இந்தியாவை குப்பை இல்லாத நாடாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்ட தூய்மையான இந்தியா இயக்கம் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை இப்போது தொட்டுள்ளது.
வேறு யாருமல்ல; இந்தியாவின் பிரதமர்தான் 2015 ஆகஸ்ட் 15ஆம் நாள் செங்கோட்டையின் கொத்தளத்தில் நின்றபடி தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தும்போது தூய்மையைப் பற்றி முதன்முறையாகப் பேசினார். அதே ஆண்டு அக்டோபர் 2ஆம் நாளன்று தானே துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சியில் பிரதமர் முன்னணியில் நின்றார். தூய்மையைப் பற்றி அவர் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருந்தார். இதன் மூலம் மக்களின் பேச்சுவழக்கில் அதை அவர் முன்னுக்குக் கொண்டு வந்தார். அதிகாரபூர்வமான அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது அரசியல் சார்ந்த பேரணியாக இருந்தாலும் சரி, தூய்மை என்ற விஷயமானது அவரால் தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டுக் கொண்டே வந்தது.
தூய்மையான இந்தியா இயக்கத்திற்கு இதுவரை கண்டிராத உற்சாகத்துடன் அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தருவதில் எவ்வித வியப்பும் இல்லை. ஊடகங்களும் கூட இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்தன.
தூய்மையான இந்தியா இயக்கமும், பிரதமரின் வார்த்தைகளும் நாட்டின் மீது எத்தகைய செல்வாக்கை செலுத்தின என்பதற்கு உதாரணமாக சந்திரகாந்த் குல்கர்னியின் செயல்களையே குறிப்பிடலாம்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியரும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருமான சந்திரகாந்த் குல்கர்னி, மாதந்தோறும் ரூ. 16,000 மட்டுமே ஓய்வூதியமாகப் பெற்று வருபவர். தூய்மை இந்தியா இயக்கத்தினால் பெரிதும் கவரப்பட்ட அவர், இந்த நோக்கத்திற்காக மாதந்தோறும் தன்னுடைய பங்காக ரூ. 5,000-ஐ வழங்குவது என முடிவு செய்தார். அதுவும் கூட ஒரேயொரு முறையல்ல; வரவிருக்கும் மாதங்களின் தேதியொன்றை கொண்டதாக முன்தேதியிட்ட 52 காசோலைகள் வடிவத்தில்!
ஓய்வூதியம் பெறும் ஒருவர் தனது வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை தூய்மையான இந்தியாவிற்காகத் தருகிறார் என்னும்போது மக்களின் மனதில் பிரதமரின் வார்த்தைகள் எத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன என்பதையும், முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்கு நாட்டை எடுத்துச் செல்வதில் ஒருங்கிணைந்த பகுதியாகவே தாங்களும் இருக்கிறோம் என்றே குடிமக்கள் உணர்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுவதாகவே இது அமைகிறது. ‘தூய்மையான இந்தியா’ வை உருவாக்க மக்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது குறித்து இது போன்ற எண்ணற்ற சம்பவங்களை திரு. மோடி தன் பங்கிற்கு பகிர்ந்து வந்திருக்கிறார். அவரது ‘மன் கீ பாத்’ வானொலி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தூய்மையை அடிப்படையாகக் கொண்ட குறைந்தது ஏதாவதொரு சம்பவத்தைக் குறிப்பிடுவதாக இருக்கும்.
பிரதமர் என்ற வகையில், திரு. மோடி அவர்கள் தூய்மைக்கான மக்கள் இயக்கமொன்றை உருவாக்குவதில் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கும் அது நன்மை தருவதாகவே இருக்கும்.