திருந்தார்.
பாட்னா நகரின் ஹுங்கர் பேரணி திருப்புமுனையாகவே நினைவுகூரப்படுகிறது. குறிப்பாக மிகவும் மோசமானதொரு சூழ்நிலையில் உண்மையான தலைமை எப்படியிருக்க வேண்டும் என்பதை மிக அழகாக விளக்குவதாகவே அது இருந்தது. ஒருவரை ஒருவர் எதிர்த்து அல்ல; வறுமையை எதிர்த்தே போராட வேண்டும் என்ற அவரது செய்தியும்கூட கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் எதிரொலித்தன.