2016 ஆகஸ்ட் 30ஆம் தேதி குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் திரு. நரேந்திர மோடியின் எச்சரிக்கை உணர்வுதான் பல செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களின் உயிரைக் காப்பாற்றியது.

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியின் நீருக்கான பெரும் தேவையை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டமான சவுனி யோஜனா என்ற மிகப்பெரும் பாசனத் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியாகும் அது.  

பிரதமரும் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட இதர பிரமுகர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்ட பிறகு, அணையிலிருந்து நீர் வெளியேறுவதற்காக ஒரு பொத்தானை அழுத்துவதாக அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. நீர் வெளியேறி பாயவிருக்கும் கீழ்மட்டப் பகுதியில் ஒரு சிலர் நின்று கொண்டிருப்பதை திரு. மோடி பார்த்துவிட்டார். எத்தகைய அபாயமானதொரு நிலையில் தாங்கள் நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி சற்றும் அறியாதவர்களாக ஒளிப்பதிவாளர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் திரு. மோடி எழுந்து நின்று கைகளைத் தட்டி அவர்களை எச்சரித்து அங்கிருந்து வெளியேறுமாறு சைகை காட்டினார். திரு. மோடியின் இந்தச் செயல் சரியான நேரத்தில் அவர்களின் உயிரைக் காப்பாற்றியது.

அந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பின்பு செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியபோது பிரதமர் தனக்குப் புதுவாழ்வு கொடுத்ததாகத் தெரிவித்தார்.

திரு. மோடியின் இத்தகைய எச்சரிக்கை உணர்வு மீண்டும் மீண்டும் பாராட்டிற்குரிய ஒன்றாக இருந்தது.

2015 ஏப்ரல் 5ஆம் தேதியன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடந்த மாநில முதல்வர்கள், தலைமை நீதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்ட மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் சென்றிருந்தபோது, ஒரு புகைப்படக் கலைஞர் கீழே விழுந்து விட்டார். அவர் எழுந்து நிற்க கைகொடுத்தது வேறு யாரும் அல்ல, பிரதமர் திரு. நரேந்திர மோடிதான். இந்த சம்பவமும் கூட மிகவும் பேசப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது.